பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் “வீரமணி ஒரு விமர்சனம்” நூலாய்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் “வீரமணி ஒரு விமர்சனம்” நூலாய்வு!

அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சோலை அவர்களின் ‘’வீரமணி ஒரு விமர்சனம்“ என்ற நூலின் ஆய்வு  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்  47ஆவது இணைய வழிக் கூட்டமாக  26. 5. 2003 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

செயற்குழு உறுப்பினர் இரா.சிவகுமார் வரவேற்பு ரையாற்றினார்.

எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் சுப.முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.

எழுத்தாளர் மன்றத் தலைவர் வா. நேரு முன்னிலை வகித்தார். 

அன்று நிழலாக இன்று குரலாக!

“நமது தலைவர் ஆசிரியர் அவர்களோடு வேனில் பயணம் செய்யும் அனுபவம் இனிமையானது. பல்வேறு செய்திகளை அவர் அப்போது நம்மிடம் குறிப்பிடுவார். ஒருமுறை நானும் அந்த அனுபவம் பெற்றேன். இந்த இடத்தில் தான் சில பார்ப்பனர்கள் தன்னை சாபம் விட்டதாக ஓரிடத்தில் என்னிடம் கூறினார். அதெல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாது. தவிர,இன்றைய அரசாங்கத்திற்கும், இனி பொறுப்பேற்கும் அரசுகளுக்கும் கூட சூழ்ச்சிகளையும் திரிபுகளையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில் இருப்பவர் நமது  தலைவர் ஆசிரியர் அவர்கள். தவறுகளைச் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில் சரியான கருத்துகளை பாராட்டுகிற நேர்மைத் தன்மையை கொண்டிருப்பார் என்பதற்கு ‘பிராமின்ஸ் இன் த  தமிழ் கன்ட்ரி’ என்ற நூலில்  உண்மையான வரலாற்றை எழுதிய  பார்ப்பனராகிய சுப்ரமணியன் அவர்களைப் பாராட்டி தலைவர் கொடுத்த கடிதத்தையும், அதைத்  தூங்கும் போது தலையணையிலே  வைத்துக்கொண்டு அவர் படுத்துக் கொண்டிருந்ததையும் எடுத்துக்காட்டியும், இந்த நூலாசிரியர் சோலை அவர்கள் நம் தலைவர் ஆசிரியர், “அன்றைக்கு பெரியாரின் நிழலாக இருந்தார் இன்றைக்கு பெரியாரின் குரலாக இருக்கிறார்” எனச் சிறப்பாகக் குறிப்பிட்டதைக்  கோடிட்டுக் காட்டியும்  மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை தலைமையுரை வழங்கினார்.

முனைவர் பட்ட ஆய்வுகளுக்குப் பொருளாக ஆசிரியர் வாழ்வு!

தொடர்ந்து கழகப் பேச்சாளர் என்.ஆர்.எஸ். பிராட்லா  நூலினை ஆய்வு செய்து பின்வருமாறு உரையாற்றினார்.

“விமர்சனம் என்பது நேர்- எதிர் என்ற இரு முனைகளை யும் அலசி பேசுவது (Positive thoughts and Negative thoughts)  என்பதாகத்தான் இருக்க முடியும்.

ஆனால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய பண்பு நலன்கள் முதல் சாதனைகள் வரை அனைத்தையும் பட்டியலிட்ட  இந்தப் புத்தகத்தை விமர்சனம் என்று சொல் வதை விட ஆய்வு நூல் என்று சொல்லலாம்.

“1962 ஆம் ஆண்டு பெரியாரை பத்திரிகையாளர் என்ற முறையில் சந்திக்க வந்த போதுதான் முதன் முதலில் ஆசிரியரை சந்தித்தேன். அவரைப் பற்றி எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. காலம் கருதி காத்திருந்தேன்” என்று எழுத்தாளர் சோலை சொல்கிறார். அவரின் முதல் சந்திப்பில் இருந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல் இந்த நூல் வெளியிடுகிறார்.

அவர் அய்ந்து முதல்வர்களோடு பழகி இருந்தாலும் கூட ஒரு அரசியல் தலைவரல்லாமல் ஒரு சமுதாய தலைவரைப் பற்றி ஒரு நூல் எழுதும் அளவிற்கு இத்தனை ஆண்டுகளாக தம்முடைய சிந்தனையைத் தேக்கி வைத்திருக்கிறார் என்பதை அடிக்கோடிட்டு பார்க்க வேண்டும்.

இப்படி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பொதுநிலையில் இருந்து பார்க்கக்கூடிய ஒருவர் வியந்து பார்த்து எழுதிய நூல் இதுவாகும்.

ஒரு பத்திரிகையாளர் சக பத்ரிகையாளரைப் பாராட்டுவது சாதாரணமானதல்ல... ஆனால் “துவண்டு விட்ட விடுத லையைத் தூக்கி நிறுத்திய பேனா மன்னன்” என்று சோலை அவர்கள் ஆசிரியரைக் பாராட்டுகிறார்.

கொள்கையில் சமரசம் காணாத சமூகப் போராளி என்கிறார். அதோடு 1986 இல் எம்.ஃபில் பட்டத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘Veeramani as a social Reformer’  என்ற பொருளில் எஸ்.குணசுந்தரி மற்றும் ‘K.Veeramani a study’ எனும் பொருளில் என்.ராஜேந்திரன்  இருவரும் ஆய்வு செய்தனர் என்ற குறிப்பையும் இதில் நூலாசிரியர் கொடுக் கிறார்.

இப்படி ஒரு அரசியல் தலைவர் அல்லாத ஒரு சமுதாயத் தலைவரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நம்முடைய தலைவரின் உழைப்பும் தொண்டு இருக்கிறது என்று சொல்லும் பொழுது அவருக்குத் தொண்டர்களாக இருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.

தலைவரைப் பற்றி பேசுவது நமக்கு ஒரு புத்தாக்கத்தை- புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் நான் இந்த நூலை தேர்ந்தெடுத்தேன்” என்று நூலறிமுகம் செய்தார்.

எழுத்தாளர் சோலை அவர்கள் எடுத்துக்காட்டும் நூல்கள்!

“கி.வீரமணி அவர்கள் பத்து வயதில் மேடை ஏறி 11 வயதில் திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கி 12 வயதில் கூட்டத்திற்கு தலைமை ஏற்று 13 வயதில் மாநாட்டில் கொடியேற்றி 14 வயதில் பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர்” என்று தன் நூலில் குறிப்பிடுகிறார். இப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி போல வளர்ந்து வந்த நம் தலைவரை ஒரு பிறவித் தலைவர் என்று சொல்லலாம். 

 அதோடு ‘வாழ்வியல் சிந்தனைகள்’, ‘அய்யாவின் அடிச்சுவட்டில்,’ ‘பெரியாரியல்’ உள்ளிட்ட நூல்களைக் குறித்து இந்நூலில் பேசுகிறார்...  நூற்றுக்கணக்கான நூல்களை ஆசிரியர் அவர்கள் எழுதியிருக்கிறார், எழுதிக் கொண்டிருக்கிறார் எனினும் என்றென்றும் இந்த திராவிட இயக்க வரலாற்றில் நிலைத்திருக்கிற ஒரு சில நூல்களை எழுத்தாளர் சோலை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அவை,

இராமாயண ஆய்வுச் சொற்பொழிவுகள்

கீதையின் மறுபக்கம்

சாய்பாபா மோசடி

 சங்கராச்சாரி யார்?  

சங்கர்ராமன் கொலை வழக்கு ஏன்?  எதற்கு? எப்படி?

 மேலும் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்“, “உண்மை வரலாறு” ஆகியவை.

பொதுவாக - ஆசிரியர் பேசக்கூடிய மேடை என்பது மேடையா, நூலகமா என்று சொல்லக்கூடிய அளவுக்கு நூல்கள் நிறைந்திருக்கும். ஆதாரத்தோடு பேசக்கூடியவர். திராவிட இயக்கத் தலைவர்களில் எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு இது. ஆகவே  இந்நூல்கள் வழியாக புரட்டுகளை ஆதாரத்தோடு மறுக்கிறார்.

வரலாற்றுத் திரிபுகளும் திருத்தங்களும்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் தஞ்சை பெரிய கோயிலை அரசின் சின்னமாக ஏற்றுக் கொண்டது என்ற ராமமூர்த்தியின் கருத்து தவறு. குமாரசாமி ராசா முதல் அமைச்சராக இருந்தபோது வெள்ளைக்காரன் வைத்த சின்னத்தை அகற்றிவிட்டு கோவில் கோபுரத்தை அரசின் சின்னமாக அங்கீகரித்தார். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அல்ல அது சிறீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் என்கிறார் ஆசிரியர்.

 நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சர் பொப்பிலி அரசர் என்று ராமமூர்த்தி குறிப்பிடுகிறார். அவரில்லை சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சர் அடுத்து வந்தவர் பானகல் அரசர் என்று ஆசிரியர் திருத்தம் செய்கிறார் என்று நூலாசிரியர் சோலை குறிப்பிடுகிறார்.

“1952இல் கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது அந்த கட்சியின் வற்புறுத்தலின் பேரில் தான் சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது எவ்வளவு ஒரு பொய்யான செய்தி. ராஜாஜி காலத்திலும், காமராஜர் காலத்திலும் அந்தச் சட்டம் நிறைவேற்றவில்லை 1967 அண்ணா முதலமைச்சராக இருக்கும்பொழுது தான் சட்டம் நிறைவேற்றப்பட்டது” என்று ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். “இவற்றை எளிதாக விட முடியாது. இது சாதாரண செய்தி இல்லை. 70 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் கத்தியின்றி நடந்த புரட்சியால் ஏற்பட்ட விளைவு இந்தச் சட்டம். நிறைவேற்றப்பட்ட போது அதன் வரைவு, மாதிரியை ஆசிரியர் தான் அண்ணாவிடம் கொண்டு போய் கொடுத்தார் என்பதை நாம் அறிவோம். அந்த சட்டம் உருவாக்கப்படும் போது உடனிருந்து பணியாற்றிய ஒருவர் எப்படி அதை கடந்து போக முடியும்? அதனால் ஆணித் தரமாக மறுப்பெழுதி இருக்கிறார்” என்று அய்யா சோலை எடுத்துக்காட்டுகிறார்.

எனவே தான் அவரின் படைப்புகளை ஆண்டு வாரியாக தொகுத்தால் தமிழ்நாட்டின் திராவிட இயக்க வரலாறும் அதன் பின்னணியும் விளங்கும் என்று சோலை அவர்கள் குறிப்பிடுகிறார்.

உறவின் வாழ்த்தல்ல துறவியின் வாழ்த்து!

உங்களுக்குப் பிறகு யார் என்று கேள்வி கேட்டபோது எனக்கு பிறகு யாரும் இல்லை என்று நபிகள் சொன்னாராம். எனக்குப் பிறகு யார் என்று கேட்பீர்களானால் எனக்குப் பிறகு ஒரு அறிவுள்ள, உணர்வுள்ள, தைரியமிக்க யாரும் இந்த இயக்கத்திற்கு பொறுப்பேற்று நடத்தலாம் என்று பெரியார் சொன்னார். எனக்குப் பிறகு என் கொள்கைகள் வழிநடத் தலாம் என்று சொன்னதைத் தாண்டி இப்படியும் சொன்னார் பெரியார்.

பெரியாருக்குப் பிறகு அறிவார்ந்த உணர்வார்ந்த மிகப்பெரிய துணிச்சலுக்கு சொந்தக்காரரான ஆசிரியர் நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று சோலை அவர்கள் மிக அழகாக ஆதாரத்தோடு இந்த நூலில் சுட்டிக்காட்டுகிறார். 

1978 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ஆயுட்கால செயலாளராக ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமது ‘தமிழகம்‘ இதழில் இப்படி எழுதினார்.

“ அன்பர் திரு. வீரமணி ஆண்டில் இளையர் ஆயினும் பல ஆண்டுகள் தந்தை பெரியாரிடத்தும், அன்னை மணியம் மையார் இடத்துமிருந்தும் பணி செய்த வகையில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இயல்பாக அவருக்கு இருக்கும் நுண்ணறிவோடு அனுபவமும் இணைந்து பொலிவுறுகிறது. எதிர்கால கணிப்புப் பற்றிய அறிவுத்திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுவதற்கு இனிய பண்பாளர். இன நலம் இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர். சிறந்த பேச்சாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளர். இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும் திறன் உடையவர். இனிய நண்பர் வீரமணி அவர்களை திராவிடர் கழகம் பொதுச்செயலாளராக பெற்றுள்ள இந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு. இந்தத் தலைமுறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகிறோம்” என்று எழுதுகிறார் இதை எழுத்தாளர் சோலை அவர்கள் குறிப்பிட்டு உறவின் வாழ்த்தை விட துறவியின் வாழ்த்து பெரிதல்லவா என்கிறார்.

இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி. பொதுநிலையில் இருக்கக்கூடியவரை விட எதிர் நிலையில் இருப்பவரின் வாழ்த்து சாதாரணமல்ல.

பெரியாரின் பார்வையே என் பார்வை!

“எனக்கென்று எதுவும் பார்வையில்லை பெரியார் எப்படிப் பேசினாரோ எப்படி எழுதினாரோ எப்படி ஒரு செயலை அணுகினாரோ அப்படிப் பார்த்தது கேட்டது படித்துப் பார்த்தது அதை வைத்து தான் நான் எதையும் செய்வேன். எனக்கு சொந்த புத்தி எதுவும் இல்லை அய்யாவுக்கும் எனக்கும் 50 வயது வித்தியாசம் இருக்கிறது. 50 வயது வித்தியாசம் இருக்கிற என்னை அய்யா ஏன் தேர்ந்தெடுத்தார்? நமக்குப் பிறகு இந்த இயக்கம் இன்னும் வேகமாக செல்ல வேண்டும் என்றால் இளைஞர்களால் தான் வேகமாக செயல்படுத்திக் கொண்டு போக முடியும் என்பதால் என்னிடம் ஒப்படைத்திருப்பார். அப்படி என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குப் பிறகும் பல்லாண்டு காலம் இந்த இயக்கம் இந்த மண்ணுக்குத் தேவை என்பதை கருதி நான் பணியாற்ற வேண்டுமல்லவா?” என்று எந்த நேரமும் நம் தமிழர்தலைவர் அதே சிந்தனையாக இருக்கக்கூடியவர். இந்த இயக்கம் தலைமுறை இடைவெளி இல்லாத இயக்கம் என்று சொல்லக்கூடியவர். “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். அவர் அபூர்வப் பிறவி. கணிப்பொறியும் அவரிடம் தோற்று விடும். எல்லாவற்றையும் தாண்டி அற்புதமான மனிதர்.

கோபப்படுவார் அதுவும் இயக்கத்திற்காகத்தான். தனிப்பட்ட முறையில் யாரிடமும் கோபப்படமாட்டார். அப்படியே கோபப்பட்டாலும் அதில் நியாயம் இருக்கும். இவ்வளவு பண்புகள் நிறைந்த அபூர்வமான தலைவரை நாம் தலைவராக பெற்றிருக்கிறோம்“ என்று தான் அருகில் இருந்து காணும் தலைவரின் பண்பு நலன்களையும் எடுத்துச் சொல்லி என். ஆர். எஸ். பிராட்லா அவர்கள் உரையினை நிறைவு செய்தார். 

நிறைவாக  

செயற்குழு உறுப்பினர் இரா.அழகுபாண்டி  நன்றி கூறினார். நிகழ்வில்    தோழர்கள் தகடூர் தமிழ்ச்செல்வி, முனை வர் திவாகரன், துரைராஜ், செல்லக்கிருட்டினன், சா.தாமோதரன், மணிமேகலை, வேண்மாள், அவ்வை, இசை இன்பன், பானுரேகா, இறைவி, மாரி கருணாநிதி உள்ளிடட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment