''ஊசிமிளகாய்'' : தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை ஆட்டி வைக்கும் ''பெரியார்'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

''ஊசிமிளகாய்'' : தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை ஆட்டி வைக்கும் ''பெரியார்''

தமிழ்நாட்டு பா.ஜ.க. என்ற ‘மிஸ்டு கால்' கட்சியே - இப்போது பல குழுக்கள் - தனித் தனி கோஷ்டிகளாக உள்ள - ‘நோட்டா'வோடு போட்டி போடும் கட்சியின் அலங்கோலம் வெளிப்படை!

‘ஆகாசத் தாமரை' என்ற விஷத்தாமரை முளை கிளம்புவதற்கு முன்னாலேயே அங்கே அண்ணாமலை என்ற பிற்படுத்தப்பட்டவர் முதுகில் பூணூல் இல்லையே என்பதை பூணூல் திருமேனிகள் பெரிதும் கூடிப் பேசி, ‘‘பச்சைப் பார்ப்பன பக்கா பா.ஜ.க. பிரிவு'' ஒன்றை அமைக்க தீவிரமாக ஆலோசனை அமைத்து, ‘அண்ணாமலைக்கு அரோகரா' பாட தனி ஆவர்த்தனம் - ஆலாபரணம் எல்லாம் நடத்து கிறார்களாம்.

பூணூல் மலரில் அனுதினமும் ஆசிரியர் தயாரிக்கும் கடிதம் ஒன்று ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிரான நிந்தாஸ் துதியாக வெளிவரும்.

இன்றைய பூணூல் மலரில் ஒரு அவாள் கடிதக் கணை அண்ணாமலையைப்பற்றி எஸ்.கண்ணம்மா என்ற பெயரில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்:

எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, ‘இ - மெயில்’ கடிதம்: ‘தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர்’ என, நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். மேலும், அண்ணாமலையை விட, தான் புகழ் வாய்ந்த நபர் என்றும் தெரிவித்துள்ளார். அந்த, எஸ்.வி.சேகரிடம் சில கேள்விகள்....

பிராமணராகிய நீங்கள், பிராமணர்களுக்காக என்ன செய்தீர்கள்?

தமிழகத்தில் பிராமணர்கள், உளவியல்ரீதியாக மிகவும் நசுக்கப்படுகின்றனர்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பிராமணர்களை திருடர்கள் என்று கூறினார்... அதை நீங்கள் கண்டித்தீர்களா? ஆனால், ‘மோடி என்ற பெயருடையவர்கள் எல்லாம் திருடர்கள்...’ என்று கூறியதால், மோடி சமுதாயத்தை சேர்ந்தவர் தொடுத்த வழக்கில், ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது

‘சிதம்பரத்தில், தீட்சிதர்கள் குடும்பத்து சிறுமியர்களிடம், தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது’ என, கவர்னர் ரவியே புகார் கூறினார்; தேசிய குழந்தைகள் நல ஆணையமும் அதை உறுதி செய்தது. அதுபற்றி நீங்கள் வாய் திறந்தீர்களா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு, மத்திய அரசு, 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தது; தமிழகத்தில், அது அமலாகவில்லை. அந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால், ஏழை பிராமணர்கள் பயனடைவர். அதை நடைமுறைப்படுத்த, ஸ்டாலின் அரசுக்கு அழுத்தம் கொடுத்தீர்களா?

பிராமணர்களை தி.மு.க.,வினர் வசைபாடுகின்றனர்; வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், பிராமணர்களை ரவுடி என்று கூறினார்; அதற்கு கண்டனம் தெரிவித்தீர்களா?

பாடகி சின்மயி உட்பட 19 பெண்கள், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தனர். அவர் மீது வழக்கு போடும்படி வாய் திறந்தீர்களா?

உங்கள் அளவு புகழ் இல்லாத சாதாரண மனிதர்களான நரசிம்மன், ரமேஷ் போன்றோர், ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஊழல்களை எடுத்துச் சொல்லி, தனி மனிதர் களாக போராடுகின்றனர்; நரசிம்மன் மீது நீதிமன்றத்திற்கு வெளியே, ரவுடிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அதற்கு ஏதாவது கண்டனத்தை பதிவு செய்தீர்களா?

இப்போது, பிராமணர்களுக்கு எதிரானவர், அண்ணா மலை என்று கூறுகிறீர்கள். இதைப் பார்த்தால், ‘ஆடு நனைகிறதேஎன்று, ஓநாய் அழுத கதை’ தான் ஞாபகம் வருகிறது. உங்கள் புகழை வைத்துக் கொண்டு, உங்கள் சமுதாய மக்களுக்கு முதலில் உதவுங்கள்; பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம்.

என்பதுதான் ‘தினமலர்' கடிதம்.

தினசரி பத்திரிகைகள், பா.ஜ.க. ஆதரவு டி.வி.,க்களின் விளம்பர வெளிச்சத்தில் குளிர்காய்ந்து வரும் அண்ணா மலைக்கு மனதுக்குள் பெரியார் ஏன் எங்கும் எப்போதும் தேவைப்படுகிறார் என்பது இப்போது புரியத் தொடங்கும்!

தனக்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமை நியமனம் கிடைத்ததே, பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் மனதில் கொண்டே போடப்பட்ட நியமனம் - இல்லையேல், எவ்வளவு எட்டி எட்டி முட்டினாலும் ‘எச்'சிகளுக்கு எப்போதும் எதுவும் சாரணர் கமிட்டி உறுப்பினர் பதவிகூட கிட்டாது - எவ்வளவு தூரம் ஓங்கி குரைத்தாலும்கூட - என்பது தமிழ்நாட்டு மண்வளம் புரிந்தோருக்கு வகையாகத் தெரியுமே!

இவருக்குமுன் தமிழிசைக்கு தலைமை பதவி கிடைத்தது - (இவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புக்கும் தொலைதூரம் என்றாலும்).

முன்பு சந்திரகுமார் என்ற பிற்படுத்தப்பட்டோர் அதற்கு அடுத்து கடலூரில் ஒரு ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த டாக்டர்   (கிருபாநிதி), இலட்சுமணன் இடையில், அதற்கடுத்து குமரி ராதாகிருஷ்ணன், முருகன் என்று எல்லாம் மற்ற வாளுக்கே!

‘அவாளுக்கு' அந்த அம்சம் இல்லை என்று தமிழ்நாட்டு அரசியல் ஜோஸ்யர்கள் அருமையாகக் கணித்துவிட்டார்கள் போலும்!

எங்கும் நிறைந்துள்ளார் பெரியார்!

என்றும் தேவைப்படுகிறார் பெரியார்!! 

புரிகிறதா?

No comments:

Post a Comment