பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

ஒரே செய்தி இரு ஏடுகளில் - முரண்பாடுகள் ஏன்?

தினத்தந்தி செய்தி 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய சிறீ வரதராஜ பெருமாள்.

வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ விழாவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததால், சாமி சுமந்து செல்லும் கோடியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீதி உலாவில் பாதியிலேயே திரும்பிய வரதராஜ பெருமாள்.

அத்திவரதர் புகழ்பெற்ற சிறீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி மாநகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை விழா அதிகாலை நாலு மணி அளவில் துவங்கி மாலை 2 மணிக்கு நிறைவு பெற்றது.

திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சாமி வீதி உலா சென்றதால் அதனை சுமந்து செல்லும் ஊழியர்கள் என அழைக்கப்படும் கோடியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

திருவீதி விழாவில் சாமி தூக்கும் ஊழியர்கள் சோர்வு காரணமாக சாமி அதிக இடங்களில் நிறுத்தி ஓய்வெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திடீர் சூறாவளி காற்று மழை காரணமாக இரவு 9 மணி வரை சாமி திருக்கோயில் வளாகத்தில் இருந்தது.

மழை நின்ற பின் வீதி உலா சென்று அதிகாலை மீண்டும் திருக்கோயிலை அடைந்தது. அதன்பின் ஓய்வெடுத்த சாமி சுமந்து செல்லும் ஊழியர்கள் 3 மணி நேர இடைவெளிக்குப்பின் மீண்டும் அழைக்கப் பட்டதால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால் சாமி செல்லும் பாதையை குறைவான தூரம் மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டும் அதற்குரிய செயல்கள் ஏதும் எடுக்காததால் ஆங்காங்கே சிறிது சலசலப்பு காலையில் நாக வாகன புறப்பாட்டின் போது நடைபெற்றது.

இறுதியாக மூங்கில் மண்டபம் வரும் நிலையில் ஊழியர்கள் இதற்கு மேல் தங்களால் சாமி தூக்கிச் செல்ல இயலாது என தெரிவித்து பாதியிலேயே மீண்டும் திருக்கோயில் நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதியில் சாமி ஊர்வலம் திரும்பியதால் மற்ற பகுதியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தும் - அதற்குரிய காரணத்தை கேட்டு அறிந்த நிலையில் அவர்களுக்கும் ஓய்வு அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டதால் எவ்வித சர்ச்சைகளும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மோற்சவ விழாவில் சாமி சுமக்க சுமார் 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்கள் என்பதும், சுழற்சி முறையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.

(‘தினத்தந்தி’ - காஞ்சிபுரம் பதிப்பு - 4.6.2023)

தினமலர் செய்தி 

காஞ்சி வரதராஜ பெருமாள் 

சேஷ வாகனத்தில் வீதியுலா 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் இரவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சுவாமி தாமதமாக இரவில் கோவிலை சென்றடைந்தார். நேற்று, காஞ்சி வரதராஜ பெருமாள், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, காலை 7:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டார்.

வழக்கமாக காலை 5:00 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு விடும். நேற்று காலை 7:30 மணிக்கு புறப்பட்டதால் பெரிய காஞ்சிபுரம் நான்கு ராஜவீதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. சுவாமி மீண்டும் கோவிலை சென்றடைய நேரமாகும் என்பதால், மூங்கில் மண்டபம் வரை சென்று, கோவிலுக்கு சுவாமி திரும்பி செல்ல நேர்ந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காந்தி சாலை வழியாக சுவாமி திரும்பி செல்லும் போது சில பக்தர்கள் ஏன், பெரிய காஞ்சிபுரம் செல்லவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கான காரணம் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின், காலை 11:00 மணிக்கு பெருமாள் கோவிலை சென்றடைந்தார். நேற்று இரவு, சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

(‘தினமலர்’ - 4.6.2023 - செய்தி)

ஒரே செய்தி - ‘தினத்தந்தி’யில் ஒரு விதமாகவும் ‘தினமலரில்’ வேறொரு விதமாகவும் வருவது ஏன்?

சாமி தூக்குபவர்களும் மனிதர்கள்தானே? எத்தனை மணி நேரம் சுமப்பார்கள் - கடவுள் பொம்மையை மட்டுமா? அர்ச்சகப் பார்ப்பனர்களையும்கூட சேர்த்து சுமக்கும் கொடுமையை என்ன சொல்ல!

இது மனித உரிமைகள் ஆணையத்தின் கீழ் வராதா? பல மணி நேரம் சுமந்து சென்றதால்தான், தொழிலாளிகள் போர்க்கொடி தூக்கியதால் சாமி ஊர்வலத்தின் தூரம் குறைக்கப்பட்டது என்ற செய்தியை ‘தினமலர்’ திரிநூல் எவ்வளவு சாமர்த்தியமாக மறைக்கிறது.

அதே நேரத்தில் நடந்ததை நடந்தவிதமாக அப்படியே ‘தினத்தந்தி’ வெளியிட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் ஆரியர் - திராவிடர் பார்வை என்பது!

No comments:

Post a Comment