குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

 கடைசிக் கூட்டத்தில் கூட "உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே" என்றுதான் பேசினார்!

துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெரியாரின் உள்ளக்கிடக்கையை படம் பிடித்துக் காட்டினார்

தென்காசி, ஜூன் 30, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளில் 8 வகுப்புகள் நடைபெற்றன. துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலே இருக்கும் தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் பாடம் எடுத்தனர்.

வரலாற்று சாதனையாக குற்றாலத்தில் 44 ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை, குற்றாலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பெற்று, தற்போது சில ஆண்டுகளாக தேர்வுநிலை பேரூராட்சியாக மாறியிருக்கும் குற்றாலத்திலுள்ள வீகேயென் மாளிகை அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் இரண்டாம் நாளில், முதல் வகுப்பாக ’திராவிடர் கழக வரலாறு’ எனும் தலைப்பில் துணைத்தலைவர் கவிஞர் கலி,பூங்குன்றன், 'திராவிடர் இனத்தோற்றமும் நாகரீக வளர்ச்சியும்' (சிந்துவெளி - ஆதிச்சநல்லூர் - சிவகளை - கீழடி) எனும் தலைப்பில், இரண்டாம் வகுப்பில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, 'தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்' எனும் தலைப்பில் மூன்றாம் வகுப்பில் முனைவர் மு.சு.கண்மணி, 'பெரியாரின் இன்றைய தேவை என்ன?' எனும் தலைப்பில், கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நான்காம் வகுப்பில், 'பாசிச பா.ஜ.கவின் அவலங்கள்' எனும் தலைப்பில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அய்ந்தாம் வகுப்பில், 'தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்' எனும் தலைப்பில் பேராசிரியர், முனைவர் திருநீலகண்டன் ஆறாம் வகுப்பில், 'சமூக வலை தளங்களில் நமது பங்கு' எனும் தலைப்பில் மாநில தகவல் தொழில்நுட்பக்குழு ஒருங்கிணைப் பாளர் வி.சி.வில்வம் ஏழாம் வகுப்பில், 'மருத்துவமும் மூட நம்பிக்கையும்' எனும் தலைப்பில் பெரியார் மருத்துவக்குழுமத் தலைவர் மருத்துவர் கவுதமன் எட்டாம் வகுப்பில் பாடம் நடத்தினர்.

இறுதியாக ஒரு மணி நேரமாக சுருக்கப்பட்ட பெரியார் திரைப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வில் 10, 12 ஆம் வகுப்புகள் உள்பட கல்லூரியில் பயிலும் இருபால் மாணவர்கள் 83 பேர் பங்கேற்றிருந்தனர். இதுவன்றி பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

பெரும்பாலான மாணவர்கள் பயிற்சிக்கு புதியவர்கள் என்பதால் முதல் நாளிலேயே பயிற்சிப்பட்டறை ஒருங் கிணைப்பாளரும், கழக மாநில ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் முதல் நாளிலேயே "பயிற்சி வகுப்புகளுக்கான ஒழுக்க விதிகளை, எங்களுக்கு வேலை வைக்காமலேயே நீங்களாகவே சுயமாகக் கடைப்பிடிக்க வேண் டும்" என்று பயிற்சி மாணவர்களுக்கு அறிவுறுத்தி யிருந்தார். மாணவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாததால், இந்த பயிற்சி வகுப்பின் அருமையை, பெருமையை சுட்டிக்காட்டி, பயிற்சி வகுப்பின் ஒழுக்க விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். 

பொதுக்குழு உறுப்பினர் கீழப்பாவூர் அய்.இராமச்சந்திரன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் இனியன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் கே.டி.சி. குருசாமி, தென்காசி மாவட்டச் செயலாளர் முருகன், தூத்துக்குடி கழகக் காப்பாளர் மா. பால்ராசேந்திரம், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன் ஆகியோர் பயிற்சிப்ப ட்டறையின் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபாட்டோடு செயலாற்றினர்.

கழக துணைத் தலைவர் உரை

'திராவிடர் கழக வரலாறு' எனும் தலைப்பில் கவிஞர் பேசியபோது, இயல்பாகவே பெரியாருக்கு இருந்த ஜாதி ஒழிப்பு உணர்வை 1917 இல் அவர் ஈரோடு நகர் மன்றத்தலைவராக இருந்தபோது, ’கொங்கப்பறைத் தெரு’ என்றிருந்ததை ’திருவள்ளுவர் தெரு’ என்று மாற்றிய நிகழ்வின் மூலம் சுட்டிக்காட்டினார். 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டத்தில் சிறையில் இருந்த பெரியாருக்கு நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பு தேடி வந்த அரிய வரலாற்றுத் தகவலை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

1944 இல் நடைபெற்ற, நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத்தை; திராவிடர் பேரியக்கத்தின் வரலாற்றுத் திருப்புமுனை சம்பவத்தை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத்தின் மய்யக்கொள்கைகளை வரிசைப்படுத்தினார்.

ஜாதி ஒழிப்பில், பெண்ணுரிமைப் போராட்டத்தில், சமூகநீதி பங்களிப்பில் திராவிடர் கழகம் எத்தகைய பங்களிப்பை வழங்கியது என்பதை சுருக்கமாகச் சொல்லிக்கொடுத்தார். இறுதியில், பெரியார் தனது இறுதிப்பேருரையில், “உங் களையெல்லாம் சூத்திரனாக விட்டு விட்டுச் சாகிறேனே” என்று நெக்குரு கியதை உணர்ச்சிபூர்வமாக சொன்னார்.

செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு திராவிட இனத்தின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும், இந்தியாவிறகு தொடக்கத்திலேயே வந்தவர்கள் திராவி டர்கள் என்பதையும் தரவுகளோடு எண் பித்து, திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்பதை நிறுவினார். 

"இந்தியாவின் வரலாறு கங்கைக் கரையிலிருந்து எழுதாமல் காவிரிக்கரையிலிருந்து எழுதப்பட வேண்டும்" என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, இன்றைக்கு அதையே தாமிரபரணியிலிருந்து எழுதப்பட வேண் டும் என்பதைச் சேர்த்துச் சொன்னார். 

மெசபடோமியா, எகிப்து நாகரிகத் திற்கு அடுத்து சிறந்த நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என்பதை அகழ்வாய்வுகள் மூலம் எண்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, சிந்துவெளி நாகரிகம் எப்படி கீழடியோடு பொருந்திப்போகிறது என்ப தையும், இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ், பேசியவர்கள் திராவிடர்கள் என்பதையும், 1902 முதல், 1928 வரை இந்தியாவில் தொல்லியல் கழகத் தலை வராக இருந்த ஜான் மார்சல், தொல்லியலாளர் அய்ராவதம் மகாதேவன், அம்பேத்கர் ஆகியோரின் ஆய்வுகளைக் குறிப்பிட்டும் தன்னுடைய வகுப்பை நிறைவு செய்தார். 

முனைவர் மு.சு.கண்மணி ”கற்பு என்ற வலையிலிருந்து பெண் கடவுள்களும் தப்பவில்லை; திருமணம் என்பது வேலைக்காரி நியமனம்தானே? ஆணுக் குப் பெண்ணை பலிகொடுக்கும் விழாவே திருமணம், நாய்க்கு லைசென்ஸ் - பெண்ணுக்குத் தாலி என்று பெரியார் சொன்ன கருத்துக்களை சொல்லி விளக்கினார். 

இதற்காகவே தந்தை பெரியாரால் கொண்டுவரப்பட்ட சுயமரியாதைத் திருமண முறையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வித்து, பெரியார் பெண்ணுரிமைக்காக வேறு யாரும் செல்லாத உச்சத்திற்குச் சொன்ன கருத்துகளை எடுத்துரைத்தார். 

முனைவர் துரை.சந்திரசேகரன் பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் ஜாதிக்கொரு வண்ணக் கயிறு இருப் பதையும், தமிழர்கள் இல்லத் திருமணங்கள் பார்ப்பனர்களை வைத்தே பெரும்பாலான வீடுகளில்  நடப்பதையும், சமூகநீதியை தக்கவைத்துக் கொள்வ தற்கும், ஜாதி இருக்கின்ற வரைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் என்று அடுக்கினார். 

அதைத் தொடர்ந்து 'பாசிச பா.ஜ.க.' என்ற தலைப்பில் வகுப்பெடுத்த வழக்குரைஞர் அ. அருள்மொழி, பாசிசம், நாசிசம், அடிப்படைவாதம், இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்களுக்கான விளக்கத்தையும் முதலில் எடுத்துரைத்தார். தொடர்ந்து பிரெஞ்சு புரட்சி பற்றி நினை வூட்டினார். தொடர்ந்து ஹிந்துமாகசபை, பாரதிய ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. என்ற வலதுசாரிகளின் வரலாற்றைச் சொல்லி, அவர்களின் நோக்கத்தை புட்டுபுட்டு வைத்தார். மேலும், 2014 தொடங்கி 2023 வரை பா.ஜ.க. செய்த அவலங்களை பட்டியலிட்டு விளக்கினார். 

பேராசிரியர் திருநீலகண்டன் ஜாதி என்பதற்கான வேர் எது? சமூகம் என்பதற்கான வேர் எது? என்பதை விளக்கி, சமூகத்திற்கான இலக்கணங்களை சொல்லி, அதன்படி இந்திய சமூகம் இல்லை. அது ஜாதிய சமூகமாக இருக்கின்றது எனபதை பளிச்சென்று புரியும்படி வகுப்பு நடத்தினார். அப்படி 200 ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்களை போலவே மற்ற ஜாதியினரும் எழுச்சி பெற முயன்றபோது வலதுசாரிகளால் தேசவிரோதம் என்று சித்தரிக்கபட்ட போது, திராவிடர் இயக்கம்தான் அதை சரியாகப்புரிந்துகொண்டு அதற்கு ஒரு தத்துவ வடிவம் கொடுத்து, அமைப்புக்குள் கொண்டு அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு என்று போராடி வாய்ப்புகளை பெற்றுத் தந்ததால், ஜாதியின் கட்டமைப்பு சுக்கல் சுக்கலாக உடைந்திருக்கிறது என்பதை வரலாற்றுத் தரவுகளோடு சொல்லி மாணவர்களைக் கவர்ந்தார். 

அதைத் தொடர்ந்து 'சமூக ஊடகங்களில் நமது பங்களிப்பு' பற்றி, வி.சி.வில்வம் வகுப்பெடுத்தார். இறுதியாக மருத்துவர் கவுதமன் 'மருத்துவமும், மூடநம்பிக்கையும்' எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். பின்னர் ஒருமணி நேர ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

முன்னதாக காலையில் முதல் வகுப்பிறகு முன்பு திருச்சியைச் சேர்ந்த தென்மொழிப் பண்ணை ஈகவரசன், “பெரும் பணியைச் சுமந்த உயிர் - பெரியாரென்னும் அரும்பெயரைச் சுமந்த நரை, அழற்கதிரை சுமந்த மதி, அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல் போல் எடுக்காமல் அடித்த அடி, எரிபோல் பேச்சு - பெரும் புதுமை அடடா.. இப்பெரியாரை தமிழ்நாடு பெற்றதம்மா!" என்ற பெருஞ்சித்திரனார் பாடலை ராகத்துடன் பாடி சிறப்பித்தார். 

நிகழ்வில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த அருணகிரி உள்ளிட்ட ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment