வள்ளலார் சனாதனவாதியா? வர்ணாஸ்ரமத்திற்கு வெடிவைத்த வள்ளலார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 23, 2023

வள்ளலார் சனாதனவாதியா? வர்ணாஸ்ரமத்திற்கு வெடிவைத்த வள்ளலார்!

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!" என்றவர் வள்ளலார்

"பசி தீர்த்த வள்ளலார்!"

இப்படித்தான் வள்ளலார் நமக்கு சொல்லிக்கொடுக்கப் பட்டிருக்கிறார். வள்ளலாருக்கு மற்றொரு முகமும் உண்டு. வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் பிறந்தது 1823ம் ஆண்டு. தந்தை பெரியார் பிறப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே பிறந்து மறைந்தவர் வள்ளலார். தில்லை நடராஜரின் பக்தராக இருந்து ஏராள மான பாடல்களை சிறு வயதிலேயே மனமுருகி பாடியவர் வள்ளலார். எந்த கடவுளுக்காக உருகி உருகிப் பாடினாரோ அவன் சன்னதியிலேயே பார்ப்பனர்களின் தீண்டாமை கொடுமைக்கு ஆளானவர் வள்ளலார். நடராஜன் சன்னதி யில் தன்னை அனுமதிக்க தில்லை தீட்சதர்கள் மறுத்தபோது வெகுண்டெழுந்தார் வள்ளலார். பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அந்த நேரத்தில் தில்லை நடராஜ சன்னதிக்கு மாற்றாக தாமே ஒரு தலத்தை உருவாக்கி அங்கே நடராஜரை தருவிக்கப்போவதாக வள்ளலார் அறிவித்திருக்கிறார். இதை பாலசுந்தர நாயக்கர் தான் எழுதிய இராமலிங்க பிள்ளை பாடலில் குறிப்பிடுகிறார்.

1865ல் சமரச சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த வள்ளலார்  வடலூரில் சத்திய தரும சாலையை 1867ல் உருவாக்கினார். பின்னர் 1872ல் சத்திய ஞானசபையை தோற்றுவித்தார். 

வள்ளலார் தனது முதல் பாமாலையிலேயே 

"பெருநெறி பிடித் தொழுக வேண்டும்!

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!!"

என்று எழுதினார் . 

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

கள்ளப்புலனனைந்தும் காடாமணி விளக்கு"

என்று கோயில் விக்ரகங்களை வழிபடுவதை மறுத்து வைதீகத்திற்கு எதிராக பார்ப்பனர்களுக்கு எதிராக கருத்து களை வெளிப்படுத்திய திருமூலரின் வழிவந்தவர் வள்ள லார். மாறாக எந்த சைவ மடாதிபதிகளிடமோ சங்கராச் சாரிகளிடமோ தீட்சதை பெற்றவர் இல்லை. 

இளமைப் பருவத்தில் சைவ மரபில் ஊறித் திளைத்தவர் பின்னாளில் அதை அறவே நம்பவேண்டாம் என்றார். 1873ம் ஆண்டு சித்தி வளாகத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றிவைத்து பேசிய வள்ளலார், தான் முதலில் சைவ சமயத்தின் மீது கொண்டிருந்த லட்சியத்திற்கு  அளவே இல்லை என்றும் அதற்கு தான் பாடிய அருட்பாக்களே சாட்சி என்றும் அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா? என்றும் கேட்கிறார். மேலும் அவர் அப்படிப்பட்ட அழுத்தம் அப்போது தனக்கு இருந்ததென் றால் அதற்கு காரணம் அந்த காலகட்டத்தில் தனக்கிருந்த அற்ப அறிவுதான் என்று தன்னையே குறைபட்டுக் கொள்கிறார். 

தில்லை நடராஜர் சன்னதியில் தீட்சதர்களால் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. ஜாதி மத சம்பிரதாய சாஸ்திரங்கள் அடியோடு ஒழிய வேண்டும் என்றார்.

"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அமிதல் அழகலவே!" என்றும்

"ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்

உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்" என்றும்

"இச்சாதி சமய விகற்பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்" என்றும் பாடியவர்

"பேருற்ற உலகில் உறு சமய மதநெறி எலாம்

பேய்ப்பிடிப்பு உற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது

உயிர்கள் பல பேதம் உற்று அங்கும் இங்கும்

போருற்று இறந்து வீணே போயினர்!" என்றும்

"மதத்திலே சமய வழக்கிலே மாயை

மருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனதை வைத்து வீண்பொழுது

கழிக்கின்றார்!" என்றும்

"எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர்!" என்றும் 

"கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக் கூவுகின்றார்;

பலன் ஒன்றும் கொண்டறியார்; வீணே நீறுகின்றார்; மண்ணாகி நாறுகின்றார்!"

என்றும் சமயகோட்பாடுகளையும், மதகோட்பாடுகளை யும் சாடுகிறார்.

"கலையுரைத்த கற்பனையே 

நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம்

மண்மூடிப் போக!"

என புராணக்குப்பைகளை விமர்சித்த வள்ளலார் அதை உருவாக்கிய கூட்டத்தையும் தோலுரிக்கத் தவற வில்லை.

"கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக் 

கூட்டமும்  அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்

காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும்

எல்லாம் பிள்ளை விளையாட்டு!"என்றார்.

ஜாதி, மதங்களை சாடிய வள்ளலார் அதோடு விட்டுவிட வில்லை. பிறப்பால் பிராமணன், சூத்திரன் என்றுரைத்த வருணாசிரமத்தை சனாதனதருமத்தை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்.

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

இருட்சாதி தத்துவ சாத்திரக் குப்பை

இருவாய்ப் புன்செயல் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு

சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!"

என்றார். பார்ப்பனர்களின் வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட சூது என்று ஓங்கி அடித்தார் வள்ளலார். 

"வேதநெறி ஆகமத்தின் நெறி

புராணங்கள் விளிம்பு நெறி

இதிகாசம் விதித்த நெறி முழுவதும்

ஓதுகின்ற சூதணைத்தும் உளவணைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரவைத்தினையே!" 

"சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்!"

என்றார். அதனால் தான் பார்ப்பனீயம் அவரை விட்டுவைக்கவில்லை. 

சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர் வள்ள லார். சாதாரண எளிய வகுப்பில் பிறந்தவர். பார்ப்பனர்களின் எதிர்ப்பை மட்டுமின்றி அவர்களால் தூண்டிவிடப்பட்ட உயர் ஜாதி இந்துக்களின் எதிர்ப்பையும் சந்தித்தார். வள்ளலார் இயற்றிய அருட்பாவிற்கு எதிராக ஏராளமான கண்டன நூல்களும் இயற்றப்பட்டது. அவர் வாழ்ந்த காலத்திலேயே ஆறுமுக நாவலர், சண்முகம் பிள்ளை போன்றவர்கள் வள்ளலாருக்கு எதிராக செயல்பட்டனர். 'திருவருட்பா தூஷண பரிகாரம்' என்று எழுதினார் சண் முகம் பிள்ளை. வள்ளலாருக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் ஆறுமுக நாவலர். 'வள்ளலாரின் அருட்பா, போலி அருட்பா' என்றும் 'மருட்பா' என்றும் பல்வேறு வகைகளில் தூற்றப் பட்டது. வள்ளலார் மறைந்த பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை. 'இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம்' என்று எழுதினார் கதிரைவேற்பிள்ளை.

திருக்குறளை தூக்கிப் பிடித்தவர் வள்ளலார். சமஸ்கிரு தத்தைவிட தமிழே உயர்ந்தது என வாதிட்டவர். சங்கராச் சாரியார் சமஸ்கிருதத்தை மாத்ரு பாஷா (தாய் மொழி) என்று சொன்ன நேரத்தில் அப்படியானால் எங்கள் தமிழ் பித்ரு பாஷா (தந்தை மொழி) என்று குறிப்பிட்டவர் வள்ளலார். பெண் கல்வியை வலியுறுத்தியவர் வள்ளலார். கணவன் இறந்த பின் மனைவி தாலி அறுக்கத் தேவையில்லை என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட சூத்திர இழிவுக்கு எதிராக குரல் கொடுத்தவர் வள்ளலார் என்பதே தனிச்சிறப்பு. அதனால்தான் அப்படிப்பட்ட அருங்கருத்துகள் அடங்கிய அவரது ஆறாம் திருமுறையை பெரியார் தனது குடிஅரசு பதிப்பகத்தின் மூலம் தொகுத்து 'இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு' என்ற பெயரில் வெளியிட்டார். 

அதை தொகுத்தவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம்பரனார் ஆவார். ஒருமுறை வடலூர் சென்ற பெரியார் வள்ளலார் மீது கொண்ட மதிப்பால் அவரது சபையை காண விரும்பி அங்கே சென்றிருக்கிறார். சபை யின் வாயிலில் 'புலால் உண்போர் உள்ளே வர வேண்டாம்' என்ற அறிவிப்பை கண்டதும் அங்கிருந்து உள்ளே செல்லாமல் திரும்பினார் 

1874ம் ஆண்டு வள்ளலார் தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார் என்றார்கள். பின் அவர் வெளியில் வரவே இல்லை. அவர் ஜோதியாகிவிட்டார் என்றார்கள். 

நந்தன் தீக்குண்டம் இறங்கினான்! வள்ளலார் ஜோதி யாகிவிட்டார்! எல்லாம் அவாள் விடுத்த சம்பாஷனைதான். நம்பித் தொலைப்போம்.

- கி.தளபதி ராஜ் 

(முக நூல் பதிவு)


No comments:

Post a Comment