நீதிக்கட்சியின் முரசொலி பீகாரிலும் ஒலிக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

நீதிக்கட்சியின் முரசொலி பீகாரிலும் ஒலிக்கிறது!

பீகார்- சுதந்திரத்திற்கு முன்பு இன்றைய ஒடிசா, பாதி உத்தரப்பிரதேசம், இமயமலைச்சாரல் பகுதி என மிகப் பெரிய பரந்து விரிந்த பகுதியாக பீகார் மாகாணத்தை வரையறை செய்திருந்தனர். 

பீகார் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கவுதம புத்தரின் கயாதான்,  அதன் தாக்கமோ என்னவோ அங்கு பகுத்தறிவாளர்கள் சமூகநீதி கருத் தாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களை முதலாளித்துவமும் ஜாதியமும் வதைக்கும் போது  கிளர்ந்தெழுந்தனர். 

சம்பூரண கிராந்தி என்ற மொத்தப் புரட்சிக்கு அடையாளாமான பீகார்  இந்திய விடுதலைக்குப் பிறகு ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரத்தனத்தை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்டது. பீகார் இயக்கம், இந்த இயக்கத்தில் இருந்தவர்கள் தான் இன்றைய வட இந்திய சமூகநீதித் தலைவர்கள்  இந்த இயக்கம் துவக்கத்தில் சோசலிஸ்ட் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஒன்றிய அரசையே அசைத்துப் பார்த்தது. இரும்புப் பெண்மணி என்று கூறப்பட்ட இந்திரா காந்தியையே சம்பூரண கிராந்தி அசைத்துப் பார்த்துவிட்டது

 ஜெயப்பிரகாசை அரசியல் ஆசானாக ஏற்றுக்கொண்டவர்கள் தான் மறைந்த பீகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், மேனாள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் மறைந்த முலாயம் சிங், மேனாள் முதலமைச்சர் லாலுபிரசாத், தற்போதையை நிதீஷ் குமார் வரை, இவர்களின் அரசியல் வாழ்க்கையின் துவக்கமே சமூகநீதிக்கான வேட்கையில் தான் தொடங்கியது

கர்ப்பூரி தாக்கூர் 1960ஆம் ஆண்டில் அஞ்சல் தொலைவரித் துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் முன்னின்று போராடியதால் சிறைக்குச் சென்றார். டெல்கோ குழுமத் தொழிலாளர் போராட்டத்தில் 28 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து கலந்து கொண்டார்.

1970ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பீகார் முதல் அமைச்சர் பதவி ஏற்ற பிறகு பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார்.  லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமல்படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நடந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பீகார் அரசியல் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்சுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் திகழ்கிறார்.

 லாலு பிரசாத் யாதவ்

1990 மார்ச்சில் லாலு பிரசாத் பீகார் முதலமைச்சராக பதவியேற்றபோது, 

கிராமமான புல்வாரியாவுக்குச் சென்று, தனது தாயார் மராச்சியா தேவியிடம் செய்தியை தெரிவித்தார். இதைக் கேட்ட அவர், ‘முதலமைச்சர்’ என்றால் என்ன என்று கேட்டுவிட்டு, ஏமாற்றம் அடைந்த நிலையில், “உனக்கு அரசு வேலை கிடைக்கவில்லையா” என்று கேட்டார். லாலு பிரசாத் அடிக்கடி சொல்ல விரும்பும் கதை இது.

லாலு பிரசாத் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும் போது அவருக்கு தனது பார்ப்பன ஆசிரியரின் மாடுகளை மேய்த்துக் கொண்டுவர சொல்வாராம், இதுதான் அவரது பள்ளிநாட்களின் சோகம், பள்ளி சென்றால் மாடுமேய்க்கச்சொல்கிறார்கள் ஆசிரியர்கள். ஆகையால் வேறு பள்ளிக்கு அனுப்பு என்று பெற்றோரிடம் அழுது புலம்பியதையும் ஒருமுறை நான் மாடுமேய்க்கப் போகமாட்டேன் என்னை என் பெற்றோர் படிக்கத்தானே அனுப்பினார்கள் என்று எதிர்த்து பேசிய போது ஆசிரியரும் பள்ளி ஊழியரும் சேர்ந்து லாலுவின் விரல்களை நசுக்கியும் நகத்தில் முள்ளால் குத்தியும் மாடு மேய்க்கும் நீயெல்லாம் படிக்கவந்துவிட்டால் மாட்டை யார் மேய்ப்பார்கள் என்று கூறியதாக தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் லாலு பிரசாத் கூறியுள்ளார். 

குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்கு நகர்ந்து கொண்டிருந்த பாஜக பிரமுகர் எல்.கே.அத்வானியின் ‘ரத யாத்திரை’யை அவர் தடுத்து நிறுத்தியது அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் முக்கிய தருணமாகும். அத்வானியின் அஸ்வமேத யாகத்தை தடுத்து நிறுத்திய அசோகன் என்ற பெயரையும் அப்பகுதி சமூகநீதி தலைவர்களிடையே பெயர் பெற்றார். 

மேற்கே மகராட்டிரா 1850களில் மகாத்மா ஜோதிபா பூலே தலைமையில் சமூகநீதி நெருப்புப்பொறியை விதைத் தது, அது தெரித்து பீகாரில் விழுந்தது, தமிழ்நாட்டிலும் விழுந்தது பீகாரில் அந்த சமூகநீதி நெருப்பை பரவாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில் தென் இந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயரில் புறப்பட்ட பார்ப்பனர் அல்லாத இயக்கம் நீதிக்கட்சி என சமுக நீதி முரசொலித்தது - அதன் ஓசை இன்று மீண்டும் பீகார் வரை கேட்கிறது.

No comments:

Post a Comment