உயிரிழந்த தனது மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவராத ஆத்திரத்தில் பூஜை செய்த சாமியாரை கணவர் கொலை செய்த பரபரப்பு சம்பவம் மகாராட்டிராவில் நிகழ்ந்துள்ளது.
மகாராட்டிரா மாநிலம் மான்டவி என்ற பகுதியில் சாமியார் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அந்த நபரின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த நபர் பிவா வைத்தீ என்றும், அவர் கோவில் பூசாரி என்றும், தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சியின் உண்மை அம்பலமானது. பூசாரியைக் கொலை செய்தவர் வினோத் என்ற 34 வயது நபர் என்று கண்டுபிடித்தனர்.
இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. 2017இல் ஒரு காவலாளியைக் (வாட்ச்மேனை) கொலை செய்த வழக்கில் வினோத் சிறைக்குச் சென்றவர். இவர் பிணையில் இரண்டு ஆண்டுகளாக வெளியே உள்ளார். இவரது மனைவி மஞ்சள்காமாலை வந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் பல இடங்களில் "இறந்தவரை உயிர்ப்பிப்பேன், மந்திரம் செய்வேன், பணம் வரவழைக்கும் யாகம் செய்வேன்" என்ற விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார்.
உடனே அவர் இது தொடர்பாக விளம்பரத்தில் வந்த எண்ணைத் தொடர்பு கொண்டார். மேலும் தனது மனைவி இறந்து விட்டதாகவும், பல விடயங்கள் அவரிடம் பேச வேண்டும், அவரது ஆவியுடன் பேச வேண்டும், என்றும் கூறினார். அதற்கு அந்த சாமியார் "ரூ.20,000 கொடுத்தால் அவரை உயிரோடு கொண்டு வந்து விடுவேன்; பிறகு அவரிடம் நேரடியாகவே என்னவேண்டுமென்றாலும் கேட்டுக்கொள்" என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் ரூ.20,000 கொடுத்துள்ளார்.
பூஜைச் சாமான்கள் வாங்கவேண்டும் என்று கூறி மேலும் 5000 ரூபாய் வாங்கி உள்ளார். தொடர்ந்து பூஜைகள் செய்துகொண்டு இருப்பதாகவும், "உனது மனைவி உடலுக்குள் ஆவி நுழையாமல் சில கெட்ட ஆவிகள் தடுத்து வருகின்றன. அவற்றை விரட்ட மேலும் பூஜை செய்யவேண்டும்" என்றும் கூறியுள்ளார். அதனால் கூடுதலாக செலவாகும் என்றும் கூறியுள்ளார். அதற்கு வினோத் "எனது மனைவியை உயிரோடு கொண்டுவா, நீ கேட்ட பணத்தைத் தருகிறேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்", என்று கூறியுள்ளார். அதற்கு சாமியார் "பணம் தந்தால் தான் பூஜை தொடரும். இல்லை என்றால் கெட்ட ஆவிகள் உனது மனைவியை பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும், பிறகு அவரை திரும்பக் கொண்டு வர முடியாது" என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வினோத் மீண்டும் சாமியாரிடம் என் மனைவியை உயிருடன் கொண்டு வந்தால் பணம் தருகிறேன் என்ற கூறியுள்ளார்.
ஆனால் சாமியார் எதுவுமே கேட்காமல் சீக்கிரம் பணத்தை யாரிடமாவது வாங்கிக் கொண்டுவா என்று தொடர்ந்து வற்புறுத்திக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் அங்கிருந்த கல் தூணில் சாமியாரின் தலையை மோதியுள்ளார். மேலும் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார். இதனால் நிலை குலைந்துபோன சாமியார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார், விசாரணையில் வினோத் சாமியாரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதும், மராட்டிய காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
மகாராட்டிராவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அங்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அந்தச் சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. மீண்டும் ஜோதிடம், பில்லி சூனியம் வைப்பது, குட்டிச்சாத்தான்களை ஏவுதல் போன்ற விளம்பரங்கள் அதிகம் வர ஆரம்பித்து விட்டன.
இது ஒன்றும் அதிசயம் இல்லை. இதைவிட அதிர்ச்சியான ஆச்சரியமான தகவல் ஒன்று உண்டு.
காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் "அவர் உயிரைத் திருப்பிக் கொண்டு வருகிறேன்" என்று சென்னையில் ஒரு சாமியார் முன் வந்தார்.
டாக்டர் சுப்பராயன் (மேனாள் சென்னை மாநில முதலமைச்சர்), டாக்டர் அழகப்ப செட்டியார் ஆகியோர் அந்த சாமியாரை விமானத்தில் அழைத்துச் சென்றனர்.
டில்லி சென்ற அந்த சாமியார் காந்தியாரின் கை கால்களைத் தொட்டார். ஒன்றும் ஆகவில்லை. அடுத்து ஒரு புளுகை அரங்கேற்றினார் சாமியார். காந்தியாரின் தொண்டையை அறுத்து ஒரு குளிகையைப் போட வேண்டும் என்று சொல்ல, அந்த சாமியாரை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
('குடிஅரசு' 7.2.1948)
"கேட்பவன் கேணயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்" என்பார்கள். கடவுள் சக்தி, மாந்திரீக சக்தி, சாமியார் சக்தி என்பதெல்லாம் அசல் புளுகு மூட்டைகளே என்பதைப் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டாமா?
No comments:
Post a Comment