குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). குஜராத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த இதய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்து மரணத்தின் விளம்பில் இருந்த பலரை மீட்டவர் கவுரவ் காந்தி. அதுமட்டுமின்றி, மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்; என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பதிவுகளையும் தினமும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு லட்சக்கணக் கானோரின் அன்பையும் பெற்று வந்தார்.
அண்மையில் காலையில் வழக்கம் போல மருத்துவ மனைக்கு சென்ற கவுரவ் காந்தி, அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர், இரவும் எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றிருக்கிறார். பொதுவாக, காலை 6 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்ட கவுரவ் காந்தி, அன்றைக்கு 8 மணி ஆகியும் எழாததால் அவரது குடும்பத் தினர் அவரை எழுப்பச் சென்றனர்.
ஆனால் அவர் எந்த அசைவும் இன்றிக் கிடந்துள்ளார். இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத் துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரியான உணவுப் பழக்கத்தையும், ஆரோக் கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்து வந்த இதய மருத்துவரே, இத்தனை சிறிய வயதில் மாரடைப்பில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தும் ஈசா என்ற மடத்தில் கூத்து ஒன்று நடந்துள்ளது. இறந்துபோன மருத்துவரின் நினைவாக ஏதாவது சேவை செய்ய புறப்படப்போகிறார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.
இறந்து போன மருத்துவரின் ஆத்மா கெட்ட செயல்களில் ஈடுபடாமல் இருக்க, சிறப்பு காலபைரவ யாகம் செய்தார்களாம்; இது தொடர்பாக கேட்ட போது ஒரு உயிர் செத்துப்போனால் அந்த ஆத்மா நாட்டில் நடக்கும் ஆசாபாசங்களைப் பார்த்து இச்சையோடு சுற்ற ஆரம்பிக்கும், பிறகு மறு பிறவி எடுக்கும் போது அந்த ஆசாபாசங்களை எல்லாம் செய்ய எத்தனித்து பாவச் சக்கரத்தில் சிக்கிக்கொள்ளுமாம். ஆனால் இந்த காலபைரவ யாகம் செய்தால் குறிப்பிட்ட ஆத்மா ஆசாபாசங் களில் சிக்காமல் அடுத்த பிறவியிலும் நல்ல செயல் செய்யுமாம். பயம், கோபம், பதற்றம், கவலை என எதுவாக இருந்தாலும், அந்த உணர்வைத்தான் அவரது ஆத்மா சுமந்து சென்று அடுத்த உடலை அடையுமாம். அப்படி இருப்பது மறுபிறவியில் அவருக்கும், அவரது இக்கால மற்றும் மறுஜென்மத்தில் வரும் உறவினர்களுக்கும் தீமை விளைவிக்குமாம். இதனை நிவர்த்தி செய்வதற்காகவே, உயிரிழந்த மருத்துவர் கவுரவ் காந்திக்காக கோவை ஈஷா மய்யத்தில் உள்ள லிங்க பைரவியில் காலபைரவ கர்மா மற்றும் காலபைரவ சாந்தி ஆகிய பூஜைகள் செய்யப் பட்டனவாம். அதாவது மருத்துவர் நிறைய பேருக்கு சிகிச்சை செய்துள்ளார். ஆகவே அடுத்த பிறவியிலும் அவர் மருத்து வராகப் பிறந்து அனைவருக்கும் சேவை செய்யவதற்காக இந்த யாகமாம்!
எப்படி இருக்கிறது? இந்த யோகா மய்யமும் சரி, அதன் தலைமை வேடதாரியான ஜக்கி வாசுதேவும் - என்பதெல்லாம் பித்தலாட்டத்தின் மறுவடிவம்!
அரசுக்குச் சொந்தமான, யானைகள் நடமாடும் நிலங்களை எல்லாம் வளைத்துப் போட்டு, யாகம், யோகம், மாந்திரீகம் என்ற மூடத்தனத்தங்களின் மொத்த உருவமாக, மக்களிடம் உள்ள பக்தியைப் பயன்படுத்தி வழிப்பறிக் கொள்ளைக் காரர்கள் போல் மக்களின் பணத்தைச் சுரண்டுகின்றனர்.
இந்தப் பேர்வழிமீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் முதற்கொண்டு அந்த யோகா மய்யத்திற்குச் சென்று ஆசிர்வாதம் பெறு கின்றனர்.
வண்ண வண்ணமாக கட்டுக் கதைகளைக் கட்ட விழ்த்து விட்டு, மக்களைச் சுரண்டும் இந்த யோகா மய்யம் மற்றும் அதன் செயல்பாடுகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்களாக இருந்தாலும் மாரடைப்பு வரக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா? பக்தி மனிதனின் புத்தியை நாசமாக்குகிறது என்பதை இப்பொழுதாவது மக்கள் உணரட்டும்!
No comments:
Post a Comment