ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : கலைஞருடன் தங்களின் முதல் சந்திப்பு எப்பொழுது?

- பா.முகிலன், சென்னை-14

பதில் : ஈரோடு கோடை பயிற்சி (மாணவர்களுக்கு) அய்யா அவர்கள் நடத்தி ஒவ்வொரு ஆண்டும்  சுமார் ஒரு மாதம் கூட்டங்களில் பேச, பல மாவட்டங்களுக்குப் பிரித்து குழுவாக அனுப்புவார்.

1945இல் இரண்டாவது ஆண்டு கோடைப் பிரச்சாரத்திற்கு தஞ்சை மாவட்டத்திற்கு நான் மாணவப் பிரச்சாரக் குழுவில் ஒருவனாக அனுப்பப்பட்டதில் குடந்தை அருகே சாக் கோட்டையில் சென்று பேசினேன். அங்கே திருவாரூரி லிருந்து வந்த மூத்த மாணவர் கலைஞர் எங்களோடு தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களுக்கு வந்தார். அதுதான் - 1945இல்தான் முதல் சந்திப்பு (1.5.1945). இறுதிவரை தொடர்ந்தது - ஒரு சிறு இடைவெளி தவிர - தி.மு.க. பிரிந்த பிறகும்கூட!  

----

கேள்வி : தங்களுக்குக் கலைஞரிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன?

- லோ.ஜெகதீஷ், வேலூர்

பதில் : பிடித்தது அவரது விடாமுயற்சியும், எதிர்ப்புக்கஞ்சா துணிவு .கடும் உழைப்பு! பிடிக்காதது சில நேரங்களில் அரசியல் கட்சி தி.மு.க.விற்கும், சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுகளிலும் ஏற்படும் சிக்கல்.

----

கேள்வி : தந்தை பெரியார் அவர்களிடம் கலைஞரின் பங்கு என்ன?

- பா.கண்மணி, செங்கல்பட்டு

பதில் : எத்தனையோ உண்டு. கலைஞர் தாம் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ முன்னுரையில், “தந்தை பெரியாரைச் சந்தித்ததுதான் என் வாழ்வில் திருப்புமுனை” என்றார். அய்யா மறைந்தவுடன் அவர் ஒரு வரியில் கூறிய “பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார்” என்கிற வாக்கியம், அய்யாவின் மறைவிற்குப் பின்பு நம் கடமை - பங்களிப்பு பற்றிய கொள்கைப் பயணத்தை அறிவுறுத்திய வாக்கியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சி போனாலும் பரவாயில்லை; அவருக்கு அரசு மரியாதை -  “குரு தட்சணையும்” தந்து அவர் உடலை அடக்கம் செய்த துணிவும், நன்றிக் கனிவும்! பெரியார்தம் உயரத்தை உலகுக்குக் காட்டும் உத்தமப் பண்பின் வெளிப்பாடு - மிகவும் மறக்க முடியாதது!

----

கேள்வி : தொடர்ந்து கலைஞரை ஆதரித்த நீங்கள், சிறிது காலம் கலைஞரை எதிர்த்ததற்குக் காரணம் என்ன?

- சு.இளவேனில், திருச்சி

அவர் பா.ஜ.க.வை ஆதரித்ததேயன்றி, வேறில்லை. சமரசமில்லாத கொள்கைப் பார்வையிலும், தாய்க் கழகப் பொறுப்புணர்வினாலும், கவலையினாலும்!

----

கேள்வி : கலைஞர் அவர்கள் மூடநம்பிக்கை எண்ணம் கொண்டவர் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா?

- க.செபஸ்தியான், தென்காசி

பதில் : அடிப்படையற்ற தவறான கருத்து; சில நேரங்களில் மற்றவர் மனதைப் புண்படுத்தாமலிருக்க ஏதாவது சில காரியங்களில் அனுமதி காட்டியிருப்பாரே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. அவர் ‘இறுதிவரை’ “மானமிகு சுய மரியாதைக்காரரே” - சிறந்த பகுத்தறிவுக் கொள்கையாளர். 

----

கேள்வி : அரசியல்வாதி கலைஞர், பேச்சாளர் கலைஞர், எழுத்தாளர் கலைஞர், இலக்கியவாதி கலைஞர் - உங்களுக்குப் பிடித்த கலைஞர் யார்?

- மே. மேகநாதன், மேட்டூர்

பதில் : எழுத்தாளர் கலைஞர் - அதுதான் அவரது ஆற்றல்களில் காலத்தை வென்றவை! நான் அவரது நூல் வெளியீட்டில் பேசும்போதும் ஏற்கெனவே குறிப்பிட்டேன். 

“எழுத்தில்கூட எதிர்ப்பில்தான் நாம் முழு கலைஞரைப் பார்க்க முடியும்” என்று! நான் சொன்னதை கேட்டு அவரே சிரித்து மகிழ்ந்தார்!

----

கேள்வி : கலைஞரின் நூற்றாண்டில், தி.மு.க. தோழர் களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?

- த.தங்கவேலு, தஞ்சாவூர்

பதில் : அவர் தன்னை ஒரு வரியில் செய்த விமர்சன விளக்கத்தை நெஞ்சில் ஏந்தி, மற்றவர்களும் மானமிகு சுயமரியாதைக்காரர்களாகுங்கள் - தி.மு.க. தோழர்களே! கொள்கை மாலையை கலைஞருக்கு அணிவியுங்கள்.

அப்படியானால்தான், தி.மு.க. என்ற கோட்டை அரசியல் புயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிரந்தரக் கோட்டையாக நிலைத்து நீடித்து தனி வரலாறு படைக்கும்.

----

கேள்வி : கலைஞர் பழிவாங்கும் எண்ணம் கொண்டவரா?

- ந.பார்த்திபன், மீஞ்சூர்

பதில் : பழிவாங்கும் குணம் கொண்டவர் அல்ல; பழை யது எதையும் எளிதில் மறக்காதவர்; ஆனால், மன்னிக்கத் தெரிந்தவர். இரக்க உணர்ச்சியை எப்போதும் காட்டுபவர்.

அவரது மன்னிப்பு பிறகு (சிலரிடம்) அவருக்குத் தொல்லையாக - தீங்காகவும்  முடிந்தது என்பது அவரது வாழ்வில் கண்ட அனுபவித்த நிலையாகும்.

No comments:

Post a Comment