ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. யார் மரணம் அடைந்தாலும் வேதனைதான்!
ஒடிசா ரயில் விபத்து மிகவும் மோசமானது; உலகையே உலுக்கி உள்ளது. நவீன தொழில் நுட்பம், பொதுமக்கள் கைகளில் உள்ள அலைபேசிகளில்கூட ரயில்களின் நிலை குறித்த தகவல்களைப் பெறும் அளவிற்கு வசதிகள் நிலவும் கால கட்டம் இது!
ஆனால் இந்த விபத்து நடந்துள்ளது குறித்து இப்போது வரை பிரதமர் மோடியோ உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரோ பெரிய அளவில் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை.
ரயில் விபத்து நிகழ்ந்து 24 மணி நேரம் கடந்தும் தொழில் நுட்பத் தகராறு - இண்டர்லாக்கிங் சிஸ்டம் வேலை செய்யவில்லை என்று கூறிக் கொண்டு இருக்கிறார்களே தவிர ஏன் இந்த விபத்து நிகழ்ந்தது? எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது? என்பது குறித்து விளக்கம் இல்லை.
விமானக் கட்டணத்திற்கு இணையான கட்டணங் களுடன் - பெரும் பணக்காரர்களுக்காக இயங்கும் 'வந்தே பாரத்' ரயிலுக்கு ஓடி ஓடி பச்சைக்கொடி காட்டிக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. ஆளும் பாஜக அரசு, விளம்பர பிம்பத்தை வைத்து ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. விபத்துகளைத் தடுக்கக் கூடிய நவீன தொழில்நுட்பத்தை 'கவச்' (கவசம்) ஒன்றிய அரசு முறையாக பயன்படுத்தவில்லை. இது ஏற்கெனவே மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இருந்தபோது ரயில்வேத்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் நுட்பம். இது சோதனை அளவில் இருந்த போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதன் பிறகு இவர்கள் 7 ஆண்டுகள் கழித்து வெறும் பெயரை மட்டுமே சமஸ்கிருதத்தில் 'கவச்' என்று மாற்றி, அறிமுகப்படுத்தினார்கள். எங்களின் திட்டத்தை நீங்கள் 'கவச்' என பெயர் மாற்றினீர்கள் என்று மம்தா ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு முன்பாகவே குற்றம் சாட்டினார். அந்தக் கருவியை 70 ஆயிரம் கிலோமீட்டர் கொண்ட ரயில்வே பாதைகளில் வெறும் 1500 கிலோமீட்டருக்கு மட்டும் தான் பொருத்தி உள்ளீர்கள். அது வெறும் 2 சதவீதம் கூட இல்லை என மம்தா குற்றச்சாட்டு சரியானது.
அதற்குப் போதுமான பதில் அமைச்சரிடம் இல்லை. இந்தக் கோர விபத்திற்கு யார் காரணம்? நிர்வாகமா? தனி மனிதரா? தமிழ்நாட்டில் சிறிய விடயம் நடந்தாலும் உடனே முதலமைச்சர் பதவிவிலக வேண்டும் என சொல்லும் பாஜக, அதிமுக இதுவரை ஏன் வாயைத் திறக்கவில்லை? 'வந்தே பாரத்' என்ற ரயிலை தொடங்கும்போது நேரடியாக அங்கு சென்று விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? கோர விபத்து நடந்த இடத்திற்கு வந்த மோடிக்கு என்று தனியாக ஏர் கூலர் கூடாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்தக் கோர விபத்தைப் பார்வையிட மோடி வரும் போது மோடி! மோடி! என்று அவரது புகழ்பாட ஒடிசா பாஜகவினர் ஆட்களை அழைத்து வந்திருந்தது எவ்வளவு மோசமான நடவடிக்கை. இது குறித்து சமூகவலைதளத்தில் கடுமையாக பொதுமக்கள் சாடி வருகின்றனர்.
இந்தியாவின் பழைய வரலாறு என்ன சொல்லு கிறது? இதுபோன்ற விபத்துகளின்போது அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார், மம்தா உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவர்.
அரியலூரில் ரயில் விபத்து நடந்தபோது அன்றைய ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும் இணை அமைச்சர் (தமிழ்நாடு) ஓ.வி. அளகேசனும் பதவி விலகியதுண்டே!
இராமன் கோயில் - காசி கோயிலைப் புதுப்பிப்பது, பட்டேலுக்கு ரூ.3000 கோடியில் சிலை எழுப்புவது போன்ற மக்களை மயக்கும் வேலையில் ஈடுபடுவது தானே மோடி அரசு!
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மூத்த குடி மக்களுக்கு ரயிலில் பயணம் செய்ய அளிக்கப்பட்ட சலுகைகளைப் பறிமுதல் செய்தது தானே மோடி அரசின் சாதனை! 'தட்கல்' இடங்களை அதிகரிப்பதன் நோக்கம் என்ன?
பதிவு செய்ய முடியாத(Unreserved) பொதுப் பெட்டிகளில் மக்கள் ஆடு, மாடுகளை அடைப்பதைபோல் பயணித்து வரும் அவலத்தை என்ன சொல்ல!
ஒடிசா கோர ரயில் விபத்தில் பலியான பெரும்பாலான மக்களும் இவர்களே!
மோடி அரசு பாடம் கற்குமா? அல்லது மக்கள் பாடம் கற்பிக்க வேண்டுமா?
No comments:
Post a Comment