மே 28 அன்று, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி, புதிய நாடாளுமன்றத்தில் ஒரு சுவரோவியத்தின் படத்தை ட்வீட் செய்தார், இது நவீன கால புவியியல் எல்லைகள் இல்லாமல் பண்டைய இந்திய நிலப்பரப்பை சித்தரிக்கிறது, மேலும் “தீர்மானம் தெளிவாக உள்ளது - அகண்ட பாரதம்” என்று கன்னடத்தில் பதிவிட்டு இருந்தார்.
அவரது ட்வீட்டின் அர்த்தம் என்ன என்று கேட்டதற்கு, பிரகலாத் ஜோசி கூறியதாவது: “அகண்ட பாரதத்தின் கருத்து பண்டைய இந்திய கலாச்சாரத்திலிருந்து வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கிறது, ஒவ்வொரு பிராந்தியத்தையும் அதன் அனைத்து அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.” என்றார் இந்தச் சுவரோவியம் நேபாளத்தில் சில கவலைகளைத் தூண்டியுள்ளது, இந்தியாவிற்கு வருகை தரும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் புது டில்லியில் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்று நேபாளத்தின் ஒரு சில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேபாளத்தின் மேனாள் பிரதமர் பாபுராம் பட்டராய், இந்த சுவரோவியம் தேவையற்ற இராஜதந்திர பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியதாக பி.டி.அய் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சர்ச்சையில் உள்ள சுவரோவியம் அசோகர் கால சாம்ராஜ்யத்தின் பரவலையும், அவர் (அசோகர்) ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்த பொறுப்பான மற்றும் மக்கள் சார்ந்த நிர்வாகத்தின் யோசனையையும் சித்தரிக்கிறது,” என்று கூறினார்.
இந்த கலைப்படைப்பு புதிய நாடாளு மன்ற கட்டடத்தின் அரசமைப்பு அரங்கில் உள்ள 16 இடங்களில் ஒன்றை ஆக்கிரமித்துள்ளது. மற்ற இடங்களில் உள்ள சுவரோவியங்களில் இந்திய முனிவர்கள், பண்டைய நூல்கள் மற்றும் ராமாயண நூலும்; சர்தார் வல்லபாய் படேல் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அகண்ட பாரதம்
இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து மியான்மர் வரையிலும், திபெத்தில் இருந்து இலங்கை வரையிலும் பரந்து விரிந்திருக்கும் நிலப்பரப்பை உள்ளடக்கிய, ராமாயண காலத்திலிருந்தே ஒரு இந்திய தேசத்தை சங்பரிவார் நீண்ட காலமாக கற்பனை செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் நடத்தும் சுருசி பிரகாஷனால் வெளியிடப்பட்ட “புண்யபூமி பாரத்” என்ற வரைபடம், ஆப்கானிஸ்தானை “உப்கநாதன்” என்றும், காபூலை “குபா நகர்” என்றும், பெஷாவர் “புருஷ்பூர்” என்றும், முல்டானை “மூல்ஸ்தான்” என்றும், திபெத் “திரிவிஷ்டப்” என்றும் இலங்கையை “சிங்களதீவு” என்றும், மியான்மர் “பிரம்மதேசம்” என்றும் குறிப்பிடுகிறது.
1944இல், முஸ்லீம் லீக் தனி பாகிஸ் தானுக்கு அழுத்தம் கொடுத்தபோது, வரலாற்றாசிரியர் ராதா குமுத் முகர்ஜி “அகண்ட பாரத மாநாட்டில்” தனது முதன்மை உரையில் அகண்ட பாரதம் பற்றிய கருத்தை முதலில் கூறினார்.
காஷ்மீர் முதல் குமரி முனை வரையிலும், நங்கா பர்வதம் மற்றும் அமர்நாத் முதல் மதுரா, ராமேஸ்வரம் மற்றும் துவாரகா முதல் பூரி வரையிலும் பரந்து விரிந்திருக்கும் இந்தியக் கண்டம் முழுவதையும் விட, அவர்களின் வரலாற்றின் பல்லாயிரம் ஆண்டுகாலமாக உள்ள இந்துக்களின் தாயகம் ஒன்றும் குறைவில்லாதது,” என்று ராதா குமுத் முகர்ஜி கூறினார். .
அகண்ட பாரதம் புவியியலின் உண்மை என்று அவர் வாதிட்டார், “இந்தியா இயற்கையால் ஒரு மறுக்கமுடியாத புவியியல் அலகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது உலகின் பிற பகுதிகளிலிருந்து நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் மற்றும் நிலையான எல்லைகளால் குறிக்கப்பட்டது, அதில் எந்த சந்தேகமும் அல்லது நிச்சயமற்ற தன்மையும் இல்லை.” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு
2015ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ், பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தைப் பற்றி கேட்டபோது, அல் ஜசீராவிடம் கூறினார்: “60 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக் காரணங்களுக்காகப் பிரிந்த இந்தப் பகுதிகள் என்றாவது ஒருநாள், மீண்டும், மக்கள் நல்லெண்ணத்தின் மூலம் ஒன்றுபட்டு, அகண்ட பாரதம் உருவாக்கப்படும், என்று ஆர்.எஸ்.எஸ். இன்னும் நம்புகிறது.”
இப்போது, பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால், சில ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் அகண்ட பாரதம் உண்மையில் ஒரு “கலாச்சார யோசனை” என்று கூறியுள்ளனர்.
அனைத்து ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளும் அகண்ட பாரதம் ஒரு “கலாச்சார” நிறுவனம், தேசியம் அல்லது அரசியல் அல்ல, என்பதை வலியுறுத்துகின்றன.
எவ்வாறாயினும், பிரிவினைக்குப் பிறகு உடனடியாக இந்தியாவை “மீண்டும் ஒன்றிணைக்கும்” யோசனையை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. ஆகஸ்ட் 24, 1949 அன்று டில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ் கோல்வால்கர் கூறினார்: “முடிந்தவரை, இந்த இரண்டு பிளவுபட்ட அரசாங்கங்களை இணைக்கும் முயற்சியை நாம் தொடர வேண்டும் - பிரிவினையில் யாரும் மகிழ்ச்சியடையவில்லை.” கோல்வால்கர் செப்டம்பர் 7, 1949 அன்று கொல்கத்தாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இதை மீண்டும் கூறினார்.
ஆகஸ்ட் 17, 1965 அன்று டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், பா.ஜ.க.,வின் முன்னோடியான பாரதிய ஜனசங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது: “இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் தேசியம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல - முஸ்லிம்கள் தேசிய வாழ்வுடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள், அகண்ட பாரதம் இருக்கும். இந்த தடையை [பிரிவினைவாத அரசியலின்] அகற்ற முடிந்தவுடன், இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றிணைப்பது ஒரு உண்மை.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”
ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பிரபலமான எஸ்.டி.சப்ரேயின் ஒரு புத்தகம் கூறுகிறது: “அகண்ட பாரதத்தின் வரைபடத்தை நம் வீட்டில் எப்போதும் நம் கண்களுக்கு முன்பாக வைக்கலாம். அகண்ட பாரதத்தின் வரைபடம் நம் இதயத்தில் இருந்தால், தூர்தர்ஷன், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் பிளவுபட்ட இந்தியாவின் வரைபடத்தைப் பார்க்கும்போதெல்லாம், அகண்ட பாரதத்தின் தீர்மானத்தை நினைவுபடுத்தும் ஒவ்வொரு முறையும் புண்படுவோம்.” என்று உள்ளது.
மறைந்த ஆர்.எஸ்.எஸ். சர்கார்யாவா எச்.வி.சேஷாத்ரி எழுதினார்: “இயற்கைக்கு மாறான பிரிவினையை நீக்குவதற்கான முதல் வாய்ப்பைப் பிளவுபட்ட பகுதிகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. பாரதம், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைப் பொறுத்தமட்டில் அத்தகைய வாய்ப்பை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை.” (பிரிவினையின் சோகக் கதை)
பா.ஜ.க.,வின் நிலைப்பாடு
நரேந்திர மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைப் போல் அகண்ட பாரதம் பற்றி பேசியதில்லை. இருப்பினும், பா.ஜ.க தலைவர்கள் அரசியல் பேச்சுகளில் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னணியிலும், சர்தார் படேலின் பங்களிப்பை நினைவுகூரும் போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அகண்ட பாரதம்” என்று கூறியுள்ளார். இருப்பினும், இந்த உச்சரிப்புகள் பெரும்பாலும் சுதந்திர இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதாகும்.
2021இல் மகாராட்டிராவின் நாந்தேடில் உரை நிகழ்த்திய அமித் ஷா கூறினார்: “நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் பாரத ரத்னா சர்தார் படேல், அவர்களின் (நிஜாமின்) தீய நோக்கங்களை விடாமுயற்சி, வீரம் மற்றும் மூலோபாய திறன் மூலம் இந்தப் பகுதியை அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் வெற்றி பெற்றார்.”
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ராகுல் காந்தியின் இந்தியாவின் வெற்றிநடைப் பயணத்தை யாத்திரையை கேலி செய்தார்: “பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒருங்கிணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.” என்று அவர் கூறினார்.
2014ஆம் ஆண்டு, குஜராத்தின் பா.ஜ.க அரசு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் தினாநாத் பத்ராவின் தேஜோமய் பாரத்(ஒளிமிகுந்த இந்தியா) புத்தகத்தை அரசுப் பள்ளிகளில் துணைப் படிப்பாக அறிமுகப்படுத்தியது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் இலங்கை உள்ளிட்ட இந்தியாவைப் பற்றி பேசும் அகண்ட பாரதம் என்ற அத்தியாயம் புத்தகத்தில் உள்ளது.
தமிழ்நாட்டு ஆளுநர் 27.0532022 அன்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பேசும் போது இந்தியாவில் பல மொழிகள் பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment