கோவிலில் அனைவருக்கும் வழிபாடு என்பது வெறும் பக்திக்கானதல்ல - மனித உரிமைக்கானதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

கோவிலில் அனைவருக்கும் வழிபாடு என்பது வெறும் பக்திக்கானதல்ல - மனித உரிமைக்கானதே!

ஜாதி - மத வெறியர்களை அப்புறப்படுத்துகின்றவரை நம் போராட்டம் ஓயாது - ஒன்றிணைந்து போராடுவோம்!

விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை!

சென்னை, ஜூன் 10  நம்முடைய கோரிக்கை என்பது வெறும் ஜாதிக் கோரிக்கை அல்ல நண்பர்களே - மனித நீதி கோரிக்கை - சமத்துவ கோரிக்கை - அந்தக் கோரிக் கைக்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருப்போம்! திராவிடர் கழகம் சார்ந்த நாங்கள், நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் உங்களோடு கொள்கைக்காக நிற்போம்; ஜாதி வெறியர்களை, மதவெறியர்களை இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்துகின்ற வரையில், நம்மு டைய கோரிக்கை, நம்முடைய குரல் ஓயாது! ஓயாது!!  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை

நேற்று (9.6.2023) மாலை சென்னை வள்ளுவர் கோட் டம் அருகே கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்கக் கோரியும், கோவில்களில் ஜாதி பார்ப்போர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

கருத்தியல், கொள்கைகள்தான் எங்களை எப்பொழுதும் வழிநடத்தும்!

மிகப்பெரிய அளவில் சிறப்போடு ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தக்கூடிய இன்றைய காலகட்டத்தில், அதை உருவாக்குவதற்கும், அதற்கு எப்பொழுதும் துணையாக இருக்கக்கூடிய நாம் அனைவரும் இப்படி ஒரு கோரிக் கையை, மிகுந்த வேதனையோடும், சங்கடத்தோடும் இத்தகைய ஒரு சூழ்நிலையில், ஓர் அறப்போராட்டமாக, விளக்கமாக நடத்தவேண்டிய சூழ்நிலை ஏன் வந்தது? என்ற மனச் சங்கடத்தோடும், இதற்குரிய சக்திகள் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ எப்படியெல்லாம் தங்களுடைய சூழ்ச்சிகளை, தந்திரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை விளக்குமுகமாகவும் சில கருத்துகளை சொல்வதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கின்றோம். வெறும் அரசியல் மட்டும் எங்களை ஒன்றுபடுத்தாது - கருத்தியல், கொள்கைகள் தான் எங்களை எப்பொழுதும் வழிநடத்தும் என்று காட்டக் கூடியதற்கு, அனைவருக்கும் சமூக ரீதியாக தலைமை தாங்கியிருக்கின்ற ஒப்பற்ற திராவிடர் கழகம் எப்படி தி.மு.க.வை இரட்டைக் குழல் என்று வர்ணித்ததோ - அதுபோல, மூன்றாவது குழல் விடுதலை சிறுத்தைகள் என்பதை எப்பொழுதும் பதிவு செய்யக்கூடிய நாங்கள் - அதைத் திறன்பட, ஆய்வோடு, அணைப்போடு, உறுதிக் குரலோடு நடத்திக் கொண்டு வருகின்ற எங்கள் அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய நண்பர்களே, நோக்கவுரையாற்றி உள்ள அருமைப் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் அவர்களே, பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக் குமார் அவர்களே,

அடுத்து உரையாற்றவிருக்கக் கூடிய தோழர்கள் கோபண்ணா அவர்களே, மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் அவர்களே,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வீரபாண்டியன் அவர்களே,

எனக்கு முன் உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர் செந்தில் அவர்களே, அருமைச் சகோதரர் விடுதலை இராஜேந் திரன் அவர்களே, கோவை மருதையன் அவர்களே,

மற்றும் போராட்ட உணர்வோடு இங்கே வந்திருக்கக் கூடிய எனதருமை விடுதலைச் சிறுத்தைகளே, தோழர் களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிலை நிரந்தரமாக மூடினால் 

அதனை வரவேற்கக் கூடியவர்கள் நாங்கள்!

ஒரு விசித்திரமான நிலையில், திராவிடர் கழகம் கோவிலைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருக் கிறது என்பது உலகம் அறிந்தது. 

எனவே, கோவிலை திற என்று சொல்லக்கூடிய அளவிற்குள்ள நிலையில், கோவிலை நிரந்தரமாக மூடினால் அதனை வரவேற்கக் கூடியவர்கள் நாங்கள்.

கோவில்கள் பல நேரங்களில் மூடியிருந்தாலும், கரோனா காலகட்டத்தில் கடவுளையும் சேர்த்துத் தான் ஜமுக்காளம் போட்டு மூடியிருந்தார்கள் பல நேரங்களில். அப்பொழுது யாரும் இப்படித் திறங்கள், திறங்கள் என்று சொல்வதற்குரிய உரிமை யில்லை. ஆனால், இப்பொழுது திறக்கவேண்டும் என்று கோரும் உரிமைக் குரல் இருக்கிறதே, இது பக்திக்காக அல்ல - புத்திக்காக - சமத்துவத்திற்காக - அறிவிற்காக - சுதந்திரத்திற்காக - வாய்ப்புக்காக!

பக்தி போயிருந்தாலும், புத்தி வந்த காரணத் தினால்தான், நாங்கள் மனிதர்கள் அல்லவா! சட்டப்படி எல்லோரும் சமம் அல்லவா! இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாடு என்று அழைக்கிறீர்களே, இதுதான் உங்கள் சுதந்திரத்தினுடைய லட்சணமா? இதுதான் தேர்தல் என்பதினுடைய அறிகுறியா?

‘விடுதலை'யில் அறிக்கை எழுதியிருக்கிறோம்!

தடுக்கிறவர்கள் அந்த நிலையை உருவாக்குவதற்கு என்ன காரணம்? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, நேற்றே இந்தப் பிரச்சினையைப்பற்றி தெளிவான அறிக்கை எழுதி, அந்த அறிக்கை அரசாங்கத்தினுடைய வளையத்திற்கும் போயிருக்கிறது. அந்த அறிக்கையை தோழர் ரவிக்குமார் அவர்களும் பார்த்தார்கள்; அதே போல, எழுச்சித் தமிழர் அவர்களும் பார்த்துவிட்டு, அதற்காக நன்றி சொன்னார்கள்.

மூன்று குழல்களும் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும்!

தோழர்களே, ஒரே ஒரு பிரச்சினைதான். ஏனென்றால், எனக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில்கூட நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் வந்தேன்.

எப்பொழுதும் இந்தக் குழல்கள் ஒன்றாகத்தான் இருக்கும். மூன்று குழல்களும் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும்.

எனவே, இது கொள்கைக் கூட்டணியே தவிர, வெறும் அரசியல் பதவி கூட்டணி அல்ல. அதனால்தான், கொள்கை ரீதியாக வரும்பொழுது, கொள்கை யைப் பாதுகாக்கின்றோம். கொள்கைக்கு முன்னுரிமை கொடுக் கின்றோம். அதனால்தான், நாங்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், குரல் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

கொதித்துப் பேசினார் அருமைச் சகோதரர் சிந்தனைச்செல்வன்

அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலே காவல்துறை மூலமாகவோ அல்லது அதிகார வர்க்கத்தின்மூலமாகவோ நமக்குக் கெடுபிடிகள் வரும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய அருமைச் சகோதரர் சிந்தனைச்செல்வன் அவர்கள் கொதித்துப் பேசினார்; சட்டப்பேரவையில் கொஞ்ச நேரத்தில் பெல் அடித்துவிடுவார்கள்; ஆனால், இங்கே அப்படிப்பட்ட நிலை இல்லை என்றாலும், தலைவர் கொஞ்சம் மூக்கணாங்கயிறு போட்டு இழுத் ததுபோன்று பார்த்தார். அதனால், அவர் அடக்கமாகவும், அதேநேரத்தில் வேகமாகவும் பேசினார்.

நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், இவ்வள வுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய அடிப்படை எங்கே இருக்கிறது?

இதற்குப் பின்னால் 

ஒரு பெரிய சதித்திட்டம் இருக்கிறது!

ஜாதிக் கலவரத்தை உருவாக்கவேண்டும்; மோதல் களை உருவாக்கவேண்டும் என்பது மட்டுமல்ல நண்பர்களே, இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதித்திட்டம் இருக்கிறது. அதை வெறும் சம்பவம் போன்று பார்க் காதீர்கள். ஏதோ ஒரு சம்பவம் நடந்தது என்று சாதாரண மாகப் பார்க்கக் கூடாது; அது மேலெழுந்த பார்வை. கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேண்டும். நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும்.

நம்மிடையே ஒற்றுமையின்மையை உருவாக்கவேண்டும் 

என்று நினைக்கிறார்கள்!

இந்த ஆட்சிக்கு அவமானத்தை, அவமதிப்பை உண்டாக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், இவர்கள் யாரெல்லாம் ஒன்றாக இருக்கிறார்களோ, அவர்கள் மத்தியிலேயே நாம் புகுந்து, அவர்கள் மத்தியிலேயே ஒரு பெரிய ஆத்திரத்தை, கோபத்தை, ஒற்றுமையின்மையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பும், எழுச்சித் தமிழர் அவர் களுடைய வீரம் செறிந்த போர்க்குணமும், அறிவார்ந்த தெளிவும், எந்த நிகழ்ச்சியாக இருந் தாலும், அதைப் புரிந்துகொண்டு அறிவியல் அணுகுமுறையோடு பேசக்கூடிய அந்த வாய்ப்பையெல்லாம் பார்த்தவுடன், எதிரிகளால் செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை.

அடிக்கடி என்ன செய்கிறார்கள்? இங்கே அமர்ந்திருக்கின்ற தலைவர்கள், கட்சிகளைப் பார்த்தீர்களேயானால், இவரைப் பார்த்தால், அவருக்கு மகிழ்ச்சி; அவரைப் பார்த்தால் இவ ருக்கு மகிழ்ச்சி. இவர் அவரோடு பேசிக்கொண் டிருந்தார்; அவர் இவரோடு பேசிக் கொண்டிருந்தார். பொதுப் பிரச்சினைக்கு மட்டும் இவர் அங்கே போவார்! அவர் இங்கே வந்து, உரிமைக் கதவைத் தட்டுவார்!!

எங்களைப் பொறுத்தவரையில் 

மனித உரிமை மிகவும் முக்கியம்!

எந்தக் கதவைத் தட்டுவதையும்விட, கோவில் கதவைத் தட்டுவதுதான் மிக முக்கியம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது. இன்றைக்குக் கோவில் கதவு மூடப்பட்டு இருக்கிறது, தற்காலிகமாக.

எங்களைப் பொறுத்தவரையில், பக்தர்கள்தான் மிக முக்கியம். பக்தி என்பது அடுத்ததுதான். அதைவிட முக்கியம் மனித உரிமை.

இந்தப் பிரச்சினையை யார் முதலில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் - மனித உரிமை ஆணையம் எடுத்திருக்கவேண்டும்.

காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் சொன்னார்கள் - இங்கே நம்முடைய அருமைச் சிந்தனைச்செல்வன் அவர்கள், வருத்தமான ஒரு செய்தியை, ஆத்திரத்தோடு, கோபத்தோடு சொன்னார்.

ஒரே ஓர் அமைப்பு மட்டும் இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றார் தோழர் ரவிக்குமார்!

ரவிக்குமார் அவர்கள், எந்தச் சூழலிலும் பொறு மையை இழக்காமல் எல்லோரையும் ஒன்று திரட்டக் கூடியவர். இந்த விஷயத்தைத் தெரிந்துதான் நான் அறிக்கையை எழுதினேன். அது சரியானது என்றும் அவரும் சொன்னார்.

ஒரே ஓர் அமைப்பு மட்டும் இதில் ஒத்துழைக்க வில்லை. அந்த ஒரே ஓர் அமைப்பு எது? பா.ஜ.க.

அந்த பா.ஜ.க. என்பது என்ன? ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அரசியல் வடிவம்.

தயவு செய்து நீங்கள் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். வேர் எங்கே போகிறது என்பதைப் பாருங்கள். நாம் வேரை விட்டுவிட்டு, கிளைகளை மட்டும் பார்க்கக் கூடாது.

அந்த வேரினுடைய ஊடுருவல் அதிகாரத் துறையில் ஊடுருவியிருக்கிறது; காவல்துறையில் ஊடுருவியிருக் கிறது மிகப்பெரிய அளவில்.

இந்த விஷயத்தை மிகவும் வருத்தத்தோடு சொன் னார் ரவிக்குமார் அவர்கள். நாடு முழுவதும் பிரச்சாரத்திற்குப் போனோம், எந்தப் பாதுகாப்பும் எங்களுக்கு இல்லை என்றார்.

பல நேரங்களில் நாங்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களாக இருக்கவேண்டிய நிலை!

என்னுடைய அனுபவத்தை நான் சொல்கிறேன், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, அதைத் தாண்டிய இலக்கு இருக்கிறது நமக்கு. 

அதைத் தாண்டிய இலக்கு இருக்கின்ற காரணத் தினால்தான், பல நேரங்களில் நாங்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களாக இருக்கவேண்டிய நிலை உள்ளது. காலங்காலமாக இந்த மிகப்பெரிய கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இதைச் செய்யவேண் டியவர்களாக இருக்கிறோம்.

திராவிடர் கழகப் பொதுக்கூட்டமா - ஊர்வலமா, பேரணியா? 

அதற்கு அனுமதி கிடையாது!

உதாரணத்திற்குப் பார்த்தீர்களேயானால், திராவிடர் கழகம் கூட்டம் என்றால், ‘‘வீரமணி வந்தார் என்றால், ஹிந்து மதத்தைப் பற்றி பேசுவார்;  வீரமணியின் கூட்டமா? எந்தக் கூட்டமாக இருந்தாலும் அதற்கு அனுமதி கிடையாது. ஊர்வலமா, பேரணியா? அதற்கு அனுமதி கிடையாது'' என்று தடங்கல் வருகிறது.

எப்படிப்பட்ட ஆட்சி இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா? காவல்துறை தலைமையும் யோசிக்கவேண்டும்.

செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடைபெற்றது. அதில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமையின்படி செய்கிறோம் என்று சொன்னால்கூட - அதற்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.

அதற்குக் காரணம் என்ன சொன்னார்கள்? 

அனுமதி மறுப்பும் - அதற்கு அவர்கள் சொன்ன காரணமும்!

‘‘பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வார்கள்; அதனால், உங்களுக்கு இடையூறாக இருக்கும். அதனால், உங்களுக்கு அனுமதி மறுத்தோம்'' என்று சொன்னார்.

அந்த அதிகாரியிடம் நாங்கள் சொன்னோம், ‘‘மூடநம் பிக்கை ஒழிப்புப் பேரணி நடக்கவிருப்பது ஞாயிற்றுக் கிழமை. அன்றைக்குப் பள்ளிக்கூடமே கிடையாது. மாணவர்கள் வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை'' என்று சொன்னோம்.

ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், அவர்களைக் கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. எப்படி அவர்கள் எவ்வளவு செயலிழந்தவர்களாக, இயந்திரத்தனத்தோடு  நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

எது நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது? 

என்பதை எண்ணிப் பாருங்கள்

இப்பொழுது நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால், இதற்கு ஒரு நீண்ட பின்னணி இருக்கிறது; ஆழமான பின்னணி இருக்கிறது. வெறும் சம்பவத்தை மட்டும் நாம் நினைத்து ஏமாந்துவிடக் கூடாது நண்பர்களே, இதைச் சொல்லவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பலர் உடன்படலாம், உடன் பட மறுக்கலாம்; ஆனால், வெறும் உணர்ச்சிபூர்வமாக மட்டும் இதை அணுகுவதை அனுமதிக்க முடியாது. 

இதை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள். தீண்டாமை ஒழிப்பு என்பதோ, ஜாதி ஒழிப்பு என்பதோ வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையல்ல. எது நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது? என்பதை எண்ணிப் பாருங்கள்.

மனுதர்மப்படி நடக்கவேண்டுமாம் - 

சொல்கிறார் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி!

அண்மையில்கூட உத்தரப்பிரதேச மாநிலம் அல காபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சொல்கிறார், மனுதர்மப்படி நடக்கவேண்டும் என்று.

ஒரு பெண்ணை காதலித்து, பாலியல் வன்கொடுமை செய்ததினால், அந்தப் பெண் கருவுற்றிருக்கிறார். அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறான் அந்த இளைஞன். இப்பிரச்சினை அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு வழக்காக வருகிறது. இளைஞரின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சொல்கிறார், அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால், திரு மணம் செய்துகொள்ள முடியாது என்று.

அதை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆமோதித்து, ‘‘இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ணும் - அந்த இளைஞரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக் கழக ஜோதிடத் தலைவரிடம் 10 நாள் களுக்குள் அளிக்கவேண்டும். இதை ஆய்வு செய்து, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்த் தோஷம் உள்ளதா இல்லையா? என பல்கலைக் கழக ஜோதிடத் துறை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிடுகிறார்.

நல்ல வாய்ப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற் கண்ட உத்தரவுக்குத் தடை விதித்தனர். இதுகுறித்து கடந்த 7 ஆம் தேதி ‘விடுதலை'யில் அறிக்கை எழுதியிருக்கிறேன்.

செவ்வாய் தோஷம் என்று சொல்லி, நம் பெண்களைக் கொச்சைப்படுத்தக் கூடிய அவலம்!

செவ்வாய் கோளுக்கு மனிதர்கள் சென்று வருகின்ற காலம் இது. இப்பொழுதும் செவ்வாய் தோஷம் என்று சொல்லி, நம் பெண்களைக் கொச்சைப்படுத்தக் கூடிய அவலம் இன்றும் இருக்கிறது.

செவ்வாய் கோளுக்குக்கூட போக முடியும்; ஆனால், கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு வருணாசிரம தர்மம் இருக்கிறது என்று சொன்னால், அந்த வருணாசிரம தர்மம் எந்த ரூபத்தில் வந்தாலும், இந்த அணி அதனை ஓட ஓட அடித்து நொறுக்கி விரட்டும் என்று சொல்வதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

‘‘உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே'' என்று சொல்லக்கூடிய உணர்வைத்தான் இங்கே பதிவு செய்கின்றோம்.

எனவே,  நிச்சயமாக இந்தப் பிரச்சினை மீண்டும் மீண்டும் வரக்கூடாது.

கோவில் திருவிழாக்களில் கட்சிக் கொடிகளைக் கட்டுகிறார்கள்!

திருவிழாக்கள் என்று சொன்னாலே, மிகப்பெரிய அளவில் ஜாதிக்கலவரங்களை உருவாக்குவதற்கு அருமையான - இதுதான் மிக முக்கியமான நல்வாய்ப்பு என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வகுப்பெடுக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். கோவில் திருவிழாக்களில் கட்சிக் கொடிகளைக் கட்டுகிறார்கள்.

எங்களைப் போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் வேண்டாம் - கடவுள் நம்பிக்கை உள்ள கட்சிகள் - அரசியல் கட்சிகளின் கொடிகளை கட்டு வதற்கு அனுமதிப்பார்களா? என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

எனவேதான், இத்தகைய அணுகுமுறையை அறவே மாற்றவேண்டும். அதைப்பற்றி சிந்திக்கவேண்டும்.

மனிதர்கள் அத்தனை பேரும் சமம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய மண் தமிழ்நாட்டு மண்!

தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு சொன்னார் - வைக்கம் போராட்டத்தின்போதுகூட சொன்னார்.

அதற்கு முன்னால், நீதிக்கட்சி ஆட்சி எப்படி நடந்தது என்பது வரலாற்றைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். மனிதர்கள் அத்தனை பேரும் சமம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உரு வாக்கிய மண் இந்த மண்.

இந்த மண்ணில், மீண்டும் மீண்டும் இப் படிப்பட்ட ஒரு கலவரத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்த ஆட்சிக்கும் அவமானத்தை உரு வாக்கி, சங்கடத்தை உருவாக்கவேண்டும் என்று சொன்னால், அதற்கு யார் காரணமாக இருந்தாலும், அதற்கு யார் கருவிகளாகப் பயன்பட்டாலும், அதனை மக்களிடம் எடுத்துச் சொல்லுகின்ற பணி - வாதாடுகின்ற கட்டம் தாண்டி, போராடுகின்ற கட்டத்திற்குப் போய்விடக்கூடாது.

மனித உரிமைப் போர் - 

சமத்துவம் வேண்டும் என்கிற போர்!

அந்த வகையில், இது ஒரு மனித உரிமைப் போர்; இதில் அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்பதைத் தாண்டி, மனித உரிமைப் போர் - சமத்துவம் வேண்டும் என்கிற போர் - இன்னுங்கேட்டால், இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு கோரிக்கையை வைப்பதற்கே மற்றவர்கள் வெட்கப்படவேண்டும்.

ஏனென்றால், தானாக சட்டப்பூர்வமாக நடந்திருக்க வேண்டிய ஒரு செய்தி - இன்றைக்கு  அதற்காக இப்படி நாம் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்கிற அளவிற்கு இருக்கக்கூடாது. எனவேதான், உடனடியாக இதற்குரிய பரிகாரத்தைத் தேடவேண்டும்; அதற்குத் தமிழ்நாடு அரசு நிச்சயமாக முன்வரும். அதற்கு எங்களைப் போன்றவர்கள் உறுதியாக இருப்போம் என்பதை அவர் களுக்குத் தெளிவுபடுத்துவோம். நீங்கள் வேறு; நாங்கள் வேறு என்று சொல்ல முடியாது. இதில் முழுக்க முழுக்க ஒன்றாக இருப்போம்.

இதில் கடைக்கோடியில் இருக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், மனித உரிமை அடிப்படையில் ஒன்றாக இருப்போம்.

இதிலிருந்து எப்பொழுது மீட்சி? என்று கேட்பதற்குத்தான் இந்தப் போராட்டம்!

ஏன் சட்டம் தேவைப்பட்டது? இன்னுங்கேட்டால், அனைத்து ஜாதயினரும் அர்ச்சகர் என்கிற பிரச்சினை வருகின்ற நேரத்தில்,  அந்த மசோதாவில் எழுதப்பட்டது என்ன தெரியுமா? கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இளையபெருமாள் தலைமையில், தீண்டாமை ஒழிப் புக்காகப் போடப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று 1969 ஆம் ஆண்டே சொல்லியிருக்கிறார். ஆகவேதான், நாங்கள் இந்த மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்றும், இளையபெருமாளையும், அவ ருடைய பரிந்துரையையும் செய்வதுதான் எங்களுடைய ஆட்சி என்றும் காட்டிய ஓர் ஆட்சி இன்றைக்குத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில், இப்படி ஒரு காட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றால், இதிலிருந்து எப்பொழுது மீட்சி? என்று கேட்பதற்குத்தான் இந்தப் போராட்டம் - இந்த அறிவிப்பு.

இந்த சூழ்நிலை தொடரக்கூடாது; 

தொடர விடமாட்டோம்!

ஆகவே, இந்த சூழ்நிலை தொடரக்கூடாது; தொடர விடமாட்டோம்; அப்படி தொடர்ந்தால், நிச்சயமாக யாருக்கும் அது நல்லதல்ல!

நமக்கு இருக்கின்ற மிகப்பெரிய கவலை 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்தான். 

அதற்காக இந்தியாவை எப்படியெல்லாம் ஒன்று படுத்துவது? 

ஒரு குடையின்கீழ் கொண்டுவருவது?; 

எப்படி ஜனநாயகத்தைப் பாதுகாப்பது? 

எப்படி அரசமைப்புச் சட்டத்தினுடைய உரிமை களைப் பாதுகாப்பது? என்பதற்காக நாள்தோறும் நாங்கள் உழன்று கொண்டிருக்கின்றோம்.

கருத்து வேறுபாடுகளை உருவாக்கவேண்டும் என்பதற்காகத் தந்திரங்களையும், வித்தைகளையும் செய்துகொண்டிருக்கின்றார்கள்

இந்தக் காலகட்டத்தில், நம்மை இப்படியெல்லாம் பிளவுபடுத்தவேண்டும்; பல கருத்து வேறுபாடுகளை உருவாக்கவேண்டும் என்பதற்காகத் தந்திரங்களையும், வித்தைகளையும் செய்துகொண்டிருக்கின்றார்கள் என் பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருப்போம்!

ஆட்சியாளர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவேதான், சரியான அணுகுமுறை தேவை. அதற்கு ஒத்துழைப்பதற்குத் தயாராக உள்ள நிலையில், அதனை எடுத்து விளக் குவதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்பதை எடுத்துச் சொல்லி, எல்லா வகையிலும் நம்முடைய கோரிக்கை என்பது வெறும் ஜாதிக் கோரிக்கை அல்ல நண்பர்களே - மனித நீதி கோரிக்கை - சமத்துவ கோரிக்கை - அந்தக் கோரிக்கைக்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருப்போம்!

அந்த வகையில், திராவிடர் கழகம் சார்ந்த நாங்கள், நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் உங்க ளோடு கொள்கைக்காக நிற்போம்.

இங்கே அருமைச் சிந்தனைச் செல்வன் அவர்கள் சொன்னார், விடுதலை சிறுத்தைகள்தான் இந்தக் கூட்டத்தைப் போடவேண்டுமா? என்கிற நியாயமான கேள்வியை கேட்டார்.

எந்தக் குழல் வெடித்தாலும், 

அது நம்முடைய குழல்தான்!

நாங்கள் போடுவதற்குத் தயாராக இருந்தோம்; நீங்கள் முந்திக் கொண்டீர்கள். எனவே, எந்தக் குழல் வெடித்தாலும், அது நம்முடைய குழல்தான், நம்முடைய திட்டம்தான்.

ஆகவேதான், இதில் யார் முன்னால், யார் பின்னால் என்பது கிடையாது. யார் கொள்கை யாளர்கள் என்பதில், யார் வெற்றி அடைய வேண்டும் - எந்த லட்சியம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

உங்களோடு என்றைக்கும் இருப்போம்!

வீழ்க ஜாதிகள்!

வளர்க சமதர்மம்!!

வளர்க சமத்துவம்!!

அதற்காக எந்தப் போராட்டக் களமாக இருந்தாலும், அந்தப் போராட்டக் களத்திலே நாம் அனைவரும் கைகோர்த்து நிற்போம்- அடுத்து வருபவர்களை வரவேற்கிறோம்.

ஜாதி வெறியர்களை, மதவெறியர்களை இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்துகின்ற வரையில்...

ஜாதி வெறியர்களை, மதவெறியர்களை இந்த நாட் டிலிருந்து அப்புறப்படுத்துகின்ற வரையில், நம்முடைய கோரிக்கை, நம்முடைய குரல் ஓயாது! ஓயாது!!  என்று கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment