புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிள்ளையார் சிலையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிள்ளையார் சிலையா?

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பிள்ளையார் சிலையை  அகற்றியதாக சமூக வலைதளங்களில்  தகவல் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது  சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக் குப் பதிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பான ஒளிப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 60 ஆண்டு காலமாக இருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.  

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பாஜக பொறுப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து இது குறித்து விளக்கம் அளித்தார். மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்படவில்லையென்றும், பிள்ளையார் சிலை உடையவில்லை என்றும் விளக்கம் அளிக்கப் பட்டது. மேலும் விநாயகர் சிலை தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஜாதி மத அடையாளம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த விளக்கத்தை ஏற்று கலைந்து சென்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளக்க அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது - பொய்ச் செய்தி பரப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி கடந்த சில நாட்களாக ஏடுகளிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக வெளிவந்து கொண்டுள்ளது.

முதலில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும் - அரசு அலுவலகங்கள் வளாகங்கள் என்பவை மதச் சார்பற்ற தன்மை கொண்டவை. இது ஆணை மட்டுமல்ல; சட்டமும் கூட!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்னும் அரசு சம்பந்தப்பட்ட வளாகத்தில் குறிப் பிட்ட மதத்தைச் சேர்ந்த கடவுள் சிலை எந்த ஆணையின்கீழ் வைக்கப்பட்டது? எந்தமத சம்பந் தப்பட்ட கடவுளுக்கும் இது பொருந்தக் கூடியதே!

அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த போது  அரசு அலுவலகம் மற்றும்  வளாகங்களில் எந்த மதத் தொடர்புடைய வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் பிள்ளையார் சிலையை வைத்ததே சட்ட விரோதம்.

சட்ட விரோதமாக சிலையை வைத்ததே குற்றம் - இந்த நிலையில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அறவே அகற்றியிருந்தாலும் சட்டப்படி சரியே!

சட்டத்திற்கு முரணான ஒன்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதும், முற்றுகையிடுவதும் கடுங் குற்றமே,  

மதப் பிரச்சினை ஏதாவது கிடைக்காதா? அதை முதலீடாக வைத்து, அரசியல் பண்ணலாமா? கட்சியை வளர்க்கலாமா? என்ற அற்ப முயற்சிகளில் ஈடுபடுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லையெனின் மேலும் மேலும் மதவாத சக்திகள் தங்கள் வாலை நீட்டிக் கொண்டுதான் போகும். காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி வரவேற்கத் தக்கதே.

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - எச்சரிக்கை!

No comments:

Post a Comment