‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 28, 2023

‘90 இல் 80 அவர்தான் வீரமணி' சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரை

 உங்களைப் பாராட்டுவதெல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக - உங்களிடமிருந்து ஊக்கம் பெறுவதற்காக - உங்களைப் போலவே, நாங்களும் உழைக்கவேண்டும் என்பதற்காக!  நீங்கள் தூக்கிப் பிடித்த 

அந்தக் கொடி என்றைக்கும் சரியாமல் எங்கள் தோள்கள் தாங்கும் என்ற உறுதியைத் தருவதற்காக உங்களுக்குத் தோள் கொடுப்பவர்களாக நாங்கள் என்றும் இருப்போம்!

சென்னை, ஜூன் 28 உங்களைப் பாராட்டுவதெல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக - உங்களிட மிருந்து ஊக்கம் பெறுவதற்காக - உங்களைப் போலவே, நாங்களும் உழைக்கவேண்டும் என்பதற்காக. நீங்கள் தூக்கிப் பிடித்த அந்தக் கொடி என்றைக்கும் சரியாமல் எங்கள் தோள்கள் தாங்கும் என்ற உறுதியைத் தருவதற் காக- உங்களுக்குத் தோள் கொடுப்பவர்களாக நாங்கள் என்றும் இருப்போம் என்றார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

 ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’

நேற்று (27.6.2023) மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள  சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

எங்களுக்கு எவ்வளவு வயதானாலும், உங்களுக்கு எவ்வளவு வயதானலும் ரிடையர்மெண்டே இல்லை என்பது போல என்றும் எமக்கு உரிய எங்கள் ஆசிரியர் அவர்களே,

இவ்விழாவிற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்களின் பெருமதிப்பிற்குரிய கவிஞர் அவர்களே,

எத்தனை முறை கேட்டாலும், இன்னொரு முறையும் கேட்கலாம் என்று நினைக்கத் தூண்டுகிற சொற்பொழிவிற்குச் சொந்தக்காரர் திருச்சி சிவா அவர்களே,

இப்பொழுதெல்லாம் சிலர் புதிதாகப் பேசுகிறார்கள்; ஜாதி என்று சொல்லக்கூடாது; குடி என்று சொல்ல வேண்டுமாம். குடிப்பெருமை என்று பேசவேண்டும் என்று சொல்கிறார்கள்.

குடிப்பெருமை, ஜாதிப் பெருமை, சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்த்தேசியம் என்று முழங்கும் நம் சிறுத்தை திருமாவளவன் அவர்களே,

எப்பொழுதும் அணிந்திருப்பது வெள்ளைச்சட்டையாக இருந்தாலும், கருப்பும் சிவப்பும் மட்டுமே உதிக்கின்ற அளவில் உரையாற்றிக் கொண்டிருக்கின்ற தோழர் முத்தரசன் அவர்களே,

நீதிமன்றம்கூட ஏற்றுக்கொள்கிறது, தொலைக்காட்சிகள் இப்பொழுது அழைப்பதில்லை!

நீதிமன்றம்கூட ஏற்றுக்கொள்கிறது, தொலைக்காட்சி கள் இப்பொழுது அழைப்பதில்லை நம் அருள்மொழியை. பெரும்பாலும் அவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று சிலர் கருதுகிறார்கள். தோழர் அருள்மொழி அவர்களே,

வரவேற்புரையாற்றி இருக்கின்ற குமரேசன் அவர் களே, நன்றியுரை கூறவிருக்கின்ற தம்பி வில்வநாதன் அவர்களே, தொகுப்புரை வழங்கிக் கொண்டிருக்கும் தோழர் பிரின்சு அவர்களே,

அரங்கத்தைப் பார்க்கின்றேன், அய்யாவின் வயதிற்கு நெருக்கமாக இருக்கிற அய்யா பலராமன் அவர்களே,  எழுத்தாளர் பா.வீரமணி உள்பட அமர்ந் திருக்கின்ற பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

காலையில் எனக்கு ஆம்பூரில் ஒரு நிகழ்ச்சி. மதியம் வாலாஜாப்பேட்டையில் பேசிவிட்டு, நேரிடையாக அரங் கிற்குப் புறப்படுகிறேன் என்கிறபொழுது, களைப்பாக இல்லையா என்றார்கள்.

கருப்புச் சட்டைகளைப் பார்த்தால் 

களைப்புப் போய்விடும்

களைப்பாகத்தான் இருக்கிறது; ஆனால், கருப்புச் சட்டைகளைப் பார்த்தால் களைப்புப் போய்விடும் என்று சொன்னேன்.

சர்வீசுக்குப் போய்விட்டு வந்த வண்டிபோல உற்சாகமாக இருக்கிறீர்களே!

இங்கே வந்தவுடன் ஆசிரியர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன சொன்னார் என்றால், ‘‘வெளிநாட்டிற் கெல்லாம் போய் வந்திருக்கிறீர்கள்; சர்வீசிற்குப் போய் விட்டு வந்த வண்டி போன்று உற்சாகமாக இருக்கிறீர்கள்'' என்றார்.

நானே, களைத்துப் போய் வந்திருக்கின்றேன். எப் பொழுதும் சிலர் பேசுவதைக் கேட்டால், அதுவே நமக்கு ஊக்கந்தரும். சிலரிடம் பேசினால், இருக்கின்ற ஊக்கமே போய்விடும்.

நமக்கு உடம்பு சரியானதுபோன்று இருக்கும், ஆனால், நம்மிடம் கவலைப்படாதீர்கள் என்பார்கள் சிலர்.

ஆனால், அய்யா சொன்னார், சர்வீசுக்குப் போய் விட்டு வந்த வண்டிபோல உற்சாகமாக இருக்கிறீர்களே என்றார்; நான் உற்சாகமாகிவிட்டேன்.

அதுதான் நண்பர்களே, கருப்புச் சட்டையைப் பார்த்து ஆளுநர்வரைக்கும் பயப்படுவதற்குக் காரணம்.

எனக்கும் அப்படி ஒரு விந்தையான அனுபவம் உண்டு. நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றபொழுது, சட்ட மன்றத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வந்தது. புதிய சட்டமன்றம் அது.

அதைப் பார்ப்பதற்காக நானும், எனது துணைவி யாரும், என் அக்காவும் மூன்று பேரும் போயிருந்தோம்.

அவர்கள் இரண்டு பேரையும் உள்ளே அனுமதித்து விட்டு, எனக்கு உள்ளே போக அனுமதியில்லை என்று சொன்னார் அங்கே இருந்த காவலர்.

ஏனென்று கேட்டேன்.

கருப்புச் சட்டை அணிந்திருப்பதால், சட்டமன்றத் திற்குள் அனுமதிக்க முடியாது என்றார் அந்தக் காவலர்.

திடீரென்று கருப்புச் சட்டையைக் கழற்றி, கருப்புக் கொடியாகக் காட்டிவிடுவார்களாம்

அவர் சொன்னார், திடீரென்று கருப்புச் சட்டையைக் கழற்றி, கருப்புக் கொடியாகக் காட்டிவிடுவார்களாம்.  

அதை  நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது நமக்கு. நான் அப்படி செய்யச் சொல்லவில்லை; அப்படி  ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிறேன்.

உடனே அங்கே சட்டமன்ற உறுப்பினராக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் வந்தார்.

‘‘என்ன அண்ணே சிக்கல்'' என்றார்.

‘‘கருப்புச் சட்டை அணிந்திருப்பதால், காவலர் உள்ளே விடமாட்டேன்'' என்கிறார் என்றேன்.

அவர் அந்தக் காவலரிடம் சொன்னார், ‘‘எங்கள் முதலமைச்சரே, கருப்புச் சட்டைக்காரர்தான்; அவரை தடுத்து நிறுத்தாதீர்கள்'' என்றார்.

அதுதான் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்'' முதல மைச்சராக இருந்தபொழுது எனக்கு நடந்த ஒன்று. இந்தக் கருப்பைப் பார்த்து ஆங்கிலேயர் காலத்திலிருந்து பயம்.

ஒரு கல்லூரியில் அன்பின் காரணமாக மாணவர்கள், தமிழாசிரியர்கள்  என்னை பேச அழைத்திருந்தார்கள்.  அழைக்கும்பொழுதே, தமிழாசிரியர் சொன்னார், ‘‘எங்கள் கல்லூரி முதல்வர் கொஞ்சம் காவி வண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறவர்'' என்றார்.

‘‘அதுபற்றி நமக்கென்ன, பரவாயில்லை பேசலாம்'' என்றேன்.

‘‘கல்லூரி விழாவிற்கு வரும்பொழுது 

கருப்புச் சட்டையோடுதான் வருவீர்களா?’’

அந்த ஊருக்குப் போய் காலையில் இறங்கியவுடன், அந்தக் கல்லூரி முதல்வர் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார்.

‘‘வந்துவிட்டீர்களா, அறையெல்லாம் வசதியாக இருக்கிறதா?'' என்றார்.

‘‘நன்றாக இருக்கிறது; 10 மணிக்கு வந்துவிடுகிறேன்'' என்று நான் சொன்னேன்.

அடுத்த கேள்வி கேட்டார் அவர் தயங்கித் தயங்கி, ‘‘கல்லூரி விழாவிற்கு வரும்பொழுது கருப்புச் சட்டை யோடுதான் வருவீர்களா?'' என்று.

நான் சொன்னேன், ‘‘பனியனோடு வந்தால், அவ் வளவு நன்றாக இருக்காது'' என்று. ஏனென்றால், கருப்புச் சட்டையைத் தவிர, வேறு சட்டைகள் என்னிடம் அப்பொழுது கிடையாது.

கருப்புச் சட்டை அவ்வளவு வேலை செய்திருக்கிறது!

இப்படி, காலங்காலமாக கருப்பைப் பார்த்து எதற் காகப் பயப்படுகிறார்கள் என்றால், கருப்புச் சட்டை அவ்வளவு வேலை செய்திருக்கிறது.

அவர் மேல் மட்டும் நாம் தப்பு சொல்லக்கூடாது. நாம் என்ன சும்மா இருந்தோமா? ஏறத்தாழ ஒரு நூற் றாண்டாக இந்தக் கருப்புச் சட்டைகள் இந்த மண்ணில் செய்திருக்கின்ற கலகம் அத்தனை எளிதானதல்ல.

இன்றைக்குக் காலையில், காரைக்குடியிலிருந்து அண்ணன் திராவிடமணி அனுப்பியிருக்கின்ற ஒரு துண்டறிக்கையை பிராட்லா எனக்கு அனுப்பியிருக் கிறார்.

1945 இல் இராமநாதபுர மாவட்ட 

திராவிடர் கழக முதல் மாநாடு!

காரைக்குடியில் நடந்த இராமநாதபுர மாவட்ட திராவிடர் கழக முதல் மாநாடு - 1945, ஏப்ரல் 8.

அந்தத் துண்டறிக்கையைப் படித்துக்கொண்டு வந்தால், அய்யா பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் - இவர்கள் போக, இளைஞர்கள் பேசியிருக்கிறார்கள்.

23 வயது இளைஞர், அந்த மாநாட்டில் கொடியேற்று பவராக இருந்திருக்கிறார், அந்த இளைஞரின் பெயர் க.அன்பழகன்.

21 வயது இளைஞர் பேசுகிறார், அவர் பெயர் மு.கருணாநிதி.

ஒரு 11 வயது சிறுவனும் பேசியிருக்கிறார், அவர் பெயர் கி.வீரமணி என்று போட்டிருக்கிறது.

1945, இத்தனைக்கும் 11 வயது நிறைவடையவில்லை. இன்னும் அதில் எங்களுக்குத் தொடர்பு இருக்கிறது. அதன் செயலாளர்களில் ஒருவரின் பெயர் ந.இராமசாமி. அவர் வேறு யாருமல்ல - என்.ஆர்.சாமி என்று பிற்காலத் தில் அறியப்பட்ட பிரின்சு, பிராட்லா ஆகியோரின் தாத்தா.

இராம.சுப்பையா 

என்னுடைய அப்பா!

அதற்குக்கீழே ஒன்று இருக்கிறது - விளம்பர அதிகாரி இரண்டு பேர். அதில் ஒருவர் இராம.சுப்பையா. அவர் என்னுடைய அப்பா.

எங்கள் அப்பா அதிகாரியாக இருந்தது அங்கே மட்டும்தான் என்று நினைக்கிறேன். அவர் எந்த வேலைக்கும் போனதில்லை.

விளம்பரக் குழு என்று போடவில்லை; விளம்பர அதிகாரி என்று போட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து எங்கள் அப்பா மகிழ்ச்சியடைந்திருப்பார்.

என்னுடைய அப்பா, சட்டமன்ற மேலவையில் உறுப் பினராக இருந்தபொழுது, அவர் பெரிய மகிழ்ச்சி யடைவார்.

எம்.எல்.சி.க்கு என்று ஒரு பாஸ் உண்டு. அதை வைத்துக்கொண்டுதான் அவர் பேருந்தில் பயணம் செய்வார். எந்தப் பேருந்து நடத்துநரும் அந்தப் பாஸைப் பார்த்ததில்லை.

இது என்ன பாஸ்? என்று கேட்டால், எம்.எல்.சி., பாஸ் என்பார்.

எல்லோரிடமும் என்ன சொல்வார் என்றால், ‘‘இதோ பாருங்கள், நான் எந்தப் பேருந்தில் வேண்டுமானாலும் பயணம் செய்வதற்குக் கலைஞர் பாஸ் கொடுத்திருக் கிறார்'' என்று மகிழ்ச்சியடைவார்.

எனவே, விளம்பர அதிகாரி என்பதற்கும் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று கருதுகிறேன்.

11 வயதில் தலைவர்கள் நிறைந்த மாநாட்டில் பேசியவர் நம்முடைய ஆசிரியர்

11 வயதில், காரைக்குடியில் நடந்த தலைவர்கள் நிறைந்த மாநாட்டில் பேசியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன், அப்பா சொல் லுகின்ற நினைவிலிருந்து, அவருடைய குறிப்பிலிருந்து சொல்லுகிறேன் - 1932 அல்லது 1933 என்று ஞாபகம் என்கிறார்.

எதற்காக என்றால், 90 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தக் கருப்புச் சட்டை எத்தனை கலகம் செய்திருக்கிறது என்பதற்காகத்தான்.

காரைக்குடியில் ஆதிதிராவிடர் மாநாடு

1932 அல்லது 1933 என்று ஞாபகம் என்று அப்பா சொல்கிறார், காரைக்குடியில் ஆதிதிராவிடர் மாநாடு - சுயமரியாதை இயக்கத்தின் சார்பில்.

ஆதிதிராவிடர் என்பதை, 1933 ஆம் ஆண்டில் எல்லாம் காரைக்குடியில் நினைத்தே பார்க்க முடியாது; அது ஒரு வைதீகக் கோட்டை.

என்னாயிற்று என்றால், யார் ஒருவரும், எந்த ஓர் அரங்கத்தையும், இடத்தையும் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்.

சரி, தெருவில் மாநாடு போடலாம் என்றால், காவல் துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் மாநாடு போட்டீர்கள் என்றால், கலகம் வந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

கடைசியாக, ஏரோப்பிளேன் ஆவுடையப்பச் செட்டியார் என்ற ஒருவர் இருந்தார்; அவரும், அவரு டைய சகோதரர் சொக்கலிங்கமும் அவர்களுடைய இடத்தில் சந்தைப்பேட்டைக்கு அருகில் மாநாடு நடத்துமாறு சொன்னார்கள்.

பணிகள் நடந்தன; மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த ஊருக்கு நகர்மன்றத் தலைவராக இருந்த சிதம்பரம் செட்டியார், அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்;

‘‘எவனாவது பள்ள பறையரையல்லாம் சேர்த்துக் கொண்டு மாநாடு போட்டால், பந்தலைக் கொளுத்தி விடுவோம்'' என்று சொல்கிறார்.

என்னுடைய அப்பா அன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. பட்டுக்கோட்டை அழகிரியை அழைத்து வந்து, மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவோம் என்று நடத்தியிருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரியின் 

மிரள வைத்த பேச்சு!

காரைக்குடியில், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் மிகுந்திருக்கின்ற ஊரில் அந்த அழகிரி என்ன பேசினார் என்றால், 

‘‘ஏ, சிதம்பரம் செட்டி, நீ மாநாட்டுப் பந்தலை கொளுத் துவேன் என்று சொன்னீயாமே, அதற்கு முன்னாடி உன்னைக் கொளுத்திவிட்டால் என்ன செய்வாய்?'' கேட்டவுடன், 

என் அப்பா அந்தக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார், அழகிரி கூட இருந்த எங்கள் கட்சிக்காரர்களுக்கே பயமாகப் போயிற்று என்று.

அடுத்த நாள் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அந்த மாநாட்டிற்குத் தடை வாங்கி விட்டார்கள்.

டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியன்

திராவிட இயக்கம் பட்டியலின மக்களுக்கு என்ன செய்தது என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.

1933 இந்தப் போராட்டம்.

பாதுகாப்பாக இருக்கிறவர், டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியன் அவர்கள்.

உடனடியாக  அவரிடம் போய் இதைச் சொன்ன வுடன், ‘‘விடு சுப்பையா இது ஒரு பேச்சா? திருப்பத்தூர் கோர்ட்டில்தானே தடை கொடுத்தான்; மதுரை கோர்ட் டில் மனு போடு'' என்றார்.

பிறகு தடை நீக்கி வந்து, அந்த மாநாடு அங்கே நடந்தது என்பது வரலாறு.

இன்றைக்கும், என்றைக்கும் ஆசிரியராக இருக்கின்ற நம்முடைய தலைவர் ஆசிரியர்!

அப்பொழுது அப்பா நினைவு கூர்ந்து சொல்கிறார், அதற்குப் பிறகு 1945 ஆம் ஆண்டில் ஒரு மாநாடு நடந்தபொழுது, ஒரு சின்னப் பையன் அவ்வளவு வீரமாகப் பேசினார் என்று. அந்த சின்னப் பையன்தான், நமக்கு இன்றைக்கும், என்றைக்கும் ஆசிரியராக இருக்கின்ற நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இப்படி வளர்ந்த இயக்கம் இது.

‘திராவிட நாடு’ இதழுக்கு 

நிதி வழங்குகின்ற கூட்டம்

1943 ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம், 27 ஆம் தேதி, கடலூரில் ஆசிரியர் திராவிடமணி அவர்களால் தயாரிக்கப்பட்டு, நம்முடைய ஆசிரியர், அய்யாவிற்கும், அண்ணாவிற்கும் முன்னிலையில் பேசினார். அந்தக் கூட்டம் எதற்காக என்றால், 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் ‘திராவிட நாடு' தொடங்கப் பெற்றிருக் கிறது. அந்தத் ‘திராவிட நாடு' இதழுக்கு நிதி வழங்குகின்ற கூட்டம்.  எவ்வளவு நிதி என்றால் 103 ரூபாய் என்பது சாதாரணமானதல்ல.

80 ஆண்டுகளுக்கு முன்பு, 103 ரூபாய் என்றால், இன்றைக்கு பல லட்சம் ரூபாய்க்கு சமம்.

அப்படி ஒரு நிதி கொடுக்கின்ற கூட்டத்தில், ஒரு சிறிய ஸ்டூலின்மீது ஏறி நின்றுதான் ஆசிரியர் பேசினார். இன்றைக்குத் தமிழ்நாடே ஒரு பெரிய நாற்காலியாக நின்று, அதன்மேல் ஏறி நின்று ஆசிரியர் பேசிக் கொண்டிருக்கின்றார்.

முத்தரசன் அவர்கள் சொன்னதுபோல, தந்தையும் - மகனும்போல - பிள்ளைகளும்போல நாம் கூடியிருக்கின்றோம். இது வெறும் அரசியல் விழா மட்டுமல்ல. அன்பு செறிந்த நெஞ்சார்ந்த, ஒருவர் ஒருவர் மகிழ்ந்து, பாராட்டி கற்றுக்கொள்கின்ற ஒரு விழா!

உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக - உங்களிடமிருந்து ஊக்கம் பெறுவதற்காக...!

அருள்மொழி சொன்னதுபோல, உங்களைப் பாராட்டுவதெல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக - உங்களிடமிருந்து ஊக்கம் பெறுவதற்காக - உங்களைப் போலவே, நாங்களும் உழைக்கவேண்டும் என்று விரும்புவதற்காக.

நீங்கள் தூக்கிப் பிடித்த அந்தக் கொடி என்றைக்கும் சரியாமல் எங்கள் தோள்கள் தாங்கும் என்ற உறுதியைத் தருவதற்காக.

அதுதான் இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம்.

எப்பொழுதும் நீங்கள் - நாங்கள் - எங்களுக்குப் பின்னால் பிள்ளைகள் என்ற அது தொடர்ச்சி.

என்ன செய்துகொண்டிருக்கிறார் நம்முடைய ஆசிரியர் - தம்பி பிரின்சு அவர்களுடைய தொகுப்புரையில், இன்று காலையில் வந்திருக்கின்ற ‘விடுதலை’யில் கவிச்சுடர் கவிதைப்பித்தனின் கவிதை வரிகளில் முதல் சில வரிகளைச் சொன்னார்.

உங்களுக்குத் தோள் கொடுப்பவர்களாக நாங்கள் என்றும் இருப்போம்!

இடையில் வருகின்ற சில வரிகளைச் சொல்லி என்னுரையை நிறைவுச் செய்கிறேன்.

அவர் எழுதுகிறார், ஆசிரியர் என்ன செய்கிறார் என்றால்,

“‘அனைவருக்கும் அனைத்தும்''' எனச் சூளுரைப்பவர்!

ஆதிக்க ஆரியத்தின் வேரறுப்பவர்!

முனைமுகத்தில் இனஉரிமைப் போர்தொடுப்பவர்!

முதல்வர்எங்கள் “ தளபதி”க்குத் தோள்கொடுப்பவர்!

இந்த நான்கு வரிகள் போதும்.

உங்களுக்குத் தோள் கொடுப்பவர்களாக நாங்கள் என்றும் இருப்போம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் போசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment