தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையோடு கழகத்தையும், பத்திரிகையையும் ஆசிரியரிடத்தில் கொடுத்தாரோ, அந்த நம்பிக்கையில் கடுகளவும், எள் முனையளவும் சோரம் போகாமல்,பெரியாரின் நம்பிக்கைக்குரிய நாயகன் என்பதை இன்றுவரையில், 90 வயதிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்
சென்னை, ஜூன் 30 தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையோடு கழகத்தையும், பத்திரிகையையும் ஆசிரியரிடத்தில் கொடுத்தாரோ, அந்த நம்பிக்கையில் கடுகளவும், எள் முனையளவும் சோரம் போகாமல், பெரியாரின் நம்பிக்கைக்குரிய நாயகன் என்பதை இன்று வரையில், 90 வயதிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக் கிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள்.
‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’
கடந்த 27.6.2023 அன்று மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
ஆசிரியர் அவர்களுக்கு நடக்கவிருக்கக்கூடிய பாராட்டு விழாவிற்குத் தலைமையேற்று சிறப்புற நடத்திக் கொண்டிருக்கின்ற மரியாதைக்குரிய கவிஞர் அவர்களே,
நம் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்று, வர வேற்புரை நிகழ்த்திய திராவிடர் கழகத்தின் பொருளாளர் பேரன்பிற்குரிய வீ.குமரேசன் அவர்களே,
ஆசிரியர் அவர்களை வாழ்த்தி, பாராட்டி பல நல்ல செய்திகளை இங்கே வழங்கவிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் திருச்சி சிவா எம்.பி., அவர்களே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் பேரன்பிற்குரிய தோழர் திருமா அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேரன்பிற்குரிய சுப.வீ. அவர் களே, திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் பேரன் பிற்குரிய வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, நன்றியுரை கூறவிருக்கின்ற இரா.வில்வநாதன் அவர்களே மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் பலராமன் அவர்களே, அய்யா புலவர் வீரமணி அவர்களே, தங்கப்பன் அவர்களே,
நிறைவாக ஏற்புரை நிகழ்த்தவிருக்கின்ற மரியாதைக் குரிய அய்யா ஆசிரியர் அவர்களே,
பெருந்திரளாகப் பங்கேற்று இருக்கின்ற தோழர்களே, நண்பர்களே, ஊடக நண்பர்களே, உங்கள் அனை வருக்கும் முதலில் எனது அன்பான வணக்கத்தினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்ப உறுப்பினர் என்று
பெருமிதத்தோடு குறிப்பிட்டார்!
விழாத் தலைவர் அவர்கள் குறிப்பிடுகின்றபொழுது, குடும்ப உறுப்பினர் என்று பெருமிதத்தோடு குறிப் பிட்டார். இப்படி குறிப்பிடுவதற்காக நான் பெருமகிழ்ச் சியடைகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்ப உறுப்பினர் என்றால், எல்லோருக்கும் முன் னாலே வரவேண்டும்; நான் முன்னாலேயே வந்துவிட் டேன். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. நிகழ்ச்சி முடிந்து, எல்லோரையும் வழியனுப்பி வைத்துவிட்டு, பிறகுதான் செல்லவேண்டும்; அதுதான் குடும்ப உறுப்பினர். ஆனால், இன்றைக்கு வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் - கட்சிக்கு வளர்ச்சி நிதி வாங்குகிற நிகழ்ச்சி - வடசென்னை மாவட்டச் செயலாளர் வெங்க டேசன் என்னை அழைத்துப் போவதற்காக இங்கே வந்திருக்கிறார்.
ஆகவே, நான் பேசிவிட்டுச் செல்வதற்காக மன்னிக்க வேண்டும் என்று முதலில் உங்களை அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை
எனக்கு வழங்கினார்
எனது தந்தைக்கு இங்கே விழா நடைபெறுகிறது; மகன் வாழ்த்துரை வழங்க வந்திருக்கிறேன். இது இங்கே மட்டுமல்ல இதனை பலமுறை சொல்வதற்குக் காரணம், அவ்வப்பொழுது, அரசியல் நிகழ்ச்சிகளிலும் சரி, வேறு பல எங்கள் சொந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி - உரிய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டிக் கொண்டிருக் கின்ற - இன்றைக்கு வந்தபொழுதுகூட, பல விஷயங் களைக் கேட்டு, அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்கிற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங் கினார்.
அதுவேதான், நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் தந்தை என்று குறிப்பிடுவதற்குக் காரணம்.
தமிழ்நாட்டு மூத்த தலைவர்களில்
ஆசிரியரும் ஒருவர்!
10 வயதில் பொதுவாழ்வைத் தொடங்கி, 80 ஆண்டுகாலம் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில், கொள்கை யில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல், அந்தத் திசை நோக்கி வெற்றிப் பயணத்தை மேற்கொண்டி ருக்கின்ற மகத்தான தமிழ்நாட்டு மூத்த தலைவர்களில் ஆசிரியரும் ஒருவர்.
அரசியலில் தோழர் சங்கரய்யாவிற்கு வயது 102; தோழர் நல்லகண்ணுவிற்கு 98 வயது; அதற்கடுத்ததாக மூன்றாவதாக இருப்பது நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான்.
10 வயதிலிருந்து தொடர்ச்சியாக எத்தகைய பணி களை மேற்கொண்டார் என்கிற விவரங்களை வரவேற் புரையில் குமரேசன் அவர்களும், தலைமையேற்று விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்ற கவிஞர் அவர்களும் இங்கே ஏராளமான பல செய்திகளைத் தெரிவித்தார்கள்.
10 வயதிலிருந்து இன்று 90 ஆவது வயது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அவரை 90 வயது மூத்தவர் என்று குறிப்பிட்டால், அதை ஏற்க அவர் மறுக்கிறார்.
சைபரை தூக்கி 9-க்கு முன்னால் போடு; பின்னால் போடாதே என்று - 10 வயதில் எப்படி மேடை ஏறினாரோ, அதே சுறுசுறுப்போடுதான் இன்றைக்கும் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இடைவிடாமல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்-
இடைவிடாமல் எழுதுகிறார் -
இடைவிடாமல் கூட்டங்களில் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல், திராவிடர் கழகத்தில் இருக் கின்ற தலைவர்கள், தொண்டர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் இவர்களையெல்லாம் அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக, தத்துவ ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில், மிகுந்த அக்கறையோடு தொடர்ந்து பயிற்சி முகாம்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
தொண்டர்களை, ஊழியர்களை வளர்த்தெடுப்பது அரசியல் கட்சிகளுடைய தலையாய பணி!
அரசியல் கட்சிகளில் இருக்கின்ற தொண்டர்களை, அந்தக் கட்சி, அந்தத் தொண்டர்களை, தங்களுடைய தேவைக்காக, கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளும்; வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள் ளும். அவை மட்டுமே செய்தால் போதுமானதல்ல, தங்களுடைய கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்களைத் தொண்டர்களை, ஊழியர்களை வளர்த்தெடுப்பது அந்த அரசியல் கட்சிகளுடைய தலையாய பணி. இல்லை யென்றால், அது வெறும் சுயநலமாகப் போய்விடும்.
தந்தை பெரியார் காலந்தொட்டு, திராவிட இயக் கத்தில் அந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேடையில் இருக்கின்ற தோழர் திருமா, அதே போன்று தன்னோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களையெல்லாம் அரசியல் ரீதியாக வளர்த் தெடுக்க வேண்டும் என்பதில், மிக கவனமாக, உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படும். அதேபோன்று திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தொகுதி வாரியாக கூட்டங்கள், கொள்கை களை குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும் என்கிற அக்கறையோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அதில் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்தான் பெரும்பகுதி கூட்டங்களில் பங்கேற்பதை ‘முரசொலி'யில் காண முடிகிறது.
தமது கட்சி வளரவேண்டும்; தமது கட்சியில் ஏராளமான தொண்டர்கள் சேரவேண்டும் என்பது மட்டுமல்ல, தனது தொண்டர்களை ஆக்கப்பூர்வமாக, அரசியல் ரீதியாக வளர்த்தெடுப்பதும் அந்த அரசியல் கட்சிகளினுடைய கடமையாகும்.
அத்தகைய கடமைகளை ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
‘விடுதலை' பத்திரிகையைப்பற்றி இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நான் வார இதழாக மாற்றப்போகிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டபொழுது, அதிர்ச்சி தெரிவித்த ஆசிரியரிடத்தில், ‘‘நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?'' அப்படி பொறுப்பேற்றுக் கொண்டால், தினசரியாக நடத்தலாம்'' என்று சொன்னார்.
தேவையற்ற செய்தி எதுவும்
‘விடுதலை’ பத்திரிகையில் வராது!
அதேபோன்று ஆசிரியர் அவர்களும் பொறுப்பேற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக ‘விடுதலை' பத்திரிகையினுடைய ஆசிரியராகப் பணியாற்றுவது மட்டுமல்ல, ‘விடுதலை' பத்திரிகையில் வருகின்ற எந்த செய்தியும், தேவையற்ற செய்தி எதுவும் ‘விடுதலை' பத்திரிகையில் வராது.
எல்லாம் ஆக்கப்பூர்வமான செய்திகள். இன்றைக்கு சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தப் பட்டமளிப்பு விழாவை நடத்தவேண்டும் என்று நம்முடைய அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் சென் னையில் மிகப் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தினை நடத்திய பிறகுதான், இன்றைக்கு ஆளுநர், மாணவர் களுக்குப் பட்டம் வழங்கப் போகிறார்.
அந்தப் பல்கலைக் கழக நிர்வாகத்தால் ஒரு சுற்ற றிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அது ஏதோ, காவல் துறை சொல்லி வந்ததுபோன்று இருக்கிறது. ஏன் காவல் துறை அப்படி சொல்லியது என்று எனக்குப் புரியவில்லை.
ஆளுநருக்குக் கருப்பு என்றால்,
அவ்வளவு பயம்!
பட்டமளிப்பு விழாவிற்கு வருகின்றவர்கள் யாரும் கருப்புச் சட்டை அணிந்து வரக் கூடாது; கருப்பு அங்கி அணிந்து வரக்கூடாது. ஏனென்றால், ஆளுநருக்குக் கருப்பு என்றால், அவ்வளவு பயம். அவருக்கு சனாதனம் மட்டும்தான் பிடிக்கும்.
அதுகுறித்துதான் ‘விடுதலை'யில் வந்த செய்தி சொல்கிறது. கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று சொல்கிறீர்களே, கருப்புத் துப்பட்டா, கருப்பு அங்கி அணிந்து வரக்கூடாது என்று சொல்கிறீர்களே, தலைமுடி கருப்பாக இருக்கிறதே என்று கேட்கிறது.
தலைமுடி கருப்பாக இருப்பதைவிட, கண்களின் கருவிழி கருப்பாக இருக்கிறதே, அதற்கு என்ன செய்வது? என்று ‘விடுதலை'யில் செய்தி வந்திருக்கிறது.
இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியான செய்தியாகும்.
இப்படி ஒரு சுற்றறிக்கையை பல்கலைக் கழக நிர் வாகம் அனுப்பியிருக்கிறது என்றால், அது மிகப்பெரிய தவறாகும். அது காவல்துறையின் அடிப்படையில் என்பதுபோன்று இருக்கிறது. இவையெல்லாம் கவனிக் கப்படவேண்டியவை.
இதுபோன்ற செய்திகள் - கோவில் இருக்கிறது - சாமி கும்பிடுகிறோமோ, கும்பிடவில்லையோ அது வேறு விஷயம். சாமி கும்பிட்டாலும், கும்பிடவில்லையானாலும், கோவிலுக்கு கல்லு தூக்குவது, மண் தூக்குவது, தண்ணீர் தூக்குவது, இரும்புக் கம்பி தூக்குவது, சிமெண்ட் தூக்குவது, அடுக்குவது, தட்டுவதையெல்லாம் செய்வது நம்முடைய வகையறாக்கள்தான். ஆனால், கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அவர்களால் கோவிலின் உள்ளே நுழைய முடியாது.
தந்தை பெரியார் அவர்களின்
நெஞ்சில் தைத்த முள்!
இப்படித்தான் காலங்காலமாக இருக்கிறது. இதைத் தான் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள். அவர் கடைசியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் போராட்டம் தான். அதிலிருந்து விடுவிப்பதற்கான பல போராட்டங்கள் - கடந்த காலத்திலிருந்து தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அது இன்றைக்கும் முற்றுப் பெறவில்லை.
நேற்று நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதுபோன்ற செய்திகள் - தந்தை பெரியாருடைய சுற்றுப்பயணமாக இருக்கட்டும் - அவரால் உரு வாக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட ஆசிரியர் சுற்றுப்பயண மாக இருக்கட்டும் - ஆசிரியர் அவர்கள் அண்மையில் என்னிடம் ஒரு செய்தி சொன்னார்.
‘‘திறமையானவனைத் தேடாதீங்க; நம்பகமானவனைத் தேடுங்கள்!’’
ஒரு பிரச்சினையில், ‘‘திறமையானவனைத் தேடா தீங்க; நம்பகமானவனைத் தேடுங்கள்'' என்றார்.
இது எவ்வளவு ஆழமான விஷயம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
திறமையானவன் முக்கியமல்ல; நம்பகமானவன்தான் முக்கியம். தந்தை பெரியாருக்கு நம்பகமானவர் யார்? ஆசிரியர் வீரமணிதான்.
‘பெரியாரின் நம்பிக்கைக்குரிய நாயகன்' என்பதை இன்றுவரையில், 90 வயதிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்!
தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையோடு கழகத்தையும், பத்திரிகையையும் இவரிடத்தில் கொடுத் தாரோ, அந்த நம்பிக்கையில் கடுகளவும், எள் முனை யளவும் சோரம் போகாமல், பெரியாரின் நம்பிக்கைக்குரிய நாயகன் என்பதை இன்றுவரையில், 90 வயதிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
பெரிய திறமையானவனைத் தேடாதீர்கள்; நம்பக மானவனைத் தேடுங்கள்; அவனுக்குத் திறமையில்லை என்றால், திறமையை நாம் உருவாக்கிவிடலாம் என்று சொன்னார்.
உண்மையிலேயே அது ஒரு மிகப்பெரிய செய்தி. ஒரு அனுபவத்தை எனக்கு அதன்மூலமாகத் தந்தார்.
அதேபோன்று ‘ஜனசக்தி' பத்திரிகை நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது.
ஆசிரியர் அவர்கள் கேட்டார், ‘‘எப்படி போகிறது?'' என்று.
‘‘நட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது'' என்றேன்.
‘‘எதற்காக நடத்துகிறீர்கள், நட்டத்தில் போகும் போது?'' என்றார்.
‘‘நட்டத்தில்தான் போகுது; எல்லோரும் நடத்துங்கள் என்று சொல்வதால் நடத்துகிறோம். வற்புறுத்தலால் நடத்திக் கொண்டிருக்கின்றோம்'' என்று கூறினேன்.
எங்களுடைய அன்றைய பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி கேட்டார், ‘‘பத்திரிகை எப்படி போகுது?'' என்று.
‘‘மாதம் 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது'' என்றேன்.
‘‘நாளிதழாக ஏன் நடத்துகிறீர்கள்; வாரப் பத்திரிகையாக மாற்றவேண்டியதுதானே'' என்று அவர் சொன்னார்.
தோழர்கள் எல்லாம் ‘‘நட்டத்தை சரி செய்துவிடலாம், நாளிதழாக நடத்துங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள் என்றேன்.
‘‘யாராவது பணம் கொடுக்கிறார்களா?'' என்று கேட்டார் அவர்.
‘‘யாரும் பணம் கொடுக்கவில்லை, யோசனை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னேன்.
உடனே பொதுச்செயலாளர், ‘‘இல்லை, நிறுத்தி விடுங்கள்'' என்று சொன்னார்.
சரி என்று அவரிடம் ஒப்புக்கொண்டேனே தவிர, அதை வாரப் பத்திரிகையாக மாற்றவில்லை.
பிறகு ஆசிரியர் அவர்களை திடலில் ஒருமுறை சந்தித்து உரையாடுகிறபொழுது, ‘‘பத்திரிகை எப்படி போகிறது?'' என்று கேட்டார்.
‘‘நாளிதழாகத்தான் போகிறது; நட்டத்தில்தான் போய்க் கொண்டிருக்கிறது'' என்று சொன்னேன்.
‘‘துணிச்சலாக வாரப் பத்திரிகையாக கொண்டு வருவதற்கு முடிவெடுங்கள்!’’
‘‘துணிச்சலாக வாரப் பத்திரிகையாக கொண்டு வரு வதற்கு முடிவெடுங்கள்'' என்று சொன்னார்.
ஆசிரியர் அவர்கள் சொன்னவுடன்தான், வார பத்திரிகையாகக் கொண்டுவர முடிவெடுத்தேன்.
எங்கள் பொதுச்செயலாளர் சொன்னபொழுது, தயங்கினேன்; ஏனென்றால், விமர்சனங்கள் வருமோ? என்று.
ஆசிரியர் அவர்கள் ஆக்கப்பூர்வமாக அந்த யோச னையை சொன்னார். ‘‘கட்சிக்காரர்களுக்காக நடத்து கின்ற பத்திரிகை ‘ஜனசக்தி', ‘விடுதலை'. வெளியில் உள்ளவர்கள் யாரும் இவற்றை வாங்கமாட்டார்கள். கட்சிக்காரர்களுக்காக நாம் நடத்துகின்றோம். நட்டத்தில் நடத்த முடியாது. அய்யா ஓரளவிற்கு சொத்தெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார்; நாங்கள் துணிச்சலாக நடத்திக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் எப்படி நடத்துவீர்கள்? உண்டியல் குலுக்கிக் கொண்டு எப்படி நீங்கள் பத்திரி கையை நடத்துவீர்கள்? துணிச்சலாக முடிவெடுங்கள்'' என்று எனக்கு தைரியத்தை ஊட்டியது ஆசிரியர் அவர்கள்தான்.
அதற்குப் பிறகுதான் எங்கள் கட்சியில் நான் தைரியமாகப் பேசினேன்.
இப்பொழுது கூட ஆசிரியர் அவர்கள் கேட்டார், ‘‘பத்திரிகை எப்படி போய்க் கொண்டிருக்கிறது? எவ் வளவு பத்திரிகை போய்க் கொண்டிருக்கிறது? நல்லா நடத்துங்கள்'' என்று ஆலோசனைகளை வழங்கினார்.
அதன் நோக்கம் என்ன?
சுற்றுப்பயணமாக இருக்கட்டும்; ‘விடுதலை'யில் அவருடைய அறிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல!
இப்படி செய்வது எதற்காக என்றால், ஒரு சமூக மாற்றத்திற்காக, மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்கிற மிக உயரிய நோக்கம் உடையது.
மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. ஏனென்றால், நம்முடைய நாட்டைப்பற்றி எல்லோருக்கும் தெரியும்.
பல மதங்களைக் கொண்ட நாடு; 4 ஆயிரத்து
600-க்கும் மேற்பட்ட ஜாதிகளை மேற்கொண்ட நாடு; பல்லாயிரம் சாமிகளைக் கொண்ட நாடு; அதற்கு வக் காலத்து வாங்குகின்ற பல்லாயிரம் அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடு.
நாள்தோறும் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கு கிறார்கள். இப்பொழுது ஒருவர் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
திருமாவிடம் சொன்னேன், ‘‘அவர் எனக்கு ஓர் ஆலோசனையை சொல்லியிருக்கிறார்; 6 மாதத்திற்கு முத்தரசன் பேசாமல் இருந்தால், கம்யூனிஸ்ட் கட்சி 6 அடி உயரும்'' என்கிறார் புதிதாகக் கட்சியைத் தொடங் கியிருப்பவர். முத்தரசன் தி.மு.க. கிளைச் செயலாளராக செயல்படுகிறார்; கட்சியை அழிப்பதற்கென்றே தலைமை தாங்குகிறார் என்று அவர் அரிய ஆலோ சனையை பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அவருடைய நோக்கம் என்ன?
இந்த அணியிலிருந்து விலகவேண்டும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து நான், திருமா இன்னும் தோழமைக் கட்சிகள் எல்லாம் விலகிக் கொள்ள வேண்டும். அப்படி விலகி, தி.மு.க.விற்கு எதிராக சண்டை போடவேண்டும்.
நாம் சண்டை போட்டால், யார் வரக்கூடாதோ, அவன் வருவான். அதற்காக இதுபோன்ற அரிய ஆலோசனைகள் எல்லாம் சொல்லப்படுகின்றன.
‘‘யார் வரவேண்டும் என்பதைக் காட்டிலும், யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்!’’
கலைஞருடைய நூற்றாண்டு தொடக்க விழாவில், முதலமைச்சர் சொன்னார், ‘‘யார் வரவேண்டும் என்ப தைக் காட்டிலும், யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்'' என்று சொன்னார்.
இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதெல்லாம் இந்த ஆபத்து வருகிறதோ, அனைத்து நேரங்களிலும் ஆசிரியர் எதிர்த்து நிற்பதில் தலைமை தாங்குவார்.
வகுப்புவாதத்தை எதிர்த்து நிற்பதில்,
சனாதனத்தை எதிர்த்து நிற்பதில்,
ஆர்.எஸ்.எஸை எதிர்த்து நிற்பதில்,
எல்லோருக்கும் முன்மாதிரியாக, எல்லோரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து, இணைத்து - இணைப்பது என்பது மிகமிகக் கடினமான பணி.
பாட்னாவில், 17 கட்சிகள் கூடியிருக்கிறது என்றால், அது ஆச்சரியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், பல கட்சிகள் - அன்றிலிருந்து பத்திரி கைகள் எல்லாம் இந்தக் கூட்டணி தொடராது, தொடராது என்று எழுதிக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்குக்கூட பத்திரிகைகளில், அதற்கு ஏராள மான விளக்கங்கள்; கேரளத்தில் அது, மேற்கு வங்கத்தில் இது, பீகாரில் அது என்று. ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்று, ஏதோ நம்மீது அக்கறை இருப்பதுபோன்று, கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, ஒருங்கிணைப்பாளர் பணி என்பது மிகக் கடினமான பணியாகும். அதை எல்லோராலும் சரியாக செய்துவிட முடியாது.
ஆசிரியரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்!
தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒரு மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்று சொன்னால், அதற்கு ஆசிரியரின் பங்களிப்பு மிக முக்கியமான பங்களிப்பாகும்.
எங்கள் கட்சி, திருமா கட்சி தேர்தலில் போட்டி போடு கின்ற கட்சிகளாகும்; இந்த அணியில் இருக்கின்ற பல கட்சிகளும் தேர்தலில் போட்டியிடக் கூடிய கட்சிதான். ஆனால், திராவிடர் கழகம் தேர்தலில் போட்டி போடு கின்ற கட்சி அல்ல.
தேர்தலில் என்ன முடிவெடுக்கவேண்டும் என்பதை முடிவெடுக்குமே தவிர, பஞ்சாயத்து போர்டு உறுப்பின ருக்குகூட நிற்காத கட்சி, திராவிடர் கழகம்.
ஆனால், அந்தக் கட்சி, திராவிடர் கழகம், அதனு டைய தலைவர் - இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்; யார் வெற்றி பெறக்கூடாது என்பதை மிகச் சரியாகத் தீர்மானித்து, அது வெற்றி பெறுவதற்கு எல்லோரையும் ஒருங்கிணைத்து, வழிநடத்தி - அதை வெற்றி பெறச் செய்யவேண்டிய அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிலும் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டிருக்கின்ற பணி, இந்த 90 வயதில் - 90 வயது என்று சொன்னால்கூட அவர் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார். ஏன் திரும்பத் திரும்ப அதைச் சொல்கிறீர்கள் என்று.
பேரணி - ஊர்வலங்களில்
ஆசிரியர் அவர்களோடு நம்மால் சேர்ந்து நடக்க முடியாது!
ஊர்வலத்தில் நடந்து சென்றால், அவரோடு நம்மால் சேர்ந்து போக முடியவில்லை. வேக வேகமாக நடந்து போகிறார்; அவரைப் பிடித்து பிடித்து இழுத்து நிறுத்த வேண்டி இருக்கிறது. ஆசிரியர், மெதுவாக நடங்கள் என்றால், வேகமாக நடந்ததுதான் எனக்குப் பழக்கம் என்பார்.
வேக நடை - செயல் - சிந்தனை குறையவில்லை!
வேக நடை குறையவில்லை; பேச்சு குறையவில்லை; செயல் குறையவில்லை; சிந்தனை குறைவில்லை. வயதுதான் 90.
காரணம் என்னவென்று சொன்னால்,
அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்ற தத்துவம்.
அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்ற கொள்கை.
அவர் ஏற்றுக்கொண்ட தலைவர்.
அது ஒரு விஞ்ஞானம்!
விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருக்குமே தவிர, ஒருபோதும் குறையாது. அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
எவராலும், எந்த சக்தியாலும்
நிராகரித்துவிட முடியாது
அப்படித்தான் அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை வளர்ந்துகொண்டே இருக்கும். எவராலும், எந்த சக்தியாலும் நிராகரித்துவிட முடியாது.
அவதூறு பேசலாம்; என்ன அவதூறுகளை வேண்டு மானாலும் அள்ளிவீசலாமே தவிர, இந்தத் தத்துவத்திற்கு எதிராக என்னுடைய தத்துவம் இருக்கிறது என்று பேச வருகிறவர்கள் எவருமில்லை.
தமிழ் மக்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டிற்கும், நாட்டிற்கும் வழிகாட்டவேண்டும்!
ஆகவே, அப்படிப்பட்ட கொள்கையை ஏற்றுக் கொண்டு, அந்தக் கொள்கையை மக்களிடத்திலே சொல்லி, இந்த சமூகம் மாற்றப்படவேண்டும்; முற்றிலு மாக மாற்றப்படவேண்டும். ஒரு சமத்துவ சமுதாயம் காணவேண்டும் என்ற ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற, இன்னும் சொல்லப் போனால், போராடிக் கொண்டிருக்கின்ற மதிப்பிற்குரிய ஆசிரியர் இன்னும் பன்னெடுங்காலம் வாழவேண்டும்.
எங்கள் அனைவருக்கும், தமிழ் மக்கள் அனை வருக்கும், தமிழ்நாட்டிற்கும், நாட்டிற்கும் வழிகாட்ட வேண்டும். வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்படைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில கட்சியின் சார்பிலும், உங்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைக் கூறி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் உரையாற்றினார்.
No comments:
Post a Comment