90-இல் 80 (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

90-இல் 80 (3)

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதே சமூகநீதிப் பிரச்சினையின் அடிப்படையில்தான் .  நூற்றுக்கு நூறு பதவிகளையும் முழுச் சுளையாகப் பார்ப்பனர்கள் விழுங்கிக் கொண்டு இருந்த நிலையில் 50 விழுக்காடு பதவிகளை பார்ப்பனர் அல்லாதாருக்கும் வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையை  ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் தந்தை பெரியார் முன் வைத்தும் - ஒவ்வொரு மாநாட்டிலும் ஏதோ சாக்கு போக்குச் சொல்லி நிராகரித்த நிலையில்தான் - இனி இவர்களை நம்பிப் பயனில்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்து காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார்.

பார்ப்பனர் அல்லாதார் கட்சியான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் - அதாவது நீதிக்கட்சிக்கும் பக்கப் பலமாக நின்று, தூக்கிப் பிடித்த காரணத்தால் முதல் முதலாக நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பது ஆணையாகப் பிறப்பிக்கப்பட்டது என்பது முக்கியமான வரலாறாகும்.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், சமூக நீதிக்கு இடர்ப்பாடு வந்தபோது எல்லாம், தந்தை பெரியாரின் கொள்கை வாரிசான ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எரிமலையாகக் குமுறி எழுந்தார்.

எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் 1979ஆம் ஆண்டில், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தார்.

ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பதாயிரம் இருந்தால், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று ஆணை பிறப்பித்தார்.

அந்த ஆணையை எதிர்த்து, கோட்டைக்குச் சாம்பலை அனுப்பும் போராட்டத்தையும் நடத்தினார்.

நாடெங்கும் மாநாடுகள் பேரணிகளை நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 மக்களவைத் தேர்தலில் பெருந் தோல்வியைச் சந்தித்தார். 39 இடங்களில் 37 இடங்களில் தோற்றார்.

அதன் விளைவு வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப் பட்டதோடு அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.

இந்த நிலைக்கான காரணம் திராவிடர் கழகமும், அதன் பொதுச் செயலாளர் வீரமணியும் தான் என்பதைச் செய்தியாளர்களிடம் இலைமறை காயாக ஒப்புக் கொண்டார் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.

50 விழுக்காடுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 விழுக்காட்டுக்கு ஆபத்து ஏற்பட இருந்த நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின்கீழ் மாநில சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, 9ஆம் அட்டவணையிலும் இடம் பெறச் செய்தால் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்ற தனக்கே உரித்தான சட்ட ஞானத்தைப் பயன்படுத்தி, அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் ஏற்கச் செய்து, அந்த வகையில் செயல்படுத்த வைக்கப்பட்டதால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே 69 விழுக்காடு இடஒதுக்கீடு அசைக்க முடியாத நிலையில் பெரும் பாதுகாப்பாக செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

பி.பி. மண்டல் தலைமையில் ஒன்றிய அரசால் பிற்படுத்தப் பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் தன் பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அளித்து பத்தாண்டுகள் ஆகியும் நாடாளுமன்றத்தில்கூட வைக் கப்படாமல் முடக்கப்பட்ட நிலையில், 42 மாநாடுகளையும் (வெளி மாநிலங்களில் உட்பட) 16 போராட்டங்களையும் நடத்தியவர் 90இல் 80 காணும் நமது ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களே.

வாராது வந்த மாமணியாய் நமக்குக் கிடைத்த சமூக நீதிக்காவலர் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமரான நிலையில் மண்டல் குழுவின் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. (7.8.1990)

அந்த ஆணையை அவர் பிரகடனப்படுத்திய நிலையில் மறக்காமல் தந்தை பெரியார் கனவு நனவாயிற்று என்றாரே - அதற்குள் நம் தலைவர் ஆசிரியர் இருக்கிறார்.

"சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்" என்று மாண்புமிகு வி.பி. சிங் சொன்னதுண்டே! (23.12.1992 திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில்)

அதற்கடுத்து இப்பொழுது கல்வியிலும் இடஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது. 

எந்த காங்கிரஸ் இடஒதுக்கீட்டில் முரண்டு பிடித்த காரணத் தால், தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறக் காரணமாக இருந்ததோ, அந்தக் காங்கிரசே இப்பொழுது சமூக நீதிக் கொடியை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஒன்றியத்தில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் சமூகநீதியை நோக்கி வெட்டரிவாள் தூக்கப்பட்டுள்ளது.

'நீட்' என்றும் - உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு என்றும் -  புதிய கல்வி என்றும் சமூக நீதிக்குச் சாவு மணி அடித்து வருகிறது. 

இந்தக் களத்திலும் திராவிடர் கழகத் தலைவர்  சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியில் முன்னணியில் நிற்கிறார். களங்களைக் கட்டமைக்கிறார். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவ்வப்போது ஆற்ற வேண்டிய அப்பழுக்கற்ற முறையில் சமூகநீதி விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவின் தலைநகரிலும் அகில இந்திய அளவில் உள்ள தலைவர்களைப் பங்கு பெறச் செய்யும் கருத்தரங்குகளை நடத்துகிறார்.

'திராவிட மாடல்' அரசு தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணும் நிலை - வாய்ப்பான நிலை ஏற்பட்டு இருக்கிறது. வாழ்நாள் சாதனையாளர்கள் விருது அமெரிக்கா உள்பட இவரைத் தேடி வருகிறது. தந்தை பெரியார் இவர் மேல் வைத்த நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் நியாயப்படுத்தி வருகிறார். கழகப் பணிகளில் புது ரத்தம் பாய்ச்சி வருகிறார்.  ஆம் 90இல் 80 எனும் எவரும் கிட்டவே நெருங்க முடியாத சாதனை இமயமாம், தமிழர் தலைவர் தம் நூற்றாண்டுக்குள் எஞ்சிய பணிகளை வென்று முடிப்பார்! வாழ்க ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள். 

(நாளையும் பேசுவோம்)


No comments:

Post a Comment