89 ஆண்டு 'விடுதலை' ஏட்டுக்கு 61 ஆண்டு 'விடுதலை' ஆசிரியர் என்ற சாதனை உலகம் கண்டறியாத 'கின்னஸ்' சாதனை.
'விடுதலையை' ஆசிரியர் வீரமணியின் ஏக போக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன் ('விடுதலை' 6.6.1964) என்று தந்தை பெரியார் எழுதினார் என்றால், அது சாதாரணமானதல்ல.
இந்த உச்சத்தை நமது ஆசிரியரைத் தவிர வேறு யாரும் தந்தை பெரியாரிடம் பெற்றதில்லை.
தந்தை பெரியார் அவர்கள் எதிர்பார்த்தபடியே 'விடுதலை'யை மேலே உயர்த்தினார். 4 பக்க 'விடுதலை' 8 பக்கத்தில் பல வண்ணங்களாக வெளி வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல், திருச்சியிலும் இன்னொரு பதிப்பு வெளியாகும் அளவுக்கு வளர்த்தெடுத்திருக்கிறார்.
2500 விடுதலை சந்தாக்களை சேர்க்குமாறு தந்தை பெரியார் கூறியதையும் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு விடுதலை பணிக்காக 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களை இப்பொழுது நாம் சேர்த்துக் கொடுத்த வளர்ச்சி எத்தகையது, என்பதையும் எண்ணிப் பார்த்தால் வியப்பின் உச்சத்திற்குச் செல்லக் கூடிய நிலைமை.
இணைய தளத்தின் மூலமும் முதலில் வந்த நாளேடு 'விடுதலை' என்பது கூடுதல் சிறப்பே!
கழகத் தோழர்கள் மட்டுமல்ல; தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களும், பகுத்தறிவாளர்களும் கை கூப்பி நன்றி தெரிவிக்க வேண்டியது எதற்காக?
இதோ தந்தை பெரியார் எழுதுகிறார்:
"உண்மையைச் சொல்கிறேன், தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால், தினசரி 'விடுதலை'யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்" ('விடுதலை' - 10.8.1962) என்று எழுதினாரே!
நாள்தோறும் - நாள்தோறும் களத்தில் நின்று போரிடும் போர் வாளாக நமக்கு விடுதலை கிடைத்திருப்பதற்கு முக்கிய மூல வேர் நமது ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் அல்லவா! இதற்காக எந்த வகையிலும் அவருக்கு கைமாறு செய்யவே முடியாது.
ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் சென்னை பெரியார் திடலில் 'விடுதலை' பணிமனையைத் திறந்து வைத்தபோது சொன்னாரே - 'தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் 'விடுதலையே!' என்று முத்திரை அடியாக முத்துப் பதிப்பாகச் சொன்னாரே - அதனை நிறைவேற்றிக் காட்டுவதுதான்.
இன்னொரு பக்கம் தந்தை பெரியார் தொடங்கி வைத்து, அன்னை மணியம்மையார் அவர்களால் மேலும் வளர்க்கப்பட்ட கல்வி நிறுவனங்களை, நமது ஆசிரியர் அவர்கள் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் என்று சொல்லும் அளவுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்.
பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகின் பல நாடுகளிலும் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கின்றனர் என்பது உள்ளம் பூரிக்கும் செய்தியாகும். அதுவும் பெரும்பாலும் பெண்களே என்பது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய கிரீடமாகும்.
கிட்டத்தட்ட 50 நிறுவனங்கள் நமது அறக்கட்டளைகள் சார்பில் பெருமிதத்துடன் வீறு நடைபோடுகின்றன.
முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டியது - என்றென்றும் நெஞ்சில் நிலை நிறுத்த வேண்டிய விலையே மதிக்க முடியாத ஒன்று உண்டு என்றால், அது தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஓர் அறக்கட்டளைதான் என்று வருமான வரி மேல் முறையீட்டு (ஜிக்ஷீவீதீuஸீணீறீ) நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுக் கொடுத்ததுதான்.
இத்தனை நிறுவனங்களும் முறைப்படி, நேர்த்தியாக நடைபோடுகின்றன. நம்மால் நடந்தப்படுகின்றன. மேலும், மேலும் பூத்துமணம் வீசுகின்றன என்றால், இவற்றிற்கெல்லாம் அடிப்படை டிரிப்யூனல் வரை சென்று பெற்றுத் தந்த மகத்தான வெற்றி தான். நமது தலைவர் ஆசிரியரின் அயரா உழைப்பால் சட்டப்படியான நுண்ணறிவால், நேர்மையான நிர்வாகத்தால் தான் கிடைத்தவை என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள்!
"நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது அதுதான் ஒரு கழகத்தின் முக்கிய பலம்" என்று மன்னார்க்குடியில் கழகத் தோழர்களிடம் தந்தை பெரியார் கூறியது ('விடுதலை' - 11.10.1964) கழகத் தோழர் ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணாடி சட்டம் போட்டு மாட்டப்பட வேண்டியதாகும்.
பழைமையைக் குழி தோண்டிப் புதைக்க வந்த இந்தப் புரட்சிக்கரமான இயக்க நடப்பிலோ, நடைமுறையிலோ, நிர்வாகத் தன்மையிலோ தூசு அளவு கறைபட்டால்கூட நம் இன எதிரிகள் துரும்பைத் தூணாக்கி விடுவார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்!
செல்வக்குடியில் பிறந்த சீமானாகிய தந்தை பெரியார் மலைவாழைப்பழம் சாப்பிட்டது காலணா என்று தனது நாட் குறிப்பில் எழுதி வைத்ததைக் கண்டு பார்ப்பன நீதிபதிகளே ஒரு நிமிடம் அதிர்ந்தார்களே!
அதே வழியில் மாலைக்குக் கொடுக்கும் பணத்தைக்கூட அலுவலகத்துக்கு நேரில் வந்து கழகக் கணக்கில் வரவு வைக்கச் செய்து விட்டுத் தான் வீடு திரும்புவார் நமது தலைவர் ஆசிரியர்.
தந்தை பெரியாரின் நாணயத்தை அவர்களைத் தொடர்ந்து நம்மை வழி நடத்திடும் அம்மாவும், ஆசிரியரும் பின்பற்றிவரும் அந்தப் பத்தியம்தான் நமது மகத்தான பலம். நம் எதிரிகள் இதனைக் கண்டு தான் அஞ்சுகிறார்கள். கட்டுப்பாடான, ஒழுக்கமாக ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகம் என்ற சக்தியை வீழ்த்த உலகில் எந்த சக்தியாலும் முடியாது. முடியவே முடியாது.
(நாளையும் பேசுவோம்)
No comments:
Post a Comment