திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அகவை 90 என்றால் அவரின் பொதுத் தொண்டின் அகவை என்பது எண்பதாகும்!
வயது - பொதுத் தொண்டு என்கிற இந்த விகிதாசாரம் இவரைப் போல் வேறு யாருக்கும் அமைந்ததில்லை என்பது இவருக்கே உரிய தனிச் சிறப்பாகும்!
'விளையும் பயிர் முளை'யிலேயே தெரிந்து விட்டது.
இதற்கு உரமிட்டு நீர் பாய்ச்சி வேளாண்மை செய்த இவரின் ஆசிரியர் மானமிகு ஆசான் புதூர் திராவிடமணி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறி, வீர வணக்கம் செலுத்துவோம்.
சாரங்கபாணியாக இருந்த சிறுவனை வீரமணியாக்கி வார்த்தெடுத்த ஆசான் அவர். அதே நேரத்தில் அதை உள்வாங்கி, தன் முயற்சி மேலோங்க ஓடுகளைக் கிழித்து வெளிவரும் பறவைபோல வெளிவந்து திறமையை வளர்த்துக் கொண்ட தந்தை பெரியாரின் கொள்கைச் சாணையில் கூர்மைப்படுத்திக் கொண்டவர் நமது அருமைத் தலைவர் ஆசிரியர் ஆவார்.
தூக்கி விடப்படும் பூனை எலி பிடிக்காது என்பார்கள்; எலியைக் கண்டு பாய்வதுதான் பூனையின் வேகம்!
நமது தலைவர் ஆசிரியருக்குக் கிடைத்தது அருமையான - வலிமையான அடித்தளம் முதல் நிலை என்றால் - அதனைத் தக்க வைத்து உயர்ந்த நிலையை எட்டியது என்பது அவரின் தனித்தன்மை! கடின உழைப்பு!!
ஜூன் 27 - அவர் வாழ்க்கையில் மட்டுமல்ல - திராவிட இயக்க வரலாற்றிலேயே அடிக்கோடிடத்தக்க விழுமிய நாள்.
1943ஆம் ஆண்டு ஜூன் 27 என்பது அவரின் முதல் மேடை அரங்கேற்றம்! கடலூர் செட்டிகோயில் திடலில் அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழுக்கு ரூபாய் 103 நன்கொடை வசூலித்து அண்ணாவிடம் அளிக்கப்பட்ட பொதுக் கூட்டம் அது.
அந்த வகையில் அவரின் மேடைப் பேச்சின் அகவை 80 ஆகும்.
அவருடைய ஆசிரியர் ஆ. திராவிடமணி எழுதிக் கொடுத்த கொள்கைப் பாடத்தை மனப்பாடம் செய்து பேச்சுக் கலையை வளர்த்தவரின், சொற்பொழிவினைக் கேட்க இப்பொழுது மக்கள் மடை திறந்த வெள்ளமாய்க் கூடுகிறார்கள். அவர் எழுதிய எண்ணற்ற நூல்களைப் படிப்பதிலும், மனப்பாடம் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
11 வயதில் சுயமரியாதைத் திருமணத்தில் வாழ்த்துரை வழங்குகிறார். 10 வயது சிறுவனாக நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் 66ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசுகிறார்.
திராவிட இயக்க வரலாற்றில் திருப்புமுனை மாநாடான நீதிக்கட்சி 'திராவிடர்' கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டில் (1944) சிறுவன் வீரமணி இடைநேரத்தில் வீராவேசமாகப் பேசுகிறார்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற திராவிட இயக்க மாணவர்கள் பட்டியல் நீளமானதுதான். ஆனால் இவர் போல் கல்வியில் தலைசிறந்து ஓங்கி பல்கலைக் கழகத் தேர்வில் முதன்மைப் பெற்று ஒரே நேரத்தில் மூன்று தங்க மெடல்களைப் பெற்றவர் வேறு யாருமிலர்.
படிப்பு - இயக்கம் - பணி என்று சுழன்றடித்த சூறாவளியின் மறுபெயர் தான் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
சென்னையில் சட்டக் கல்லூரியில் படித்தபோது தந்தை பெரியாருடன் நெருக்கமும், இணக்கமுமாய் வளர்ந்து வந்தார். தந்தை பெரியாரால் அடையாளம் காணப்பட்டார்.
1957 நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சிறைப்பட்ட அந்தத் தருணத்தில் வேறொரு வழக்கில் தந்தை பெரியாரும் சிறைபட நேர்ந்த சூழலில், அம்மாவுக்குத் (அன்னை மணியம்மையாருக்கு) துணையாக இருந்து உதவுமாறு தந்தை பெரியாரால் பணிக்கப்பட்டவர் நமது ஆசிரியர்.
அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு மாநாடுகளில் எல்லாம் பங்கேற்கிறார். தொடக்கத்தில் கடலூர் வீரமணி என்றுதான் சுவரொட்டிகளில் அடிப்பார்கள்.
அவருக்கான திருமண வயதில், பெண் பார்த்து தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் கையொப்பமிட்டு திருமண அழைப்பிதழையும் வெளியிட்டு, திருச்சி பெரியார் மாளிகையில் திருமணத்தையும் நடத்தி வைத்தனர் (7.12.1958) - என்றால் இந்தப் பேறு வேறு யாருக்குத்தான் கிடைக்கும்?
சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் "அய்க்கோர்ட் கண்டன நாள்" பொதுக் கூட்டத்தில் (30.10.1960) - தந்தை பெரியார் பேசுகிறார். குத்தூசி குருசாமி அவர்களும் உரையாற்றும் கூட்டத்தில் வழக்குரைஞரான நமது ஆசிரியரும் பேசுகிறார்.
இறுதியாக சொற்பொழிவாற்றிய தந்தை பெரியார் கூறிய தொலைநோக்குக் கருத்துதான் மிக முக்கியமானது.
"இங்கு பேசிய வீரமணி வெறும் ஆள் அல்ல நம் குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசி விட்டார். திரு. வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல், எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால், நமக்கு நல்லதாகி விட்டது என்றுதான் கருதுவேன், ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் - என்கிற ஆசை இப்பொழுது அவர் தொண்டு அரை நேரம் - இனி அது முழு நேரமாகி விடலாம்."
63 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் கணித்தது அய்யா காலத்திலேயே பலித்து விட்டதே!
தந்தை பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக 'விடுதலை' ஆசிரியராக தந்தை பெரியார் அவர்களால் ஆக்கப்பட்டாரே!
அய்யாவுக்குப்பின் தலைவர் அம்மா அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அன்னையார் மறைவிற்குப் பிறகு, எல்லாமே அவராக - இயக்கத்தை, நாட்டை வழி நடத்திக் கொண்டு இருக்கிறாரே! புரட்சிக் கவிஞர் சொன்ன (1958இல்) மண்டைச் சரப்பை (தந்தை பெரியாரின் சிந்தனைகளை) உலகமெல்லாம் பரவும் வகை செய்து விட்டாரே!
(நாளையும் பேசுவோம்)
No comments:
Post a Comment