அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். படிப்புக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். படிப்புக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

 சென்னை,ஜூன்6 - அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பில் (டி.காம்.) சேருவதற்கு வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மெக்கானிக்கல், சிவில் உள்பட பல்வேறு விதமான பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, மதுரை, கோவை, நீலகிரி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். எனும் வணிகவியல் பட்டயப் படிப்பு  பயிற்றுவிக்கப்படுகிறது.

டி.காம். படிப்பு பி.காம். பாடத் திட்டத்தை ஒத்திருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதேபோன்று டி.காம். சான்றிதழ் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும். இதுதவிர டி.காம். நிறைவு செய்த மாணவர்கள், பி.காம். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். இதற்காக அனைத்துக் கல்லூரிகளிலும் பி.காம். நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு கூடுதலாக 10 சதவீத இடங்கள் ஏற்படுத்திக் கொள்ள உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, டி.காம். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை பெற பத்தாம் வகுப்பிலும், நேரடி இரண்டாம் ஆண்டில் சேர பிளஸ் 2 வணிகவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள்  இணையதளம் வழியாக ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வசதி இல்லாத மாணவர் கள் அருகே உள்ள சேவை மய்யங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவ ரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment