ஆம் இன்று 'விடுதலை' ஏடு தனது 89ஆம் ஆண்டில் தன் வரலாற்றுப் பொன்னடியைப் பதிக்கிறது.
இன்றைக்கு நமது இனம் பெற்ற 'விடுதலை'க்கு எல்லாம் விடுதலை பேராயுதம் மட்டுமல்ல ஊட்ட மிகுந்த தாய்ப்பால்.
'திராவிடன்' இதழை நடத்த முடியாது மூச்சுத் திணறல் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டபோது அதைத் தாங்கிப் பிடித்து, பிராண வாயு கொடுத்து உயிர்ப் பித்து நடைபோடச் செய்தவர் தந்தை பெரியார்.
வாரம் இரு முறை வந்த 'விடுதலை'யை நடத்த முடியாமல் அதே நீதிக்கட்சி தத்தளித்தபோது, தாய்க்கரம் நீட்டி, வாரி அணைத்து 'விடுதலை'யை நாளேடாக மாற்றிய அருளாளர் தந்தை பெரியார்.
வணிக ஏடுகள், இதழ்களைத் தவிர, கொள்கைப் பூர்வமாக உலகில் ஓர் இயக்க ஏடு 89 ஆண்டுகள் வீறு நடைபோடுகிறது என்றால், அது 'விடுதலை' நாளேடு மட்டுமே!
அது சந்தித்த - சந்தித்து வருகின்ற எதிர்ப்புகள், அடக்கு முறைகள், 'ஜாமீன்' தொகை கட்ட வேண்டும் என்ற நிபந் தனைகள் என்று எழுத ஆரம்பித்தால் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
குறிப்பாக நெருக்கடி நிலை காலத்தில் 1.2.1976 முதற் கொண்டு 'விடுதலை'க்குத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டது. 'விடுதலை' ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிசா கைதியாக இருந்த நேரம் அது.
'விடுதலை', 'முரசொலி', 'தீக்கதிர்' ஆகிய நாளேடுகள் தணிக்கைக் கத்தரிக்கோலுக்கு இரையாகின.
மூன்று தணிக்கை அதிகாரிகளும் பார்ப்பனர்கள் - நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைதான்.
எந்த அளவுக்கு ஆரியப் பார்ப்பனத் தணிக்கை அதிகாரிகளின் கத்திரிக்கோல் நீண்டது என்றால், "தந்தை பெரியார் அவர்கள்" என்று போடக் கூடாது என்று கூறி, சிகப்பு மையால் கோடு கிழிக்கும் அளவுக்கு அதன் நச்சுப் பற்கள் நறநறவென்று கடித்துக் குதறின.
உடல் நலங் குன்றியிருந்த மணியம்மையார் அவர்களின் தன்னிகரற்ற மனத்துணிவால், பார்ப்பனர்களின் கத்தரிக்கோல் கூர்மைக்கும் மார்பு காட்டி 'விடுதலை' ஏடு நாளும் வெளி வந்தது.
'விடுதலை'யின் ஒரு பெட்டிச் செய்திகூட ஆட்சியின் முடிவினை மாற்றியதுண்டு. 'விடுதலை'யின் தலையங்கம் ஆட்சியாளர்களின் கண்களையும், கருத்துகளையும் கண்காணிக்கச் செய்யும்.
'விடுதலை'யில் ஒரு செய்தி வெளிவந்தது என்றால், அது 'கெசட்டில்' வெளி வந்தது மாதிரி.
"விடுதலை'யும் ஸ்ரீமான் ஈ.வெ.ரா.வும் என் அன்பார்ந்த எதிரிகள்" என்று தந்தை பெரியார் பிறந்த நாள் 'விடுதலை' மலருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் திரு. ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி) குறிப்பிட்டு இருந்தார்.
அதே நேரத்தில் 'விடுதலை'யின் வெற்றி, சாதனைகள் குறித்து அந்த ஆச்சாரியாரே உண்மையை ஒப்புக் கொள்ளும்படிச் செய்தது என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால், உண்மைதான்! இதோ ஆதாரம்:
"விடுதலை"யின் பிரச்சாரத் தொண்டு வெகு விரைவில் மாற்றுக் கொள்கை உடையவர்களையும், விழிப்புறச் செய்வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதில் வெளிவரும் புராண, சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆஸ்திகப் பிரச்சாரகர்களே, அவ்வாராய்ச்சியிற் கண்ட உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. உண்மையான பகுத்தறிவுப் பிரச்சார தொண்டுக்கே உயர்வு கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது."
"மதுரையில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) திராவிடத் தலைவர் பெரியாரைக் குறிப்பிட்டு அவர்கள் இருவரிடையும் பழங்காலத்திலிருந்தே நிலவி வரும் சிறப்பான நட்பும், பெரியார் அவர்கள் நாட்டுப் பணியில் தீவிர சிரத்தையுடன் முந்தைய நாளிலிருந்தே ஈடுபடுவதையும் புகழ்ந்து கூறியிருப்பதுடன், பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக் கொண்ட வகையில் கோவில்களின் புனிதத் தன்மை குறைந் திருப்பதையும், ராமாயணம் ஒரு கட்டுக் கதையென்றே சொல்ல வேண்டுமென்றும், 'தர்மம்' என்பதே மனச்சான்றுக்குச் சரியெனப் படுவதுதானென்றும் அக்காலத்தில் மக்களிடம் கொண்டிருந்த ஒழுக்கக் குறைபாடுகள் பற்றி கவிவாணரால் சித்தரிக்கப்பட்டதுதான் ராமாயணம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்"
("விடுதலை" 3.3.1958)
"விடுதலை"யின் வெற்றிக்கு ஆச்சாரியாரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
4 பக்கங்களாக வெளிவந்த 'விடுதலை' ஏடு இன்றைக்கு 8 பக்கங்களாக பல வண்ணங்களில் வெளி வருவதும், சென்னையில் மட்டும் வெளிவந்து கொண்டிருந்த 'விடுதலை' திருச்சியிலும் கூடுதலாக ஒரு பதிப்பு வெளி வருவதும் சாதாரணமானதல்ல.
இதற்கு முழு முதற் காரணம் 'விடுதலை'யின் 61 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான். தந்தை பெரியார் நமது ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கையை அப்பழுக்கற்ற முறையில் ஒரு தூசுக் குறைபாடு இல்லாமல் நிறைவேற்றியுள்ளார்.
இதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், விடுதலை வாசகர்களும் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.
50 ஆண்டு கால ஆசிரியர் பணிக்கும், 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணிக்கும் முறையே 50 ஆயிரம், 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களை தேனீக்களாகப் பறந்து திரிந்து உழைத்த கழகத் தோழர்களின் கடமைக் கரங்களுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள் உரித்தாகட்டும்!
விளம்பரங்கள் என்பவை 'விடுதலை'க்கு அத்தி பூத்தது போன்றதே இன்று வரை! அரசு நூலகங்களுக்கு 'விடுதலை' என்பது - அரசியல் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் இடர்ப்பாடு வந்து கொண்டே இருக்கும். அதையும் சந்தித்து தமது இலட்சிய உயிர் மூச்சைக் கொண்டு 'விடுதலை' இயங்கிக் கொண்டுள்ளது.
'விடுதலை' வாசகர்களுக்கும், நாள்தோறும் அதனைப் பிரசுரிக்கும் 'விடுதலை' பணிமனையின் உற்ற தோழர்களுக்கும் பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக!
தமிழன் அடையாளம் என்பதற்கு அடையாளம் 'விடுதலையே' என்ற மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் குறள் போன்ற மொழியையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்! 'வாழ்க பெரியார்!' வளர்க 'விடுதலை'.!!
No comments:
Post a Comment