89 ஆம் ஆண்டு ‘விடுதலை'யின் 61 ஆண்டு ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

89 ஆம் ஆண்டு ‘விடுதலை'யின் 61 ஆண்டு ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை

தந்தை பெரியார் தந்த அறிவுக்கொடை ‘விடுதலை'

மூடத்தனத்தை எதிர்த்து சமூக மாற்றத்துக்காக கருத்துப் போர் நடத்திடும் ‘விடுதலை'க்கு இன்று 89 ஆம் ஆண்டு!

சமூகநீதி - சமதர்மம் பேணிட ‘விடுதலை'க்கு வழித்துணையாக நிற்பீர்!

89 ஆம் ஆண்டில் ‘விடுதலை' இன்று அடியெடுத்து வைக்கிறது.  மூடத்தனத்தை எதிர்த்து, சமூகநீதி, சமதர்மம் பேணும் ‘விடுதலை'க்கு சந்தாதாரராகி வழித்துணையாக நிற்பீர் தமிழின மக்களே, என்ற வேண்டுகோளை - 89 ஆண்டு ‘விடுதலை'க்கு 61 ஆண்டு ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நமது ‘விடுதலை' நாளேடு என்ற ‘எதிர்நீச்சல்' ஏட்டின் 89 ஆவது ஆண்டு தொடக்க நாள் இன்று!

முதலில் வாரம் இருமுறை என்று - ‘நீதிக் கட்சியின் நாளேடாக மலர்ந்த இவ்வேடு வாரத்தில் புதன் - சனி என்ற இருநாள் வெளிவந்த ஏடாகியது - 1.6.1935 முதல்).

பிறகு நாளிதழாக தனது தொண்டின் முழுவீச்சினைப் பாய்ச்சியது - 1.1.1937 முதல்.

மீண்டும் அந்த ‘ஆறு‘, சிறு ‘ஓடையாக' மாறவேண்டிய இக்கட்டினை சந்தித்து, 29.5.1937 அன்று நிறுத்தப்பட்டது.

ஆளும் கட்சியின் ஏடாக இருந்தும், அதனை அக்கால அமைச்சர்கள் உள்பட பலரும் அலட் சியம் செய்ததின் தவிர்க்க இயலாத விளைவு அது!

நம் அறிவு ஆசான், அய்யா தந்த 

அரிய நன்கொடை ‘விடுதலை!' 

தந்தை பெரியார் அவர்களிடம் ‘‘விடுதலை'' ஒப்படைக்கப்பட்டதால் மீண்டும் புதுவாழ்வு - பெருவாழ்வு எய்தி நாளதுவரை அது தனது அறிவுப் போர் - அறப்போர் முழக்கத்தை அன் றாடம் திராவிடர்கள் - தமிழர்கள் தம் இல்லத்தை அடையாளம் காட்டி அவர்களுக்கு மானமும், அறிவும் வழங்கும் நற்பணியை சோர்வறியாது, சொந்தக்காலில் நின்று சுயமரியாதையுடன் செய்து வருகிறது.

அதன் வளர்ச்சியை இந்த 89 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரியதோர் வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு!

நம் அறிவு ஆசான் தந்த அருட்கொடை, அறிவாயுதம் ‘விடுதலை' நாளேடு!

‘விடுதலை' வெறும் காகிதமல்ல - போராயுதம்!

உலகப் பகுத்தறிவாளர் - மனிதநேயர் கழகம் (International Humanist and Ethical Union) - என்ற உலக அமைப்பின் அந்நாள் தலைவர் நார்வே நாட்டைச் சேர்ந்த பகுத்தறிவாளர் லெவிஃபிராகல் சொன்னார், ‘‘உலகில் எங்கு கண்டு தேடினும் பகுத்தறிவு பரப்பும் ஒரு நாளேட்டினை காணவே முடியாது; அது தமிழ்நாட்டில் ‘விடுதலை'யின் தனிப்பெரும் சாதனையாகும்'' என்ற உண்மையை டில்லியில் பேசும்போது பதிவு செய்தார்!

‘விடுதலை' வெறும் செய்தி நாளேடல்ல!

‘விடுதலை' காகிதம் அல்ல - அது ஆயுதம்; போராயுதம், அறிவுப் பேராயுதம்!

அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத்தின் முதல் பயிற்சிக் களமே இப்பாசறை ஏடுதான்!

‘விடுதலை' ஏற்பட்ட விடியலின் வரலாறு பல ஆய்வாளர்களுக்கு தகுதி மிக்க ஆய்வுக்குரியது.

‘விடுதலை'க்குக் கிடைத்த விழுப்புண்கள் அது சந்தித்த எதிர்ப்புகளும் - தடைகளுமே!

அரசியல் மாற்றம்கூட வெகுமக்களால் எளிதில் ஏற்கப்படக் கூடும்; ஆனால், நடைமுறையில் உள்ள பத்தாம் பசலித்தனம், சனாதன மூடத் தனத்தின் மூர்க்கத்தை எதிர்த்து, சமூக மாற்றம் நாடி எழுதும் கருத்துப் போர் ஏடு! ‘விடுதலை' சந்திக்கும் தடைகளும், அரசின் அடக்குமுறை அம்புகளுமே அதற்குக் கிடைத்த ஏராளமான விழுப்புண்கள் ஆகும்!

தமிழ்நாட்டிற்கு கல்வியில், அரசுப் பணிகளில், சமூகநீதி களத்தினை அது உருவாக்கிட முயலும் போது, சந்தித்த சவால்களும், சமர்க்களங்களும் கொஞ்சமா, நஞ்சமா? அப்பப்பா, எழுதிட முடியாத அளவு எண்ணிக்கையில் உள்ளதே!

இது ஒரு கட்சி நாளேடல்ல;  இனத்தின் இடிமுழக்கம்! ஆம், அந்த இனம் - குறுகிய கண்ணோட்டமுள்ள ரத்தப் பரிசோதனை ‘இனம்' அல்ல; மனித இனம்! மகத்தான மனித குலம்!

எனவேதான், மனித உரிமைப் போர் வாளாக ‘விடுதலை' பணி தொடருகிறது - அன்றும், இன்றும்!

‘விடுதலை'யின் 89 ஆண்டில் 

61 ஆண்டு ஊழியன் நான்!

‘‘மனிதத்தை'' - மக்களுக்குப் போதித்து, அவர் களுக்கு உணர்த்தி, ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற விசாலப் பார்வையில் உலகை விழுங்கும் சீரிய இயக்கம் இது!

அதற்குத் தந்தை பெரியார்தம் கடும் உழைப்பு - வியர்வை, இரத்தம், நிதியளிப்பு - நிரந்தர ஏற்பாடு - அத்துடன் நன்றியுள்ள நம் மக்களின் பேராதரவும்தான் அதனை கம்பீரமாக 89 ஆவது ஆண்டில் நடைபோட வைக்கிறது!

அதன் 89 ஆவது ஆண்டின் வளர்ச்சியில் 61 ஆண்டு பணிபுரிந்த ஊழியன் என்ற மகிழ்ச்சியும், மன நிறைவும், நமக்கும் ‘விடுதலை'க்கும் வயது ஏறினாலும், அதன் இளமை குன்றாமல் பாதுகாக்கப் பெரிதும் உதவுகிறது!

எப்போதும் களப்போரை எதிர்நோக்கி நிற்கும் இவ்வேடு இளைப்பாறுதல் இல்லாது கருத்துப் போர் செய்யும் நாளேடு!

வழித்துணையாக நிற்பீர் 

வாசகர்களே!

இதன் ‘வளமை'க்கு சந்தாக்கள்மூலம் ஒத் துழைத்து, அதன் ஆயுள் குன்றா நலத்துடன், குறுமதி படைத்தோரின் குள்ளநரித்தனத்தை எதிர்த்து, சுயமரியாதை, சமதர்ம, சமூகநீதி இலக்கு நோக்கி, அதன் பயணம் என்றும் வெற்றிப் பயணமாக வாழ்த்திடும் வழித் துணைவர்களாக நில்லுங்கள் வாசகப் பெருமக்களே!

சில நாளேடுகள் லட்சக்கணக்கில் என்று பெருமித கணக்கில் மகிழ்வன.

ஆனால், ‘விடுதலை' போன்ற கொள்கை ஏடோ லட்சக்கணக்குப் பெற முடியாது; விஞ்ஞானிகள்  லட்சக்கணக்கில் வர முடியாததற்கு என்ன முக்கிய காரணமோ, அதே காரணம்தான் இதற்கும்.

அதற்கு இலட்சியக் கணக்குத்தான் முக்கியம்; உரிய  அளவீடு!

அதற்காகப் பொருள் நட்டம் ஏராளம்! ஆனால், அறிவு மணம் பரவுவதுதான் அதன்  ஒரே நிகர லாபம்!

இது நாளையும் தொடரவேண்டும் - உரிமைப் போர்ச் சங்கு எப்போதும் முழங்குவதற்கு இந்த ஒன்று போதாதா? வேறு என்ன காரணம் வேண்டும்?

‘விடுதலை' வாழ்ந்தால் எவரே வீழ்வர்?

‘விடுதலை' வீழ்ந்தால் எவரே வாழ்வர்?

நன்றி! நன்றி!! நன்றி!!!

கி. வீரமணி

ஆசிரியர்,

‘விடுதலை'

சென்னை

1.6.2023


No comments:

Post a Comment