‘விடுதலை 89' - பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில்... (1.6.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

‘விடுதலை 89' - பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில்... (1.6.2023)

'விடுதலை'க் களஞ்சியம் - கவிஞர் ஈரோடு தமிழன்பன்



நடிகவேள் அரங்கம் 

நிரம்பப் பூக்கள் 

விடுதலைக் களஞ்சிய 

விழாவைக்காண


காட்டில் பூக்காத 

கனரகப் பூக்கள் 

கந்தகமகரந்தப் பூக்கள்


தலையில் சூடினால் 

முடிஉதிர்ந்து போகும் 

மனத்தில் சூடினால் 

மறையாது பெரியாரியம்


தந்தை பெரியார் 

தளவாடப் பட்டறை 

வடித்துக்கொடுத்த 

வாள்களின் தொகுப்பு


தந்தைபெரியார் 

கண்ட குடிஅரசு.. 

கிரேக்கப் பிளேட்டோ 

காணாத குடியரசு


கிரேக்கக் குடியரசில் 

சாமான்யர்களுக்கு 

இல்லை இடம் 

இதைச் 

சொல்ல முனைந்ததால் 

கவிஞனுக்கும் 

இல்லை இடம்.


தந்தை பெரியார் 

தயாரித்த குடிஅரசு 

தமிழனின் 

புண்களை அச்சுக்கோத்தது 

இழிவுகளை வெளியிட்டது


பெரியார் குடிஅரசு

பாமரன் வீட்டுக் குடிசைக்கும் 

பகுத்தறிவு கொண்டுபோனது


படித்தவன் திடுக்கிட 

வினாச் சூட்டுக்கோல் 

கொண்டுபோனது. 

ஆரிய ஆதிக்க வேருக்கு 

அரிவாள் 

கொண்டுபோனது


தந்தைபெரியார்

கைக்கு வந்தபோது 

விடுதலைக்குப் புதிய 

திசை திறந்தது


கதவே இல்லாத 

தமிழன் வீட்டுக்குச் 

சாவி கொண்டு

போகவில்லை


தூக்கமில்லாத

தமிழனுக்குக் கனாக் 

கொண்டு போகவில்லை


ஒவ்வொரு தமிழனுக்கும்

சுயசிந்தனை 

மூளை கொண்டுபோனது 

முதுகெலும்பு 

கொண்டுபோனது.


தன்னைமறந்த 

தமிழனுக்குத் தன்மானம் 

கொண்டுபோனது 

சூடு சுரணை கொண்டுபோனது


சாம்பல் நம்பிக்கைககளுக்குத் 

தணல் கொண்டுபோனது..


இரண்டு வாரம் 

ஒருபடம் ஓடினாலே 

மூன்று வாரம் வெற்றிவிழா 

நடத்தும் நாடு இது.


கேட்டால் என்ன சொல்வார்கள்

படத்தின் வெற்றிக்கு 

எதற்கு நூறு நாள்கள் 

நல்ல படம் என்றால் பத்து நாளில் 

வெற்றி பழுத்துவிடாதா

என்பார்கள்


89ஆம் ஆண்டு விடுதலைக்கு.

1935 தொடங்கி நடக்கிறது

அய்ம்பதாயிரம்

அறுபதாயிரம் என்று சந்தாதாரர்.

ஒரு

பகுத்தறிவுப் பத்திரிகைக்கு 

ஒரு

சுயமரியாதைப் பத்திரிகைகக்கு

இவ்வளவு உறுப்பினர்களா? 

எல்லோருமே

தந்தைபெரியார்

குருதி நாளங்களில் 

குடியிருப்பவர்கள்.


எதுவும் படிக்காதவன்

பத்திரிகை மட்டுமே  படிப்பவனைவிட 

அறிவாளியாக இருப்பான்

என்று

வாசகம் உண்டு.

எல்லாம் படித்தாலும் 

விடுதலை படிக்காதவன்


வெளிச்சம் பெறாதவனாகவே 

இருப்பான் என்று

மாற்றி உரைக்கலாமே.


விடுதலைமீது

விடுதல் அறியா அக்கறையோடு 

நடத்திக் கொண்டிருப்பவர்


ஆசிரியர் அய்யா 

கி.வீரமணி அவர்கள்.

அவருடைய

பழுதடையா விரல்களுக்கு

வயது

எப்போதும் பதினாறுதான்

வார்த்தைகள் 

படுக்கைபோடுவதில்லை

வாக்கியங்கள் படுத்துத் தூங்குவதில்லை.


தந்தை பெரியாரின்

எஞ்சிய வயதுகள் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி.


தந்தையின் தொடரும் 

தன்மான உறைப்பு மானமிகு ஆசிரியர் கி.வீரமணி.


வளர்ந்த வயது

நம்முன் அவரை அழைத்துவந்து

நிறுத்திச் சொல்கிறது

இவர்தான் இரண்டாம் ஈ.வெ.ரா.!

விடுதலையை

நீதிக்கட்சியிடமிருந்து

மீட்டெடுத்தவர் முதல் ஈ.வெ.ரா.!

விடுதலைக்களஞ்சியத்தை

இன்று நம் கைகளில்

கொடுத்தவர்

இரண்டாம் ஈ.வெ.ரா.

வாழ்த்துவோம் அவரை.


(1.6.2023 அன்று விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மேடையில் வழங்கிய கவிதை)

No comments:

Post a Comment