பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் எம்.பி.க்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக பார்ப்பனர் பிரிவு சார்பில் ஆதரவு திரட்டி; போக்சோவுக்கு எதிராக போராட்டம், பேரணி நடத்தப் போவதாக அறிக்கை விட்டிருந்த நிலையில், அன்றைய தேதியில் (ஜூன் 5) வாட்பூர்ணிமா விழா நடப்பதால் மற்றொரு நாளில் கட்டாயம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டு அமைப்புகள், இந்தியாவில் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல்வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராடி வரும் பெண் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள் மீது ஒன்றிய அரசின் தரம் தாழ்ந்த போக்கைக் கண்டித்துள்ளன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷனுக்கு ஆதரவைத் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட் டுள்ளனர். அயோத்தியாவில் பிஜேபி பார்ப்பனர் பிரிவு மற்றும் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிஜ்பூஷனுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டி அவருக்கு ஆதரவின் வலிமையைக் காட்டுவதற்காக பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டனர். ஜூன் 5-ஆம் தேதி அயோத்தியில் 'ஜன் சேத்னா மகா பேரணி' (மக்கள் ஆதரவு) நடத்தப் போவதாக அறிவித்தனர்.
"ஹிந்துக்களின் ஆட்சியின் சிறப்பையும், சாதனைகளையும் தாங்கமுடியாமல் தேச விரோத சக்திகள் பெண்களைப் பயன் படுத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம் என்று நடத்த பல கோடி ரூபாய்களை அள்ளி வீசி ஹிந்து ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த உண்மையை ஹிந்துக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அயோத்தியா ஹிந்துக்களின் தலைநகர், ஆகவே அயோத்தியில் இருந்து பிரிஜ்பூஷனுக்கான ஆதரவுப் பேரணியைத் துவங்க உள்ளோம். அதற்கு ஹிந்துக்கள் பெரும் ஆதரவு தெரித்துள்ளனர். மேலும் சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் புகார் அளித்துள்ளனர். பிரிஜ்பூஷன் எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியும்? பாலியல் வன்கொடுமை செய்தாகக் கூறி இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் பின்னணியில் ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் உள்ளன; முதலில் இந்த போக்சோ சட்டத்தை அகற்றவேண்டும். போக்சோ சட்டத்தில் பல ஓட்டைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளதால் நாங்கள் அதை எதிர்ப்போம்" என்று தோள் தட்டுகின்றனர்.
"அயோத்தியில் பார்ப்பனர்கள் மற்றும் நாட்டின் பிற மதங்களைச் சேர்ந்தவர்களும், ஒன்றிணைந்து பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகப் பேரணியை நடத்துவோம்” என்று மஹந்த் சத்யேந்திர தாஸ் என்ற பிஜேபி பிரமுகர் கூறினார். டில்லி காவல்துறை சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்த குற்றப்பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போதிலும், காவல்துறை அவரைக் கைது செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக மோடி அரசாங்கமும் முழுபலத்தையும் செலுத்தி, வீராங்கனைகளின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில், சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த குற்றவாளியான பிரிஜ்பூஷன் சிங்குடன் - பிரதமர் மோடி மற்றும் பெண்கள் குழந்தைகள் சமூகநலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியோடு சிரித்தபடி இருந்த ஒளிப்படம் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒன்றிய அமைச்சர்களும், மோடியும் இது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதிகாத்து வருகின்றனர். அயோத்தியில் ஜோஸ்டா மாத வாட்பூர்ணிமா விழா ஜூன் 5ஆம் தேதி நடக்கவிருப்பதால் வேறு ஒரு நாளுக்கு பாலியல்வன் கொடுமைக் குற்றவாளி பிரிஜ்பூஷனுக்கு ஆதரவாக நடத்தவிருந்த பேரணியை மாற்றி வைத்துள்ளதாகவும், புதிய தேதியை அறிவிப்பதற்கு முன்பு மேலும் ஆதரவைத் திரட்டுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இவர்கள் ஜம்மு காஷ்மீரில் 7 வயது சிறுமி ஆஷிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக தேசியக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தியதுண்டு. அதே போல் உன்னாவ் சட்டமன்ற உறுப்பினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாகவும் பேரணி நடத்தினர்; மேலும் பாஜக வழக்குரைஞர் பிரிவு தலைவர் ஒருவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்யமுயன்ற காவல்துறைக்கு எதிராக லக்னோவில் பிரமாண்ட பேரணி நடத்தினர். தற்போது பிரிஜ்பூஷனுக்கு ஆதர வாகவும் பேரணி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது தற்காலிகமாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை நிறுத்தியிருந்தாலும், நீதி கிட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
பிஜேபி ஆட்சியில் நாடு எங்கே போகிறது? ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும், பெண்களுக்கும் பாது காப்பு இல்லையே!
பாலியல் வன்கொடுமையாளன் - மல்யுத்த வீரராம் - பிஜேபி. எம்.பி.யாம்... குற்றம் புரிந்துள்ள நபரை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினால், அதனைக் கொச்சைப்படுத் துவதும், குற்றவாளிக்காகப் பேரணி நடத்துவதும் பிஜேபியின் தரங் கெட்ட யோக்கியதையை அம்பலப்படுத்தவில்லையா?
இந்தக் கொடுமையை எதிர்த்துதான் திராவிடர் கழக மகளிரணி - மகளிர்ப் பாசறையினர் வரும் 8ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கட்சிகளைக் கடந்து பெண்களே ஒன்று திரள்வீர் - ஆதரவு தாரீர்!
No comments:
Post a Comment