கணவன் சம்பாத்தியம் ஒரு பக்கம் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் ஒரு சம்பாத்தியம்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

கணவன் சம்பாத்தியம் ஒரு பக்கம் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் ஒரு சம்பாத்தியம்தான்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாராட்டுதலுக்குரிய நல்ல தீர்ப்பு!

கணவன் சம்பாதிக்கிறான் என்றால், 24 மணிநேரம் வீட்டுப் பணிகளை செய்துகொண்டு இருக்கிறாரே மனைவி, அதுவும் சம்பாத்தியம் தானே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பினை வரவேற்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்குமுன் வந்துள்ள ஒரு வழக்கின் முக்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்றுப் பாராட்டவேண்டிய தீர்ப்பாகும்!

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையைப் பயன்படுத்தி வாங்கிய சொத்துகளில் மனைவிக்கு உரிமையில்லை என்று கணவன் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. (கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் உள்ள குடும்ப வழக்கு).

நீதிபதியின் சிறப்பான தீர்ப்பு!

இதனை விசாரித்துத் தீர்ப்புக் கூறிய ஜஸ்டீஸ் திரு.கிருஷ்ணன் இராமசாமி அவர்கள்,

‘‘குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத் தரசிகள் பார்க்கும் வேலை 24 மணிநேர வேலை யாகும். அதனை கணவனின் 8 மணிநேர உத்தி யோகத்துடன் ஒப்பிட முடியாது;

கணவனும் - மனைவியும் குடும்ப வாகனத் தின் இரட்டைச் சக்கரங்கள்; கணவன் சம்பாத் தியம்மூலம் தன் பங்கை வழங்குகிறார். இல்லத்து நிர்வாகியாக உள்ள மனைவி குடும்பத்தைக் கவனித்துத் தன் பங்கை வழங்குகிறார். எனவே, சம்பாதித்த சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது. குடும்பத்தைக் கவனிக்கும் இல்லத் தரசிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. ஆனால், அந்தப் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்தச் சட்டமும் தடை விதிக்கவில்லை'' என்று தமது தீர்ப்பில் மிக அருமையாக எழுதி, ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி, மகளிர்மீதான ஆண் ஆதிக்கச் சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத் தனத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துக் காட்டியுள்ளார்!

மனுதர்மத்தை எடுத்துக்காட்டும் நீதிபதிகள்!

மனுதர்மத்தைப் பின்பற்ற வேண்டுமென சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் (குஜராத் உயர்நீதி மன்றம்) வெளிப்படையாகவே வர்ணாஸ்ரமத் திற்கு வக்காலத்து வாங்கி பகிரங்கப் பிரகடனம் செய்கிறார்கள்!

அண்மையில், காதலித்த பெண்ணை கைவிட்ட கயவனைப்பற்றி அந்தக் காரிகை போட்ட வழக்கில் ‘அவரைத் திருமணம் செய்துகொண்டால், அவருக்குள்ள ‘செவ்வாய்த் தோஷம்' காரணமாக என் குடும்பம் செத்துவிடும்'' என்ற ஒரு ‘புருடா -டிபென்ஸ்' அவிழ்த்துவிட்ட வழக்கில் (அலகாபாத்) அதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர்,

‘‘ஜோதிடர் இது சம்பந்தமாக ஆய்ந்து அவரது முடிவினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று'' ஓர் ஆணை பிறப்பித்தார். அதை உச்சநீதிமன்றம் தடை (Stay) விதித்து, அறிவியல்  மனப்பான்மை பரப்புதல் ஒவ்வொரு வரின் கடமையாகும் என்ற 51-ஏ(எச்) பிரிவினை சுட்டிக்காட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளது பாராட்டத்தக்கது!

மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள மானுடத்தின் முக்கிய கூறான மகளிரை அடிமைகள், சம்பளம் கேட்க முடியாத வாழ்நாள் வேலைக்காரர்கள், ‘‘புனிதக் கட்டு- சடங்கு'' (Sacrament) விவாகத்தில் பிணைக்கப்பட வாழ் நாள் கொத்தடிமைகளாக்கி உள்ளதை எதிர்த்து, தந்தை பெரியார் இந்த மண்ணில் பிரச்சாரம், போராட்டம், தீர்மானங்கள்மூலம் இடையறாது செய்த கிளர்ச்சி இன்று எல்லா மன்றங்களிலும் இந்தக் கருத்தோட்டத்தின் வெற்றி வெளிச்சத் திசையைக் காட்டுகிறது!

1929 செங்கற்பட்டு - மாகாண 

முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மானம்!

1929 இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், அதற்குமுன் 1925 முதலே அவ் வியக்கம் தொடங்கிய அறிவுப் பிரச்சாரம்மூலம் சனாதனத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தவர் தந்தை பெரியார். இப்படிப்பட்ட சம உரிமை  சிந்தனை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பு கள்மூலம் அவ்வப்போது முற்போக்குச் சிந்தனை கொண்ட நீதிபதிகள்மூலம் வெளியாவது நாட்டின் வருங்காலம்பற்றிய நம் கவலையைப் போக்குவதாக உள்ளது! நம்பிக்கை தருவதாக உள்ளது!

கணவன் இறந்த பிறகு அவரது சொத்து களைக்கூட மனைவி அனுபவிக்க முடியாது செய்ய ‘கற்பு' என்ற ஒரு விலங்கு பூட்டி ஆணாதிக்கம் மேலாதிக்கம் செய்தது - இப்போது மாறியது. ‘‘இராமநாதபுரம் விதவை வழக்கு'' (Ramnad widow case) என்று பெயர் உள்ள ஒரு பழைய வழக்கு.

பிறவி பேதம் என்பது ஜாதி மட்டுமல்ல - பெண்ணடிமையும்தான்!

ஒப்பற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் தனது சமூகப் புரட்சி இயக்கத்தின் முக்கிய கொள்கையாக ‘‘பிறவி பேத ஒழிப்பை''  முன்னிறுத்தினார்.

‘‘பிறவி பேதம் ஒழிப்பு என்றால், ஜாதி உயர்வு - தாழ்வு பேதம் மட்டுமல்ல; ஆண் - பெண் பிறவி பேத ஒழிப்பையும் உள்ளடக்கியதுதான்'' என்று கூறி, அந்த இலக்கு நோக்கி தமது இலட்சியப் போராட்டங்களை நடத்தினார் தந்தை பெரியார்.

இப்போது அக்கருத்துகள் - அறிவியல் இறுதியில் வெற்றி பெறுவதுபோல, தக்க வெற்றியைப் பெறுகின்றன!

‘பெரியார்' என்ற தத்துவம் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளி வீசுகிறது!

கவியரசர் கண்ணதாசன் பாடினார்,

‘‘நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார் - பெரியார்!

நெறிகெட்டு வளைந்ததையெல்லாம் நிமிர்த்தி வைப்பார்!'' என்று.

பெரியார் ராமசாமியும் - 

நீதிபதி ராமசாமியும்!

முற்போக்குத் தீர்ப்புச் சொன்னவர் நீதிபதி இராமசாமி! அன்று பெரியார் இராமசாமி - இன்று நீதிபதி கிருஷ்ணன் இராமசாமி!

எவ்வளவு எதிர்பாராத எதார்த்தப் பொருத்தம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.6.2023


No comments:

Post a Comment