சென்னை, ஜூன் 21 - தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுகிய மற்றும் மத்திய கால கடனமைப்பில், மாநில அளவில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியும், மாவட்ட அளவில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், கிராம அளவில் 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங் களும் செயல்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகின்றது.
2006-2007ஆம் ஆண்டு முதல் பயிர்க்கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில் பயிர்க் கடன் வழங்கப் பட்டு வருகிறது. இந்த 2% வட்டி இழப்பை தமிழ்நாடு அரசு வட்டி மான்யமாக கூட்டுறவுகளுக்கு அளித்து வருகின்றது. 2009ஆம் ஆண்டு முதல் உரிய காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிச் சுமையினை அரசே ஏற்றுக்கொள்ளும் என ஆணையிடப்பட்டு, இன்றளவும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய தவணை தேதிக்குள் பயிர்க் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் சார்பாக 7 சதவீத வட்டியினை அரசே கூட்டுறவுச் சங்கங்களுக்கு செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டில் (2022-23), கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13342.30 கோடி பயிர்க் கடன் வழங்கிச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் புதிய உறுப்பினர்களாக 2.35 லட்சம் விவசாயி களுக்கு ரூ.1,655.60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வு நிதியாண்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டு றவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 15.06.2023 வரை 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 94,749 விவசாயிகளுக்கு ரூ717.29 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டிருந்தது. நிகழாண்டில், 15.06.2023 வரை 14,641 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,00,986 உறுப்பினர்களுக்கு ரூ.84.09 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரால் மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க் கடன் தேவைப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் தகுதிக்குட்பட்டு தங்கு தடையின்றி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment