சனாதனம் பேசும் ஆளுநருக்குச் சட்டம் தெரியாதா? தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 13 மசோதாக்களைக் கிடப்பில் போட்டுள்ளார் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

சனாதனம் பேசும் ஆளுநருக்குச் சட்டம் தெரியாதா? தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 13 மசோதாக்களைக் கிடப்பில் போட்டுள்ளார் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை தகவல்!

சென்னை, ஜூன் 27- சனாதனம் பற்றியும் ஆன்மிகம் பற்றியும் சதா கதாகாலட்சேபம் செய்யும் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 13 மசோதாக்களைக் கிடப்பில் போட் டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு சட்டத்துறை தெரிவித்துள்ளது.

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட இரண்டு மசோதாக்கள் உள்பட ஆளுநரிடம் நிலுவையில் உள்ளவை மொத்தம் 13 மசோதாக்கள் என தமிழ் நாடு சட்டத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழக (திருத்த) மசோதா, 2020 மற்றும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக மசோதா (திருத்தம்) ஆகியவற்றுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என  தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண் ணப்பத்துக்குப் பதில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

 2020 அ.தி.மு.க. ஆட்சியில் பன்வாரி லால் புரோகித் ஆளுநராக இருந்த போது, இந்த இரண்டு மசோதாக்களும் முறையே 2020 ஜனவரி 13 மற்றும் 18ஆம் தேதிகளில் ஒப்புதலுக்காக ஆளு நர் மாளிகைக்கு அனுப்பப் பட்டன.

இந்த ஆண்டு ஜூன் 15 தேதியிட்ட பதிலில், சட்டத் துறையின் பொதுத் தகவல் அதிகாரி, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் (இந்த இரண்டும் உட்பட) இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி வரை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன என்றார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத் திருத்த மசோதா, ஆய்வு அதி காரத்தை ஆளுநருக்கு (வேந்தருக்கு பதிலாக) அரசாங்கத்திற்கு வழங்கவும், துணைவேந்தருக்கான வேட்பாளர் களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு வில் அரசு வேட்பாளரை சேர்க்கவும் முயன்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் திருத்த மசோதா, ஆளுநருக்கு பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதி காரத்தை அரசாங்கத்திற்கு வழங்க முயன்றது. 8.5.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடைசி சட்டம் தமிழ் நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட் டங்களுக்கான) மசோதா, 2023 ஆகும். 

2021செப்டம்பரில் பொறுப்பேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, மே 4ஆம் தேதி ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “ஆளுநர் மாளிகையிலோ அல்லது ஆளுநரிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்கள் தொடர்பான எட்டு மசோதாக்களுக்கும், சென் னைக்கு அருகில் சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2022க்கும் ஒப்புதலை “தடுத்து வைத்துள்ளேன்” என்று ரவி கூறியிருந்தார். இருப்பினும், அதேநாளில், அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 17 மசோதாக்கள் “நிலு வையில் உள்ளன" என்று கூறினார்.

“நிர்வாகத்தைப் பொறுத்த வரை யில், அவர் [ஆளுநர்] ஒப்புதல் வழங் காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதுதான். வெறும் வார்த்தை விளை யாட்டின் மூலம் அவர் அதைக் கடந்து செல்ல முற்பட முடியாது” என்று தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

“மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதற்கும். அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும் உள்ள சட்ட வேறுபாட்டை ஆளுநர் விளக்க வேண் டும்," என்று அவர் மேலும் கூறினார். 

தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில், 17 மசோதாக்களில் குறைந்தபட்சம் அய்ந்து மசோதாக்களுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத்தான் அமைச்சர் தங்கம் தென் னரசு நிலுவையில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். சட்டத்துறையின் தகவலின்படி, ஆளுநரிடம் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் விதிகள் சட் டத்திருத்த மசோதா 2022, சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா 2022 (குடியரசுத்தலைவரின் பரிந்துரைக்காக ஆளுநர் ரிசர்வில் வைத்துள்ளார்) டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல் கலைக் கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக் கழக (இரண்டாவது சட்டத் திருத்தம்) தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு மீன்வளத்துறை பல் கலைக்கழக (திருத்த மசோதா) தமிழ் நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலை கழகம் தொடர் பான மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

இந்தப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்பது அந்த மசோ தாக்களின் முக்கிய அம்சமாகும். “10 பல்கலைக்கழகங்களில் நிதிச்செய லாளரை சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பது தொடர்பான ஒரு மசோ தாவும் நிலுவையில் உள்ளன. நில ஒருங்கிணைப்பு மசோதாவைத் தவிர, இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலுவையில் உள்ள மற்ற இரண்டு மசோதாக்கள் ஏப்ரல் 28, 2023க்கு முன் அதாவது மே மாதம் ஆளுநரின் நேர்காணலுக்கு முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டன. ஏப்ரல் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் அரசாங்கத் தால் அனுப்பப்பட்ட ஏதேனும் மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதா என்று கேட்ட தற்கு 25.6.2023 அன்று வரை எந்த பதிலும் வரவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிலின்படி, ரவி கடந்த ஆண்டு 48 மசோதாக்களுக்கும், இந்த ஆண்டு 21 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித் துள்ளார். தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத்தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022அய் ஆளுநர் திருப்பி அனுப்பியதால் சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment