ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி: 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 8, 2023

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி: 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு

 திருச்சி, ஜூன் 8 -  காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12இல் திறக்கப்படவுள்ளது. இதனால், நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பகுதியாகவும் காவிரி டெல்டா பகுதி அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் காவிரி நீரைக் கொண்டும், வடிமுனைக் குழாய் மூலமா கவும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் நீர் இருப்பு இருக்கும்பட்சத்தில், குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படும். உரிய காலத்தில் அணை திறக்கப்பட்டு, கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேரும்பட்சத்தில் வழக்கமாக குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.50 லட்சம் ஏக்கரில் நடைபெறும். ஆனால், கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பும், அணைக்கு நீர்வரத்தும் அதிகமாக இருந்ததால் மே 24ஆம் தேதியே திறக்கப் பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக அதிக அளவாக 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதற்கு ரூ.61 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருள்கள் வழங்கப்பட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது.

தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் நேற்று (7.6.2023) மாலை நிலவரப்படி 103.61 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 865 கனஅடியாக உள்ளது.

தற்போது கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்துள்ள நிலையில், ரூ.80 கோடி மதிப்பில் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் கடைமடை வரையில் விரைவாக சென்று சேரும் வாய்ப்புள்ளது என்ப தால், இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது என வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் குறுவை சாகுபடியை தொடங்குவதற்கு முன்பாக குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருட்களை முழு மானியத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பெரிய ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ள நிலையில், சிறு வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் பல இடங்களில் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால், வயலுக்கு தண்ணீர் வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பது விவசாயிகளின் கவலையாக உள்ளது. விவசாயி களுக்கு தேவையான உரம், விதை மற்றும் பயிர்க்கடன் ஆகியவற்றை தாமதமின்றி வழங்க வேண்டும். அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை நீர்வளத் துறை மேற்கொள்ள வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment