11 வயது வீரமணி பற்றி 'ஜஸ்டிசைட்' "சுயமரியாதை இயக்கத்தின் வெடிகுண்டு வீசிகள்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

11 வயது வீரமணி பற்றி 'ஜஸ்டிசைட்' "சுயமரியாதை இயக்கத்தின் வெடிகுண்டு வீசிகள்"

திராவிட மாணவர்களின் குழுக்கள் தமிழ் நாட்டின் மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் செய்தபடி இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, தங்கள் பங்கிற்கு சிறப்பாகத் தொண்டாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மதவெறியால் பரவும் மூடநம்பிக்கைகளையும் கோயில் பூசாரிகளின் ஏமாற்று வேலை களையும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாணவர்கள் செயலாற்றி வருகின்றனர். ஆங்காங்கே நிலவிவரும் மடமைகளை பொதுமக்களுக்கு அவர்கள் விளக்கி வருகின்றனர். விடுமுறைக் கொண்டாட் டங்களைத் தவிர்த்து இத்தகைய நற்பணியில் ஈடுபட்டுள்ள மாணவச் செல்வங்களை உளமாரப் பாராட்டுகிறோம். கடினமான சுற்றுப் பயணங்களில் இறங்கியுள்ள இவர்கள் தாம் திராவிட மறுமலர்ச்சியின் சிறந்த தூதர்கள்! கடந்த காலங்களில் அவர்கள் சிரமப்பட்டுப் பணியாற்றியதும் வீணாகவே யில்லை. கோடையில் அவர்கள் மேற் கொண்டபயணம் பெரும் வெற்றியடைந் துள்ளது. முக்கியமாக ஊரகப் பகுதிகளில் பகுத்தறிவு சார்ந்த பரப்புரைகள் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளன. மிகப் பெரிய விழிப் புணர்வும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் தீவிரமாக நடந்து வருகிறது. பெற் றோரையும் குடும்பத்தினரையும் பிரிந்து மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருவது இதுவே முதல் முறையாகவும் இருக்கக் கூடும். அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு தமது கொள்கைகளையும் சமூகப்பிரச்சினைகளையும் விளக்கிக் கூற ஓய்வின்றி, போதுமான உணவும் உறக்கமும் இன்றி மாணவர்கள் போராடி தன்மான வெடிகுண்டுகளை ஆங்காங்கே வீசி வரு கின்றனர். கரடுமுரடான சாலைகளில் நடந்தும், கூட்ட நெரிசலில் ரயில்களில் அவதிப்பட்டும், மேடு பள்ளங்களில் தள்ளாடிச் செல்லும் வாகனங்களில் பயணம் செய்தும், காலைப் பனியில் உறைந்தும் இவர்கள் மேற்கொள்ளும் பணியைப் போற்ற வார்த்தைகள் போதா! இவர்கள் வீசிவரும் தன்மானக் குண்டுகளால் பழமைவாதிகளும், மதவெறியர்களும், மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள அறிவிலிகளும் தாக்கப்பட்டு, சிதறி ஓடுகின்றனர்.

பல்வேறு வயதினரும். வாழ்வின் பல்வேறு நிலைகளைச் சார்ந்த மாணவர்களும் இந்தக் குழுக்களில் உள்ளனர். பதினொரு வயதுகூட நிரம்பாத வீரமணி எனும் இளம் சிறுவன் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஜாதிப் பாகு பாடுகளையும் கோயில் பூசாரிகளின் மோசடிச் செயல்களையும் எதிர்த்து இந்தச் சிறுவன் பேசி வருவது இடி முழக்கத்திற்கு இணை யானது என்றால் மிகையாகாது. பள்ளி மாண வர்களும் கல்லூரி மாணவர்களும் ஒருவ ரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இயக்கக் கொள்கைகளைப் பரப்பி வரு கின்றனர். 

இன்னொரு பரிமாணத்திலும் மாணவர் களின் பணியை நாம் காணலாம். கடைகளைச் சூறையாடுவதிலும், ரயில்கள்மீது கல்லெறி வதிலும் ஈடுபட்டு வந்துள்ள  இளைஞர் களுக்கு நம் மாணவர்களின் நற்பணிகளும், கண்ணியமான செயல்களும் நல்ல பாடமாக அமைந்து, அவர்கள் திருந்த வழி பிறந் துள்ளது. அமைதி வழியில்  போராடும் திராவிடக் கண்மணிகளால், இதுவரை தகாத செயல்களில்  ஈடுபட்டு வந்தவர்கள் திருந்தி வருகின்றனர்.  வழிதவறிப் போய்விட்ட சில திராவிடர்கள் மனம் மாறி நம் திசைக்குத் திரும்பி வருவார்கள் என்று நம்புவோம். நம்  மாணவர்களின் மாநாடுகளும் பரப்புரைகளும் திராவிட இயக்கத்தை மேலும்  பலப்படுத்தி யுள்ளன. உள்ளும் புறமும் உள்ள பல பிற்போக்குவாதிகளையும், பழைமை வாதி களையும் திருத்த நல்லதொரு பாட மாகவே விளங்கிவரும் நம் மாணவர்களை மனமாரப் பாராட்டுகிறோம். தங்கள் சிறந்த பணிகள் வாயிலாக  சமுதாய மாற்றங்களுக்கு வழி வகுக்கும் இந்தச் செயல் வீரர்களைப் பெருமையுடன் போற்றுகிறோம்.

நன்றி : 'தி ஜஸ்டிசைட் - பக்கம் 2 - 30.12.1944


No comments:

Post a Comment