பூவை புலிகேசி B.Sc., B.L.
“இராமபிரானுக்கு கோவில் கட்டுவோம்“ என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பாரதீய ஜனதா கட்சி அதே இராமனை முன்வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பகீரத முயற்சி எடுத்தும் முடியவில்லை. காரணம், இந்திய துணைக்கண்டத்தில கடவுள், மதம், ஜாதி ஆகியவை அண்டமுடியா நெருப்புத் துண்டமாக, தனித் தீவாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியும், கடவுளின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, கலவரப் பூமியாக மாற்ற எத்தனிப்பவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் கடைவிரிக்க முடியவில்லை. காரணம், இது தந்தை பெரியார் மண்,
அது என்ன? பெரியார் மண்? அப்படி என்ன பெரியார் செய்துள்ளார்? என்று ஆய்வு நோக்கில் அலச ஆரம்பித்தால்...
அறிஞர் அண்ணா சொல்வார், பெரியாரின் போர் முறை என்பது மூலத்தோடு போரிடுவது. ஆம்! நோய் நாடி நோய் முதல் நாடுவதுதான் தந்தை பெரியாரின் தனித்தன்மை. உலக சமுதாயத்தோடு ஒப்புநோக்குகையில் தமிழ்ச் சமுதாய மக்கள், உருவில் மனிதர்களாகவும், செயலில், குணத்தில் விலங்குகளைப் போலும் மானமும் அறிவும் அற்ற மக்களாக இருக்கின்றார்கள். எனவே, அவர்களை மனிதர்களாக மாற்ற அவர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியினை ஏற்படுத்திவிட்டால் போதும் என்ற அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாடு முழுமையும் சுயமரியாதை பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
தந்தை பெரியார் அவர்கள் தான் மட்டும் பிரச்சாரம் செய்தால் போதாது. தன்னுடைய சுயமரியாதை கொள்கை கொண்டவர்களும் இயக்கப் பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டும் என்று விரும்பினார். அவ்வாறு சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கிறவர்கள் தேர்ந்த பயிற்சி பெற்றவர்களாகவும், கொள்கையில் தெளிவு பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்றே சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலேயே சுயமரியாதைப் போதனைக் கூடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
தந்தை பெரியாரும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் உலகிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஆம்! தமிழர்கள் தன் மதிப்பிழந்து, இழிமக்களாய் இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் கடவுள், மத, மூட நம்பிக்கையே என்பதனை அறிவியல் பூர்வமாக உணர்ந்து உள்வாங்கிக் கொண்ட தந்தை பெரியார் கடவுள், மத, மூட நம்பிக்கையை ஒழிப்பதே முதல் வேலை என்று சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார்.
உலகில் கடவுள் மறுப்பாளர்கள் ஏராளம். ஆனால், அவர்கள் எல்லாம் கடவுள் மறுப்பை, மத மறுப்பை, அரங்கங்களில், படித்தவர்கள் மத்தியில் பேசினர். ஆனால், தந்தை பெரியாரோ, கடவுள் மறுப்பை, மத மறுப்பை, வெட்ட வெளியில், தெரு முனைகளில், பாமர மக்களின் மத்தியில் பேசி கடவுள் மறுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிய மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் என்ற தனி மனித இராணுவம் கடவுள் மறுப்பை, நாத்திகத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தன்னுடைய சீடர்களும், அக்கொள்கையில் தெளிவு பெற அவர்களுக்கு தன்னுடைய சுயமரியாதைப் பிரச்சார போதனைக் கூடத்தில் பயிற்சியளித்தார்.
இத்தகைய பயிற்சிப் பள்ளிகளைத் தந்தை பெரியார் ஈரோட்டிலும், மற்றும் பல்வேறு ஊர்களிலும் நடத்தினார். இத்தகைய பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் பின்னாளில் திராவிடர் இயக்கப் பிரச்சாரகராகவும், திராவிடர் இயக்கத் தலைவராகவும் பரிணமித்தனர்.
இவ்வாறு தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட பயிற்சிப் பள்ளிகளிலேயே வரலாற்றுச் சிறப்பும், பெருமையும் பெற்றது விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியாகும்.
1967ஆம் ஆண்டு தொடக்கத்தில் திருவாரூர் பகுதியில் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளி நடத்த வேண்டுமென்று தந்தை பெரியார் தம் தொண்டரான வி.எஸ்.பி.யாகூப்பிடம் கூறியதையடுத்து, வி.எஸ்.பி.யாகூப், சு.மாரிமுத்து, வி.எம்.ஆர்.பதி, ப.நடேசன் ஆகியோர்களின் ஏற்பாட்டில் உயர்திரு நாய்னா அப்புசாமி நாயுடுவுக்குச் சொந்தமான பூங்குடில் தோட்டத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பள்ளி 24.5.1967 தொடங்கி 31.5.1967 வரை நடைபெற்றது.
24.5.1967ஆம் தேதி காலை 10 மணியளவில் தந்தை பெரியார் வடிவமைத்திருந்த பின்னர் உலகப் புகழ்பெற்ற
கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்;
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்ற கடவுள் மறுப்பு வாசகங்களை தந்தை பெரியாரின் உதவியாளர் மகாலிங்கம் வாசிக்க பயிற்சி மாணவர்கள் திருப்பிக் கூறினர். இறுதியில் பெரியார் கடவுள் மறுப்பு பேருரையாற்றினார்.
அவ்வுரையில் தந்தை பெரியார், “முதலாவது, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.... பகுத்தறிவின் முதல் எதிரி கடவுள் ஏன்? நான் முன்பே சொன்னேன் மற்ற ஜீவன்களுக்கில்லாத பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று. இந்தப் பகுத்தறிவு பயன்படாமல் போனதற்குக் காரணம் கடவுள்தான். எல்லாம் கடவுளால்தான் ஆகும். கடவுள்தான் எல்லாவற்றையும் உண்டாக்கியவர். எல்லாவற்றையும் இயங்க வைப்பவர் கடவுள்தான் என்று மனிதன் தனது பகுத்தறிவைப் பயன்படுத்த முடியாத வகையில், எல்லாவற்றிற்கும் காரணகர்த்தா கடவுள் என்று கற்பித்துவிட்டான்” என்று பேசினார்.
மேலும் பெரியார், “மனிதன் உண்மையை அறிந்துகொள்ள முடியாமல் செய்வதற்காகத் தோன்றியவைதான் புராணம், கடவுள், அவதாரம் என்பவைகள் ஆகும்.”
“புத்தியைக் கொண்டுதான் சிந்திக்க வேண்டும். புத்திக்குப் பட்டதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். புத்திப்படிதான் நடக்க வேண்டும். அவர் சொன்னார், அதில் இப்படி இருக்கிறது. இதில் இப்படி கூறப்பட்டிருக்கிறது என்று எதையும் ஆராயாமல் செய்யக் கூடாது.”
“கடவுள் சொன்னார் அக்கறையில்லை, மதம் சொல்கிறது அக்கறையில்லை, சாஸ்திரம் சொல்கிறது அக்கறையில்லை. முன்னோர் பெரியோர் சொன்னது அக்கறையில்லை. தெய்வத்தன்மை உடையவர் சொன்னது அக்கறையில்லை. வெகுபேர் உன்னைத் தவிர மற்ற எல்லோருமே நடக்கிறார்கள், எனக்கு அக்கறையில்லை. வெகுநாட்களாக நடைபெற்று வருகிறது அக்கறையில்லை.
என் அறிவு எதைச் சொல்கிறதோ அதையே நான் ஏற்றுக் கொள்வேன் என்கின்ற துணிவு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்" என்று கருத்துரை யாற்றியுள்ளார்.
இந்தப் பயிற்சிப் பள்ளியை திருத்துறைப்பூண்டி கணபதி தொடங்கி வைத்துப் பேசினார். இந்தப் பயிற்சிப் பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்துகொண்டு வகுப்பு நடத்தினார்கள்.
உலகப் புகழ்பெற்ற இக்கடவுள் மறுப்பு வாசகத்தை ஒவ்வொரு கழக நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் முழங்க வேண்டும் என்று 14.6.1967இல் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்து வேண்டினார். மேலும் தமிழ்நாடெங்கும் நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் சிலை பீடங்களில் மேற்கூறிய கடவுள் மறுப்பு வாசகங்கள் செதுக்கி வைக்கப்பட்டன. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் தந்தை பெரியார் சிலை வைத்துள்ள பீடத்தில் அவர் கூறிய மொழிகளை செதுக்கி வைப்பது குற்றமாகாது என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
“உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால் தானே அவன் உண்மையான, யோக்கியமான, அறிவாளியான தொண்டனாக இருக்க முடியும்? என்பார் பெரியார். எனவே,இளைஞர்கள் இத்தகைய கடவுள் ஒழிப்புப் பணியில் இறங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் “பெரியார் உலகு” படைக்க உறுதியேற்போம்.
No comments:
Post a Comment