வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை

 தீண்டாமைக்கு ஆணிவேர் ஜாதிதான்; அதனால்தான் ஜாதி ஒழிப்பைத் தந்தை பெரியார் கையிலெடுத்தார்!

‘‘ஜாதி - மதம் - தெய்வம் - தனம் நான்கும் ஒழிக்கப்படாமல் மனித சமூகத்திற்கு சாந்தி - திருப்தி - சுகம் கிடையாது'' என்ற தந்தை பெரியாரின் கொள்கை நிறைவேறவேண்டும்!

சென்னை, மே 17  தீண்டாமைக்கு ஆணிவேர் ஜாதி தான்; அதனால்தான் ஜாதி ஒழிப்பைத் தந்தை பெரியார் கையிலெடுத்தார்! ‘‘ஜாதி - மதம் - தெய்வம் - தனம் நான்கும் ஒழிக்கப்படாமல் மனித சமூகத்திற்கு சாந்தி - திருப்தி - சுகம் கிடையாது’’ என்ற தந்தை பெரியாரின் கொள்கை நிறைவேறவேண்டும் என்றார் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

ஏன்? எதற்காக?

கடந்த 13.4.2023 அன்று ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?’’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தொடர் சொற் பொழிவில் மூன்றாம் நாள் கூட்டத்தில்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

அவரது தொடக்கவுரை வருமாறு:

‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?'' என்கின்ற சொற்பொழிவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறவிருக்கின்ற கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே மற்றும் வருகை தந்துள்ள பெருமக்களே!

இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கக் கூடிய கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,

மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் அவர்களே,

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத் தலைவரும், மேனாள் துணைவேந்தருமான அய்யா ஜெகதீசன் அவர்களே,

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களே, கவிஞர் கண்மதியன் அவர்களே, புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவர் மீனாட்சிசுந்தரம் அவர்களே,

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களே, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர் களே, அமைப்புச் செயலாளர் தோழர் வி.பன்னீர்செல்வம் அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்களே, வடசென்னை மாவட்டத் தலைவர் மோகன் அவர்களே, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களே, தாய்மார்களே, பெரியோர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைக்கம் போராட்டத்தின் 

அடிப்படைத் தத்துவம்!

இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. வைக்கம் போராட்டம் என்று சொல்லுகின்றபொழுது, அதனுடைய அடிப்படைத் தத்துவம்  வெறும் தீண் டாமை ஒழிப்பு என்பது மட்டுமல்ல; ஜாதி ஒழிப்புதான் அடிப்படையான தத்துவமாகும்.

தீண்டாமை என்பது தனித்தன்மையான ஒன்றல்ல; ஜாதியினுடைய விளைவுதான் தீண்டாமை. ஜாதியை ஒழிக்காமல், தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்வது; நிழலோடு சண்டை போடுவதற்கு சமம் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

காந்தியார் அவர்கள்கூட தீண்டாமை ஒழிப்பைப் பற்றித்தான் பேசினாரே தவிர, சனாதனம், வருண தர்மம், ஜாதி இவற்றைக் காப்பாற்றவேண்டும் என்ற கொள்கை யில் அழுத்தமாக என்றைக்குமே இருந்திருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு ஈரோட்டில்...

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேருவதற்கு முன்புகூட, 1917 ஆம் ஆண்டு ஈரோட்டில், நகராட்சித் தலைவராக இருந்தபொழுது, ஒரு தெருவுக்கு கொங்கு பறத்தெரு என்று பெயர் இருந்தது. தந்தை பெரியார் அவர்கள், திருவள்ளுவர் தெரு என்று அதனை மாற்றினார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இது நடந்தது 1917 ஆம் ஆண்டில்; வைக்கம் போராட்டம் அதற்குப் பின்தான் வருகிறது.

ஆகவே, தந்தை பெரியாருடைய அடிப்படைக் கொள்கை என்பது ஜாதி ஒழிப்பாகும்.

என்னுடைய தத்துவங்கள் நான்கு என்று சொல்கிறார்: ‘‘ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவங் களும் அழிந்தாகவேண்டும். இவற்றை அழிக்காமல், மனித சமூகத்திற்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆக வேண்டும்; அதுவே என்னுடைய அடிப்படைக் கொள்கையாகும்'' என்கிறார்.

எப்பொழுது இதை சொல்கிறார் என்றால், 1936 ஆம் ஆண்டு.

ஜாதி, மதம், தெய்வம், தனம்; தனம் என்றால், செல்வம்.

ஜாதி என்பது மனித சமூகத்தில் பிறப்பின் அடிப் படையில் உருவாக்கப்படுகின்ற ஒன்று. மதம் மாறலாம்; ஆனால், ஜாதி மாற முடியாது.

‘‘பேதமற்ற இடம்தான் மேலான, 

திருப்தியான இடம்!’’

பிறப்பின் அடிப்படையில் இந்தப் பேதம் இருக்கிறது. ஆகவேதான் தந்தை பெரியார் அவர்கள், ‘‘பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடம்’’ என்று சொல்கிறார்.

அவருடைய போராட்டங்கள் எல்லாம் இந்த இலக்கை நோக்கித்தான் சென்றிருக்கின்றன.

இட ஒதுக்கீடு என்பதுகூட ஜாதி ஒழிப்புதான். அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு கிடந்தார்கள். அவர் களை மேலே கொண்டுவரவேண்டும் என்று சொன்னால், கல்வி, வேலை வாய்ப்புகள் - அவர்களுக்கு உரிய வகையில் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். வெளிப்படையாகப் பார்த்தால், அது முரண் பாடாகத் தோன்றலாம். கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் தான், அதில் உள்ள பொருள் என்னவென்று நன்றாகத் தெரியும்.

இரட்டைமலை சீனிவாசன் 

கொண்டு வந்த தீர்மானம்

அதேபோல், 1921 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்கூட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்.

பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் இவற்றை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தால், ரூ.50 அபராதம். அந்தக் காலத்தில் ரூ.50 என்பது  பெரிய தொகைதான் - ஒரு மாதம் சிறை!

‘‘ஒடுக்கப்பட்ட மக்களை பேருந்துகளில் ஏற்ற அனுமதி மறுத்தால், அந்தப் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும்''என்று டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியன் அவர்கள், மாவட்டக் கழகத்தின் தலைவராக இருந்த பொழுது அந்த ஆணையைப் பிறப்பிக்கிறார்.

அதேபோல சிவகங்கை ராமச்சந்திரனார் அவர்கள், தாலுகா குழு தலைவராக இருந்தபொழுது, ஒடுக்கப்பட்ட மக்களை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்தால், அதற் குரிய மானியம் நிறுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

தந்தை பெரியாருடைய பணி, கொள்கை என்பது ஜாதி ஒழிப்புதான்!

இப்படி தொடர்ச்சியாக தந்தை பெரியாருடைய பணி, கொள்கை என்பது ஜாதி ஒழிப்புதான்.

அதற்காகத்தான் கடவுளை எதிர்த்தார்; அதற்காகத் தான் மதத்தை எதிர்த்தார். அதற்காகத்தான் சாஸ்திரங் களை எரித்தார்; இன்னும் சொல்லப்போனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தினையும் கொளுத்தினார்.

கடைசியாக தந்தை பெரியார் அவர்களால் அறி விக்கப்பட்ட  போராட்டம் என்பது - அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டமாகும்.

பொது வெளியில் நடப்பதற்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

உணவு விடுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் செல்ல முடியாது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் நாய்களும், பறையர்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத் திருந்தார்கள். ரயில்வே நிலையங்களில் பிராமணாள் - சூத்திராள் என்று இருந்தது. அதற்கும் போராடி தந்தை பெரியார்தான் அவற்றையும் ஒழித்தார்.

ஆகவே, வைக்கம் போராட்டத்திற்கு முன்பே, தந்தை பெரியாருடைய அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்பு என்பதில் மிக முக்கியமாக இருந்தார்.

‘‘பறையன் பட்டம் போகாமல், 

உன் சூத்திரப் பட்டம் போகாது’’ 

பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய சூத்திர மக்களுக்கு ஓர் அறிவுரை சொல்கிறார், ‘‘பறையன் பட்டம் போகாமல், உன் சூத்திரப் பட்டம் போகாது’’ என்று.

இவையெல்லாம் எவ்வளவு ஆழமான கருத்துகள். அதனுடைய தொடர்ச்சிதான் வைக்கம் போராட்டம் என்பது.

இன்றைக்கு சில பேர், ‘‘வைக்கம் போராட்டத்திற்கும் - பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்கக் கூடிய அளவிற்கு ஒரு திமிர் இருக்கிறது என்று சொன் னால், இதுபோன்ற பிரச்சாரக் கூட்டங்களின்மூலமாகத் தான் அதனைக் கண்டித்து நாம் பதில் சொல்ல முடியும் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடியும்.

ஆசிரியர் அவர்கள்கூட சொன்னார்,  வைக்கம் போராட்ட 60 ஆம் ஆண்டு விழா எடுக்கப்படும் என்று செய்தி வெளிவந்த நேரத்தில், 1985 ஆம் ஆண்டு ‘துக்ளக்‘கில் நெல்லை ஜெபமணி என்பவர், உங்களுக் கெல்லாம் தெரியும் - நம்மிடம் ஆழ்வார்கள், விபீடணர் கள் மிகக் குறைந்த விலைக்கு விலை போவார்கள் என்று. அதில் ஒரு செய்தி வெளிவந்தது ஒரு திருத்தம் என்று - நெல்லை ஜெபமணி எப்பொழுதும் காந்தியடிகள் என்றுதான் சொல்வார்; மகாத்மா காந்தி என்றுதான் சொல்லுவார்; ஆனால், தவறாக காந்தியார் என்று வந்திருக்கிறது.

எங்கே தவறு நடந்தது என்றால், நெல்லை ஜெபமணி சொல்ல, சொல்ல ‘துக்ளக்‘ பத்திரிகைக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் எழுதினார்களாம்.

பார்ப்பனர்கள் கைக்கூலிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து விளம்பரம் கொடுப்பார்கள்

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

இன்னொரு திருத்தம் வெளிவந்தது.

வைக்கம் போராட்டத்தைப்பற்றி எனக்குத் தகவல் களை ‘துக்ளக்‘ ஆசிரியர் குழுமம் கொடுத்தது.

நன்றாக நினைத்துப் பாருங்கள். இரண்டு திருத்தங்கள் வெளிவந்தது.

ஆக, இவர் ஒரு கைக்கூலியாக செயல்பட்டு இருக்கிறார். பார்ப்பனர்கள் கைக்கூலிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து விளம்பரம் கொடுப்பார்கள்.

அந்த நேரத்தில், ஆசிரியர் அவர்கள் ‘சோ’விடம் பேசி, அதற்கு மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘சோ' தெரி வித்தபடி ஒரு பக்கம் அளவில் எழுதினார். அப்பொழுது ஆசிரியர் அவர்கள் மலேசியா சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

தொடர்ந்து ஜெபமணியினுடைய கட்டுரைகள் வர ஆரம்பித்தன. 

கட்டுரையையும் அவர்கள் வெளியிடவில்லை; கட்டுரைகளை திருப்பி அனுப்பவுமில்லை!

அப்பொழுது ஆசிரியர் அவர்கள், ‘‘அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதி அனுப்புகிறேன். ஜெபமணிக்கு எத்தனைப் பக்கம் கொடுத்திருக்கிறீர்களோ, அதே போன்று எங்களுக்கும் கொடுக்கவேண்டும். எங்களு டைய மறுப்புக் கட்டுரையை வெளியிட உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், நாங்கள் எழுதிய கட்டுரை களை தலைமைக் கழகத்திற்குத் திருப்பி அனுப்பி விடுங்கள்'' என்று எழுதினார்.

கட்டுரையையும் அவர்கள் வெளியிடவில்லை; கட்டுரைகளை திருப்பி அனுப்பவுமில்லை. அவர் களுடைய அறிவு நாணயம் எவ்வளவுக் கேவலமானது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இப்படியாக ஒரு நீண்ட போராட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

வைக்கத்தில் தேவஸ்தான கமிஷனர் ராஜவர்மன் என்பவர் இருந்தார். அவரும், சில வைதீகர்களும் காந்தியாரை, வைக்கத்தில் சந்திக்கின்றார்கள்.

அதனுடைய விளைவு என்னவென்றால், அதுவரை யில் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் தெருவில் நடக்கலாம். 

காந்தியாருடைய சந்திப்பிற்குப் பிறகு, புதிதாக ஒரு சுவர் எழுப்பியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அந்தத் தெருவில் போகக்கூடாது என்று.

காந்தியாருடைய பங்களிப்பு என்ன?

ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி சித்தானந்தா, ‘ரீடர்’ எனும் பத்திரிகையில், 8.6.1924 இல் என்ன எழுதியிருக் கின்றார் என்றால், ‘‘காந்தியார் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், வைக்கம் போராட்டம் அதற்கு முன்பே வெற்றி பெற்றிருக்கும்.’’

அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்?

காந்தியாருடைய பங்களிப்பு என்ன? அவர் என்ன செய்திருக்கிறார்? என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

திருவனந்தபுரத்தில் மன்னர் வளாகத்தில்  அற நிலையக் குழுவும் இருக்கிறது;  நீதிமன்றமும் இருக்கிறது; அரசருடைய பிறந்த நாள் விழா நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் என்பவர் தெருவில் நடக்கக்கூடாது என்று தடுக்கப்படுகிறார். 

அதனை எதிர்த்து அங்கே இருந்த கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் எல்லாம் ஒரு சத்தியாகிரகத்தைத் தொடங்குகிறார்கள். 19 பேர் கைது செய்யப்படுகிறார்கள். அதற்குமேல் ஆட்கள் இல்லை.

வைக்கம் போராட்டக்காரர்கள் 

யாருக்குக் கடிதம் எழுதினார்கள்?

என்ன செய்யலாம் என்று யோசித்தனர். இந்தியாவில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்?

காந்தியாருக்கு அவர்கள் கடிதம் எழுதினார்களா?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்குக் கடிதம் எழுதினார்களா?

எந்தத் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள் தெரியுமா?

இந்தியாவிலே, பெரியாரை மட்டும் கணக்கில் கொண்டு, அவர் வந்து இங்கே போராட்டம் நடத்தினால் வெற்றி பெற முடியும் என்று தந்தை பெரியாரை அவர்கள் தேர்வு செய்தார்கள் என்றால், அதற்குத் தனியே விளக்கம் தேவையில்லை.

அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. காந்தியார், வழவழா கொழகொழா என்பார் என்று.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து எல்லாம் தோழர்கள் காய்கறிகளோடும், பணத்தோடும் வருகிறார்கள். 

உடனே காந்தியார் கடிதம் எழுதினார், ‘‘வெளி மாநிலத்தவர் இதில் தலையிடக் கூடாது’’ என்று.

‘‘ஜார்ஜ் ஜோசப், நீங்கள் கிறித்தவர்; ஆகவே, இதில் நீங்கள் தலையிடக்கூடாது’’ என்று சொன்னார் காந்தியார்.

இது மனித உரிமைப் போர். அதற்காகப் போராடு கிறோம்; இதில் மதம் எங்கே இருந்து வந்தது என்று சொல்கிறார் ஜார்ஜ் ஜோசப்.

தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசை விட்டு வெளியேறி, அய்ந்தாவது நாளில் வைக்கம் போராட்ட வெற்றி விழா நடைபெறுகிறது. தந்தை பெரியாரும், அன்னை நாகம்மையாரும் அவ்விழாவிற்கு அழைக்கப் படுகின்றனர். அவர்களும் அங்கே செல்கின்றனர்.

காந்தியார் அவர்கள், காங்கிரசிலிருந்து அர்ஜூன சபாபதி என்ற ஒருவரை அனுப்பினார். அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை!

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக் கிணறு, தனி பள்ளிக்கூடம்; இவற்றிற்காக அந்த நிதி அனுப்பப்பட்டது. அதை தந்தை பெரியார் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அந்த நிதியைத் திருப்பி அனுப்பினார்.

காரைக்குடியில், தனிக் கிணற்றை திறப்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் அழைக்கப்படுகிறார். மேள தாளத்தோடு பெரிய வரவேற்பு அவருக்குக் கொடுக்கப் பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள், ‘‘எனக்குப் பெருமை சேர்ப்பதாக இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருக்கிறீர்கள்; இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நான் வெட்கப்படுகிறேன்’’ என்றார்.

இப்படி யார் சொல்வார்கள்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தனிக் கிணறு; ஜாதியின் அடையாளம் அது. பறையன் கிணறு என்று சொல்வார்கள்.

இப்படி ஒரு நிரந்தர நினைவுச் சின்னம் - ஜாதியின் பெயரால் ஏற்படுவதற்கான ஏற்பாடு என்று. எதற்காக தந்தை பெரியாரை அழைத்தார்களோ, அதை அவர் பெருமையாக நினைக்கவில்லை.

மனிதநேயக் கொள்கை; 

மனித உரிமைக் கொள்கை

எங்கே சென்றாலும், தன்னுடைய கொள்கை, யார் வவேற்கிறார்கள்; யார் எதிர்க்கிறார்கள் என்பதைப்பற்றி தந்தை பெரியார் கவலைப்படமாட்டார். அவருடைய கொள்கை மனிதநேயக் கொள்கை; மனித உரிமைக் கொள்கை. 

தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட் டத்தை அறிவித்தார். 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, தஞ்சையில் ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாடு - அந்த மாநாட்டில் தந்தை பெரியார் ஒரு கேள்வி கேட்கிறார்.

ஜாதி இருக்கும் நாட்டில், சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில், ஜாதி இருக்கலாமா?

‘‘இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்; சுதந்திர நாட்டிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. நான் கேட்கிறேன், ஜாதி இருக்கும் நாட்டில், சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில், ஜாதி இருக்கலாமா?''

இந்தக் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

அத்தகைய தலைவர் தந்தை பெரியார் அவர்கள். சூரியனை கைகளால் மறைத்துவிட முடியாது.

இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கின்றார்.

ஹிந்தி மொழியில் தந்தை பெரியார்பற்றி எழுதப்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

டாக்டர்கள் மாநாட்டில் கேள்வியும் - பதிலும்!

லக்னோவில் அகில இந்திய டாக்டர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர்களும் அந்த மாநாட்டிற்குச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் அறைகளும் ஒதுக்கப்பட்டன.

மாநாடு முடிந்த பிறகு, அறையின் சாவி அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அங்கே இருந்த மக்கள் தொடர்பு அதிகாரி, மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து யாராவது வந்திருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

ஆம், நான் வந்திருக்கின்றேன் என்று ஒரு டாக்டர் சொல்கிறார். என்ன விஷயம் என்றும் கேட்கிறார்.

‘‘25 ஆண்டுகளாக நான் இந்தப் பொறுப்பில் இருக்கிறேன்; இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடைபெறுகிறது. நானும் பார்க்கிறேன், தமிழ் நாட்டைத் தவிர, வேறு மாநிலங்களிலிருந்து வந்த டாக்டர்களின் பெயருக்குப் பின், ஏதோ ஒரு ஜாதிப் பட்டம் இருக்கிறது; பட் என்று இருக்கிறது; சாஸ்திரி என்று இருக்கிறது; அய்யர் என்று இருக்கிறது; அய்யங்கார் என்று இருக்கிறது; முகர்ஜி என்று இருக்கிறது. ஆனால், மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து வந்த டாக்டர்களின் பெயருக்குப் பின்னால், எந்த ஜாதிப் பட்டமும் இல்லையே, ஏன்?'' என்று கேட்கிறார்.

‘‘அதற்குக் காரணம் இருக்கிறது; எங்கள் நாட்டில் ஒரு தலைவர் இருந்தார்; எங்கள் பெயருக்குப் பின்னால், படித்த பட்டத்தைப் போடவேண்டுமே தவிர, ஜாதிப் பட்டத்தைப் போடக்கூடாது என்று சொன்னார்'' என்று அந்த டாக்டர் அவரிடம் சொன்னார்.

அவர் அப்படி சொன்னவுடன், ‘‘இராமசாமி நாயக் கரா?’’ என்று கேட்கிறார் அந்த மக்கள் தொடர்பு அதிகாரி.

இன்றைக்குத் தமிழ்நாட்டில்கூட பார்ப்பனர்கள் ஜாதிப் பட்டத்தைப் போடுவதில்லை. ஒரு காலத்தில் ஜாதிப் பட்டத்தைப் போட்டால், பெருமையாகவும், வசதியாகவும் இருந்தது அவர்களுக்கு.

ஜாதிப் பட்டத்தைப் போட முடியாத சூழ்நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார்

இன்றைக்கு அப்படி ஜாதிப் பட்டங்களைப் போட்டால், ஆபத்து என்று நினைக்கிறார்கள். நம்மை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு விடுவார்கள். பார்ப்பன எதிர்ப்புரட்சி தமிழ்நாட்டில் தீயாக எரிந்து கொண்டிருக்கிறது என்கிற அளவிற்குப் பார்ப்பனர் களேகூட பெயருக்குப் பின்னால், ஜாதிப் பட்டத்தைப் போட முடியாத சூழ்நிலையை உருவாக்கினார் என்றால், அவர்தான் தந்தை பெரியார்.

இப்பொழுது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை; நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர், மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்று நூறாவது நாளன்று, ஆகமம் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆணை வழங்கப்பட்டது. இப்பொழுது அதற்கும் நீதிமன்றத்தில் நெருக்கடி. அதற்கென்றே சில நீதிபதிகள் இருக்கிறார்கள்; அவர்களிடம்தான் இதுபோன்ற வழக்குகள் செல்லும்.

எல்லா மன்றங்களையும்விட, 

அதிகாரம்மிக்கது மக்கள் மன்றம்தான்!

ஆசிரியர் அவர்கள்கூட சொல்வார்கள், ‘‘எல்லா மன்றங்களையும்விட, அதிகாரம்மிக்கது மக்கள் மன்றம் தான்’’ என்று.

மக்களிடம் செல்வோம்; அவர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவோம்.

தா.பாண்டியன் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்வார்,  ‘‘தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்தில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் இல்லை; ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை; ஒரு மாநகராட்சி உறுப்பினர்கூட இல்லை; ஆனால், அவர்தான், அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தார்’’ என்று சொல்வார்.

தந்தை பெரியார் அவர்கள், மக்களிடம் சென்றார்; வெற்றி பெற்றார். அதே வழியில்தான் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்களும். 90 வயதிலும் 40 நாள்கள் சுற்றுப்பயணம். அடுத்தடுத்துத் தொடர்ந்து சுற்றுப்பயணம்.

மாலை நேரத்தில் மக்களைச் சந்திக்கவேண்டும் என்பதை, அவருடைய 10 வயதிலிருந்து பழகிவிட்டார்; அதைத் தடுக்க முடியாது; எங்களைப் போன்றவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

தொடர்ந்து மூன்று நாள் கூட்டம்; நேற்று ஒரு கூட்டம்; நடுவில் ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்களு டைய உரிமைக்கான மாநாடு. இந்தப் பிரச்சாரம்தான் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

இந்தியாவில், தமிழ்நாடு ‘திராவிட மாடலாக'த் திகழ்ந்து கொண்டிருக்கிறது

லால்குடியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், 5 மணிநேரம் பேசினார் தந்தை பெரியார் அவர்கள். மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் 4 மணிநேரம் பேசினார்.

இப்படிப் பேசிப் பேசி, மக்களுடைய சிந்தனைகளைத் தட்டியெழுப்பியதன் காரணமாகத்தான், இந்தியாவில், தமிழ்நாடு திராவிட மாடலாகத் திகழ்ந்து கொண்டிருக் கிறது. தந்தை பெரியாருடைய கருத்துகளை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்லுவோம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.


No comments:

Post a Comment