(12.6.1967 அன்று திட்டக்குடியில் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது)
நண்பர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தினை திறந்து வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே! நான் சமீபத்தில் ஒரு பள்ளிக் கட்டிட திறப்பு விழாவிற்காக ஒகளூர் சென்றிருந்தேன். அந்த விழாவிற்கு அமைச்சர் கோவிந்தசாமி அவர்களும் வந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் நான் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் வந்து இரகசியமாக என் காதில் அண்ணாதுரை அவர்களின் படத்தினை திறந்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். நான், இதில் என்ன இரகசியம் வேண்டி இருக்கிறது. அண்ணாத்துரையின் படத்தினை திறந்துவைப்பது எனக்கு பெருமைதான் என்று கூறி அண்ணா படத்தைத் திறந்துவைத்தேன்.
தொண்டிணைப் பாராட்டுவதற்கே திறப்பு
ஒருவருடைய படத்தினை திறப்பதென்றால் அவரைப்பற்றி அவரது தொண்டுகளைப்பற்றி சிலவற்றை சொல்லவேண்டியது அவசியமும் சம்பிரதாயமும் ஆகும். நண்பர் கருணாநிதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அறிவாளிகளில் முன்வரிசையில் உள்ள அறிவாளி ஆவார். தி.மு.கழகம் இந்த அளவு பரவுவதற்கு அவரது முயற்சியும் அறிவும்தான் காரணமாகும். அண்ணாதுரை கழகத்தின் தலைவராக இருந்தார்: அவரும் கழகத்தைப் பரப்பினார் என்றாலும் கருணாநிதியின் உழைப்பும் முயற்சியும் இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்த அளவு வளர்ந்து இருக்காது. இதை சொல்வதால் அண்ணாதுரையை நான் குறைத்துச் சொல்வ தாகாது. அண்ணாதுரைக்கு பல வேலை - பல கருத்து! அவர் ஒருவராலேயே கழகத்தை இந்த அளவு பரப்பி இருக்க முடியாது. கருணாநிதி அவர்கள் அண்ணாதுரைக்கு வலது கையாக இருந்து உதவி வந்திருக்கிறார்.
அண்ணாதுரை - கருணாநிதி என்னிடம் பயின்றவர்களே!
அண்ணாதுரை மிகவும் கெட்டிக்காரர்தான். ஆனால் கருணாநிதிக்கு இருக்கிற முன்யோசனை அவருக்குக் கிடையாது. நண்பர் இளம்வழுதி அவர்கள் சொன்னதுபோல பள்ளிக்கூடத்தை விட்டதும் என்னிடம் நேராக வந்தார். “எனக்கு பொதுத்தொண்டு செய்ய ஆவலாக இருக்கிறது” என்று கூறினார். நானும் என்னிடம் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீங்களும் இருங்கள் என்று சொன்னேன். எனது வீட்டிலேயே இருந்தார். ‘குடிஅரசு’ ஆபீஸிற்குப் போய் வந்து கொண்டிருந்தார். பிறகு எழுதவும், மேடையில் பேசவும் ஆரம்பித்தார். நல்ல கருத்தாளர் ஆனார்: எழுச்சியுள்ளவரானார். வரவர நல்ல கருத்து பிடிபட்டது. பிரச்சாரக் கலையும் பிடிபட்டது.
ஒரு பொதுக்கூட்டத்தில் நானும் இருக்கும்போது என்னைவிட அதிக கடுமையாகப் பேசிவிட்டார். நான் அதற்கு அவரைக் கண்டித்தேன். அதை அவர் மனதிலேயே வைத்துக் கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பம் வந்தபோது என்னையே கண்டித்துப் பேசிவிட்டார். அந்த சம்பவம் உங் களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்பதற்காக சொல்கிறேன்.
பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி நடத்தியது
நான் வருடம் தவறாமல் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி நடத்துவது வழக்கம். அந்த வருடம் தஞ்சாவூர் ஜில்லாவில் நடத்தலாம் என்று ஆசைப்பட்டேன். திருவாரூரில் உள்ள நமது கழகத்தோழர் யாகூப் அவர்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள மாவூர் திரு.ஆர்.எஸ்.சர்மா அவர்களிடம் போய் உங்கள் தோட்டத்தில் பயிற்சிப் பள்ளி நடத்திக் கொள்வதற்கு 20 நாட்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டாராம். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு தாராளமாக நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதும் திரு.யாகூப் அவர்கள் "நாங்கள் சமையல் எந்த இடத்தில் வைத்துக்கொள்வது? குறைந்தது 25 பேருக்கு சமையலாக வேண்டும். அதோடு அடிக்கடி வெளியூரி லிருந்து தோழர்கள் வந்து போவார்கள். அவர்களுக் கெல்லாம் இங்கு சாப்பாடு போடவேண்டி இருக்கும். சமையல் இடம் வசதியாக இருந்தால் நல்லது" என்று கூறி இருக்கிறார். உடனே திரு.சர்மா அவர்கள், “எத்தனை பேராக இருந்தால் என்ன? எல்லோருக்கும் நமது பங்களா வில்தான் சமையல், சாப்பாடு எல்லாம்” என்று கூறிவிட்டார். இதை வந்து திரு.யாகூப் என்னிடம் சொன்னார். நானும், ‘சரி’ என்று ஒத்துக்கொண்டு அங்கேயே பயிற்சி முகாமை ஆரம்பித்து நடத்தினேன். அதற்குள் கருணாநிதிக்கு இரண்டு மூன்று பேர் சேர்ந்துவிட்டனர். ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது என்னை - "தலைவர், தலைவர் என்று சொன்னோம். அவரே போய் பார்ப்பான் வீட்டிலே உட்கார்ந்துகொண்டு சாப்பிடுகிறார்" என்று என்னையே கண்டித்துப் பேசினார்.
கருத்து வேற்றுமை இருந்தும் குறைகூறவில்லை
அதிலிருந்து கருத்து வேற்றுமை ஆரம்பித்து அவருக்கும் குறிப்பிடத்தக்க பலம் வந்ததும், நானும் கண்டிப்போடு கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் விலகவே செய்து விட்டார்கள். விலகினாலும் அண்ணாதுரையின் கெட்டிக்காரத்தனம் என்னைப் பற்றி ஒரு சிறு குறைகூட கூறாமல் "அவர்தான் எங்கள் தலைவர். அவரது கொள்கைதான் எங்களுக்கும்" என்று சொல்லி நல்ல அளவு மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்டனர்.
அண்ணாதுரையாவது, கருணாநிதியாவது என்னைக் குறிப்பிட்டு என் காரியத்தைக் குறிப்பிட்டு இதுவரை ஒரு சிறு குறைகூட கூறியது கிடையாது. இன்றைக்கும் அண்ணா துரை “என் தலைவர் பெரியார்தான்” என்று கூறுகிறார்.
கருணாநிதியின் தொண்டும் முயற்சியும்!
அதேபோல் கருணாநிதியும் என்னை எங்கு கண்டாலும் செல்லப்பிள்ளை மாதிரி நெருங்கி மிக உரிமையோடு உரையாடுவார். இன்னமும் தி.மு.க.வுக்கு கருணாநிதியின் தொண்டு பயன்படத் தக்கதாகும். அவரது தொண்டும் முயற்சியும் பிறர் கடைபிடிக்க வேண்டியதாகும். அவரது படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘விடுதலை’ - 20.6.1967
No comments:
Post a Comment