ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: கலைஞர் நூற்றாண்டில் மனதை விட்டு அகலாத கலைஞருடனான நினைவு எது?                                             

                                                                                                   -  க.குமரன்,திருநெல்வேலி   

பதில் 1: 70 ஆண்டுகள் நட்பு - உறவு - உரசல் - 'ஊடல்' - இவற்றில் எத்தனை எத்தனையோ நினைவுக்குதிரில் உண்டு. முதன்முறையாக கோவையில் மாரடைப்பு வந்து - சிகிச்சையின் தொடர்ச்சியாக அதன்பின் நான் சென்னை பி.எஸ்.எஸ்.சோமசுந்தரம் மருத்துவமனையில் இரண்டாம் முறை சேர்க்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவசரமாக - முதலமைச்சர் பணி பொறுப்பில் இருந்ததால் டில்லி புறப்படு முன் - வந்து பார்த்து பொது மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, ஒரு மருத்துவர் குழு - நிபுணர் குழு போட்டு (4 பேர்) நாளும் கவனிக்க மருத்துவ இயக்குநருக்கு ஆணையிட்டு எனக்கு சிகிச்சை அளித்ததோடு, அன்றைய மாவட்டச் செயலாளர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களை டில்லியிலிருந்து தொலைப்பேசியில் அழைத்து - அப்போது கவலையுடன் உடல்நிலை விசாரித்த அந்தப் பதற்றம் நிறைந்த கவலை - எங்களது உள்ளார்ந்த நட்புறவுக்கு ஒரு மறக்க முடியாத நினைவு (1989-1990இல்)

----

கேள்வி 2: தமிழ்நாடு, கேரளா, தற்போது கருநாடகா மூன்று மாநிலங்களுமே முற்போக்குச் சிந்தனையாளர்களை முதலமைச்சர்களாக பெற்றுள் ளனவே?

                                                                                                - ம.மாணிக்கம், மதுரை

பதில் 2: தென்னாடு திராவிடம் "வளமார் திராவிடம்" என்பதன் பிரதிபலிப்பு. (ஆந்திரா - தெலங்கானா) மற்ற இரண்டும்கூட சமூக நீதியில் நம்பிக்கை உடையவர்கள்தான்! பகுத்தறிவில் அவரவர் பரிமாணம் வெவ்வேறானவை - சிலவற்றில் மாறானவர்கள் அவ்வளவுதான்!

----

கேள்வி 3: கேரள கோவில்களில் ஹிந்து அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளதே? தமிழ்நாட்டுக் கோவில்களில்  பிரிவினை வாதம் பேச ஒன்று கூடுகின்றனர் - இங்கும் தடை செய்யப்படுமா?

                                                                                                  - வே.ஆறுமுகம், வேலூர்

பதில் 3: ஹிந்து அறநிலையத் துறையில் கோவில்களில் இப்படி ஷாகாக்கள் - நடத்த அனுமதி மறுக்கலாம் - சட்ட ஆணையே போட லாம்! வெறுப்புப் பிரச்சாரம் அரசியல் சட்டம் 51கி பிரிவுக்கு நேர் எதிரானது அல்லவா?

---

கேள்வி 4: 2000 ரூபாயை எதற்காக அறிமுகப் படுத்தினார் மோடி - இப்போது எதற்காக ரத்து செய்கிறார்?

                                                                                      - தி.கிருட்டிணசாமி, திண்டுக்கல்

பதில் 4: எந்தக் கேள்விக்கும் எப்போதும் பதில் அளிக்காதவர். இப்போது இதற்கா பதில் அளிக்கப் போகிறார்?

----

கேள்வி 5: 2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேர்வாணைய தேர்வில் முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்துள்ளார்களே?

                                                                                          - ஆ.வேணுகோபால், திருத்தணி

பதில் 5: மகளிர் எப்போதும் கல்வியில் - ஆற்றலில் முதன்மையானவர்கள். ஆற்றல் - திறமை இதுவரை புதைகுழியிலிருந்தவை - இப்போது வாய்ப்புக் காரணமாக வெளிச்சமிட்டு உயரே வருகிறது.

----

கேள்வி 6:  பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ள புதுச்சேரியில் உயர்கல்வி தேர்ச்சி விகிதம் சரிந்துகொண்டே செல்கிறதே?

- கி.இராமானுஜம், திருச்சி

பதில் 6: ஆட்சியே தள்ளாடுகிறது புதுச்சேரியில். காரணம் 'காவி போதை! - பாதை!'

----

கேள்வி 7: மல்யுத்த வீரர்களின் டில்லி போராட்டத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் செல்கிறதே?

                                                                                                 - வே.கைலாசநாதன், காஞ்சி

பதில் 7: வீணாகாது அவர்களது கண்ணீர்! 2024இல் விடை தருவார்கள் மக்கள்!

----

கேள்வி 8: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் நம்பிக்கைக்குரிய நபரா?

                                                                                                       - ம.ஜோதி, வியாசர்பாடி

பதில் 8: நிச்சயமாக இல்லை. கொள்கை எதிரிகளே இந்தப் பச்சோந்தி 'நடிப்புச் சுதேசிகளை விட, பல மடங்கு 'மேலானவர்கள்'(?) என்றே கூறத் தோன்றுகிறது! மோடியை விட நன்கு வித்தைக் காட்டுபவர் - சமூகத்தின் முதல் எதிரி அவர்!

----

கேள்வி 9: ஹிந்து அமைப்பின் எதிர்ப்பால் இஸ்லாமியருடனான தனது மகளின் திருமணத்தை நிறுத்திய உத்தராகண்ட் பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குறித்து?

                                                                                                     - ச.தினகரன், திண்டிவனம்

பதில் 9: ஹிந்து மதம் சகிப்புத்தன்மை உள்ள மதம் என்ற புரட்டுக்கு நல்ல எடுத்துக்காட்டு இது!

----

கேள்வி 10: ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று மோடி ஆஸ்திரேலியாவில் சென்று கோரிக்கை விடுத்துள்ளாரே? 

                                                                                             - கோ.மாரிமுத்து, தாம்பரம்

பதில் 10: பொதுவாக பேசியிருந்தால் வரவேற்பிற் குரியது. அங்கும் ஹிந்துத்துவா பிழைப்புதானா? வெட்கக் கேடு.


No comments:

Post a Comment