யாரும் சாதிக்க முடியாததை இந்த இயக்கம் சாதித்திருக்கின்றது
அரசு ஊழியர்களைப்போல - போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்!
தாம்பரம், மே 23 போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு, அரசு ஊழியர்களைப்போல ஓய்வூதி யத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்; போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய்வரை ஓய்வூதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்த இயக்கம் நம்முடைய இயக்கம் என்றார் தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள்.
திராவிடர் தொழிலாளர் கழக
4 ஆவது மாநில மாநாடு
கடந்த 20.5.2023 அன்று காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டினைத் தொடங்கி வைத்த தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண் முகம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அறிவுப்பூர்வமாக எதிர்க்கவேண்டும்; இன்னொன்று அனைவரும் ஒற்றுமையோடு எதிர்க்கவேண்டும்
அதை எதிர்ப்பது எப்படி?
ஒன்று, அறிவுப்பூர்வமாக எதிர்க்கவேண்டும்; இன் னொன்று அனைவரும் ஒற்றுமையோடு எதிர்க்க வேண்டும். தொழிலாளர்களின் மனதில், அந்தக் கருத்துகளை உருவாக்கவேண்டும். இவற்றையெல்லாம் செய்து நாம் அதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த எண்ணங்கள் உங்களுக்கு வரவேண்டும் என்பது தான் இந்த மாநாட்டில் நான் சொல்ல விரும்புவது.
தொ.மு.ச. பேரவையில் இருக்கக்கூடியவர்களின் எண்ணங்கள் வேறு; திராவிடர் தொழிலாளர் கழகத்தில் இருக்கக்கூடியவர்களின் எண்ணங்கள் என்பது வேறு. இதை நான் நன்றாகத் தெரிந்தவன் என்பதால்தான், இங்கே நான் திறந்த மனதோடு பேசுகின்றேன்.
நாம் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும்
நம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பாகுபாடு களைக் களைவதற்கு நாம் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
நான் ஏறத்தாழ 1982 ஆம் ஆண்டிலிருந்து தொ.மு.ச. பேரவையில் இருந்து வருகின்றேன். 1989 ஆம் ஆண்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கழகம் ஆட்சிக்கு வந்தது.
தலைவரிடம் சென்று, சில விஷயங்களைப்பற்றி அவரிடம் சொல்வோம். கொள்கை ரீதியாக, ஓர் உதாரணத்திற்கு சர்க்கரை ஆலைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவித பதவி உயர் வும் இல்லை. ஆனால், அவர்கள் காலையில் ஒரு மணிநேரம் -மாலையில் ஒரு மணிநேரம்தான் பணி; மீதி நேரம் எல்லாம் ஒர்க்ஷாப்பிலேதான் அமர்ந்திருப்பார்கள்.
அங்கே இருக்கின்ற பிட்டர் சொல்கின்ற வேலைகளையெல்லாம் அவர்கள் செய்வார்கள்.
துப்புரவு பணியாளர் என்ற பெயர் துடைத்தெறியப்படும்
நான் தலைவரிடம் சொன்னேன், இதுபோன்று நிறைய பேர் இருக்கிறார்கள்; அவர்களையெல்லாம் ஒர்க்ஷாப்பிலே உதவியாளர்களாக நியமித்தால், துப்புரவுப் பணியாளர் என்ற அந்தப் பெயரை மாற்றம் செய்து, மெக்கானிக் என்ற பெயர் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கும். துப்புரவு பணியாளர் என்ற பெயர் துடைத்தெறியப்படும் என்று சொன்னேன்.
நான் இதைச் சொல்வதற்குக் காரணம் என்ன வென்றால், கரூரைச் சேர்ந்த செல்வம் என்கிற அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் இருந்தார். அவருடைய அப்பா, கரூர் முனிசிபாலிட்டியில் துப்புரவு தொழிலாளி.
அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி என்னிடம் சொல்வார், ‘‘அப்பா என்னோடு வரமாட்டேன் என்கிறார்; நானும் அங்கே செல்ல முடியவில்லை; ஏனென்றால், அவர் துப்புரவு தொழிலாளியாக இருக்கிறார்'' என்று வேதனையோடு சொன்னார்.
இதைத் தலைவரிடம் சொன்னோம்; தலைவர் அதனை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டு, உடனடியாக அந்த சமத்துவத்தை உருவாக்கிக் கொடுத்ததினால், இன்றைக்கு அத்துணை பேரும் ஃபோர்மேனாகி, ஓய்வு பெறுகிறார்கள்.
நாம் ஒரு விரிந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம்!
வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத் தோம்; போனசை வாங்கிக் கொடுத்தோம் என்பது மட்டுமல்ல; நம்மைப் பொறுத்தவரையில் நாம் ஒரு விரிந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம்.
கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட அத்துணை பொதுத் துறை நிறுவனங்கள், தனியார்த் துறை நிறுவனங்கள், அந்த வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் பெறுகிறார்கள். அந்த ஓய்வூதியம் எவ்வளவு என்றால், 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரையில்தான்.
ஆனால், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களுக்கு, அரசு ஊழியர்களைப்போல ஓய்வூதியத் தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்.
அரசு ஊழியர்களைப்போல, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு...
அரசு ஊழியர்களைப்போல, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய்வரை கிடைக் கின்றது.
நெய்வேலி நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளி, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி, ஓய்வு பெறும்பொழுது, 3 ஆயிரம் ரூபாய் பென்சன் கிடைக்கிறது.
3 ஆயிரம் ரூபாய்க்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கவேண்டும். நாமும், அவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்பவர் கள்தான். சட்டம் ஒன்றுதான். ஆனால், இதை எப்படி சாதிக்க முடிந்தது? எப்படி சாத்தியமானது?
எல்லோரும் கோரிக்கை வைக்கிறார்கள்; 9 ஆயிரம் ரூபாயாவது பென்சன் கொடுங்கள் என்று ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். 3 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் இல்லை என்று சொல்கிறது ஒன்றிய அரசு.
ஆனால், தமிழ்நாட்டில் கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளி ஒருவர், ஓய்வு பெறும்பொழுது பாதி சம்பளம் அளவிற்கு ஓய்வூதியமாகக் கிடைக்கக்கூடிய ஏற்பாட்டை செய்திருக்கின்றோம் என்று சொன் னால், நாம் மற்றவர்களைவிட எந்த அளவிற்கு உயர்ந்திருக்கின்றோம் என்று பார்க்கவேண்டும்.
யாரும் சாதிக்க முடியாததை
இந்த இயக்கம் சாதித்திருக்கின்றது
ஆனால், நாம் என்ன நினைக்கின்றோம் - ஒரு டி.ஏ. வரவில்லை என்றால், ஒரு முழம் நீளத்திற்கு வாட்ஸ் அப்பில் செய்தியைப் போடுகிறோம் - அடுத்த முறை தி.மு.க.விற்கு ஓட்டு போடமாட்டோம் என்று.
ஆனால், நம்மைவிட குறைவான ஓய்வூதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள்; துரை.சந்திரசேகரன் இங்கே இருக்கிறார்; நெய்வேலியில் பணி யாற்றியவர்கள் - ஓய்வு பெற்றவர்கள் எவ்வளவு ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யாரும் சாதிக்க முடியாததை இந்த இயக்கம் சாதித்திருக்கின்றது.
ஒருமுறை பேராசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ‘‘கூட்டுறவில் பணியாற்றுபவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாக ஓய்வூதியம் கொடுக்கவேண் டும்; அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சொல்'' என்று சொன்னார்.
அன்றைய காலகட்டத்தில் ஞானதேசிகன் நிதிச் செயலாளராக இருந்தார்.
கூட்டுறவு வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு அவர்கள் வாங்குகின்ற ஊதியத்தைவிட, 4 ஆயிரம் ரூபாய் அதிகமாக அரசு ஓய்வூதியமாகக் கொடுக் கிறது.
இவையெல்லாம் எப்படி முடிகிறது? நாம் சிந்திப்ப தால் அதெல்லாம் முடிகிறது.
அதுபோலவே சிவில் சப்ளையில் பணியாற்று பவர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தவறு பொதுமக்களுடையதுதான்!
திராவிடர் கழகத்தினுடைய தீர்மானங்களைப் படித்தேன். 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாடு செங்கல்பட்டில் நடைபெறும் பொழுது, தந்தை பெரியார் அவர்கள் ஒரு தீர்மானம் போட்டார்.
பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று. ஆனால், அது நிறைவேறியது எப்பொழுது?
1989 ஆம் ஆண்டு தலைவர் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது.
எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு?
60 ஆண்டுகளுக்குப் பிறகு.
சாதாரண ஓர் உரிமையைப் பெறுவதற்கு 60 ஆண்டுகாலம் நாம் தொடர வேண்டி இருக்கிறது. அது யாருடைய தவறு? அய்யாவினுடைய தவறும் கிடையாது; எங்களுடைய தவறும் கிடையாது. தவறு பொதுமக்களுடையதுதான்.
ஏன்?
அவ்வப்பொழுது ஆட்சியைக் கலைத்து, மாற்றி மாற்றி வாக்களிப்பதினால்தான்.
அந்த ஒரு தொடர்ச்சி... இல்லாமல் இருந்ததுதான்.
இப்பொழுது சொல்கிறீர்களே, எனக்கு டி.ஏ. வரவில்லை என்று சொன்னால், தி.மு.க.விற்கு வாக்களிக்கமாட்டோம் என்று.
அதுபோன்று நிதானம் இல்லாத ஒரு போக்கு கூடாது - இது நம்முடைய அரசு - நம்முடைய அரசு இருந்தால் - சுவர் இருக்குமேயானால், சித்திரம் எழுதலாம். சுவரே இல்லாவிட்டால், எப்படி சித்திரம் எழுத முடியும்?
இதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே சகோதரி உரையாற்றும்பொழுது சொன் னார்கள், ஓவம் டைம், இன்சன்டிவ் என்று. அதிலிருந்து கொஞ்சம் நாங்கள் மாறுபடுகின்றோம்.
எனக்கு வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது 8 மணிநேரம். அப்படி ஒழுங்காக நான் 8 மணிநேரம் வேலை செய்து என்னுடைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு போகிறேன்.
இன்னொரு சகோதரர் குடும்பத்திற்கு
வேலை கிடைக்கும்
இன்னொரு ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால், அதனால் உற்பத்தி அதிகமாகும்; முதலா ளிக்கு லாபம் வரும். எனக்கும் இருமடங்கு சம்பளம் வரும். வீட்டில் அனாவசியமான செலவும் வரும்.
ஆனால், அதை நான் செய்யமாட்டேன் என்று சொன்னால், இன்னொரு சகோதரர் குடும்பத்திற்கு வேலை கிடைக்கும்.
இப்படி நாம் யாராவது நினைக்கின்றோமா?
‘பெல்' நிறுவனத்தில், 120 ராடு வெல்டிங் அடித் தால், 8 மணிநேர சம்பளம். 20 ராடு கூடுதலாக வேலை செய்தால், இரண்டு மணிநேரம் ஓட்டி.
நீ ஏன் கூடுதலாக அடிக்கிறாய்?
உனக்குத்தான் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது அல்லவா! அங்கே ஒப்பந்தத் தொழி லாளர்கள் இருப்பார்கள் - அவர்களுக்கு அந்தப் பணியை செய்யச் சொல்லி, அந்த சம்பளத்தை வாங்கிக் கொடுக்கின்ற எண்ணம் வரவில்லை.
இதெல்லாம் முதலாளிகளுக்கு சாதகமாகப் போகின்றது; நிர்வாகத்திற்கு சாதகமாகப் போகின்றது என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
43 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்து நிரந்தரப்படுத்தியது தி.மு.க. அரசு!
போக்குவரத்துக் கழகத்தில் கேசுவல் லேபர்ஸ் இருந்தார்கள், ஆசிரியர் அய்யாவிற்கும் தெரியும்.
2006 ஆம் ஆண்டிற்கு முன்பாக, சற்றேறக்குறைய 20 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில், மாண்புமிகு நேரு அவர்கள் அமைச்சராக இருந்தார். அவரிடம் சொன்னேன்.
‘‘இது ஒரு பெரிய தொல்லையாக இருக்கிறதே, அரசுக்கு'' என்றேன்.
‘‘என்ன செய்யலாம்'' என்று அவர் கேட்டார்.
‘‘6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெறுகிறவர்களை நாம் கணக்கெடுப்போம். அவர்களை ரிசர்வ் என்று நாம் ரெக்கிரியூட் செய்துவிடுவோம். தற்காலிக மாகக்கூட இருக்கட்டும்; எப்பொழுது நிரந்தரப் பணி வருகிறதோ, அப்பொழுது நிரந்தம் செய்துவிடு வோம். கேசுவல் என்கிற தொல்லையே இருக்காது; எல்லோருக்கும் வேலை கிடைக்கும்'' என்றேன்.
அப்படித்தான் 43 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்து நிரந்தரப்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
அவுட் சோர்சிங்கில்தான் நாங்கள்
ஆட்களை எடுப்போம் என்கிறார்கள்!
ஆனால், அதனை இப்பொழுது சில அதிகாரிகள், ‘‘‘அவுட் சோர்சிங்கில்'தான் லாபம் உண்டு. அவுட் சோர்சிங்கில்தான் நாங்கள் ஆட்களை எடுப்போம்'' என்று சொல்கிறார்கள்.
நான் சொன்னேன், ‘‘நீ அவுட் சோர்சிங்கில் ஆட்களை எடுத்தாலும், உன்னை நான் சும்மா விடமாட்டேன்; நீ குறைந்தபட்சம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்குச் சென்றேன் என்றால், நீ புதிதாக ஆட்களை தேர்ந்தெடுத்து, எவ்வளவு சம்பளமாகக் கொடுக்கப்போகிறாயோ, அதைவிட அதிகமாக நீ கொடுக்கவேண்டி வரும்; அப்பொழுது நீ மாட்டிக் கொள்வாய்'' என்று சொன் னேன்.
‘‘பரவாயில்லை, நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல் வதை நாங்கள் பார்க்கின்றோம்'' என்றனர்.
உடனே தொழிலாளர் நலத் துறை அமைச்சரிடம் சென்று, ஆய்வு செய்யச் சொன்னபொழுது, இப் பொழுது கிடந்து தவிக்கிறார்கள்.
இதெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கக் கூடியது.
இன்னொன்று, தொழில் எப்படி இருக்கின்றது?
நாம் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவேண்டும்.
தொழிற்சங்கத் தலைவர்கள்
சிந்தித்துப் பார்க்கவேண்டும்!
அயல்நாடுகளில் குடிசைத் தொழிலாக இருப்பதை - குறிப்பாக கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், குடிசைத் தொழிலாக இருப்பதை, இங்கே ஒரு பெரிய இன்டஸ்ட்ரீயாக மேக்கப் செய்து, அதில் நிறைய இளைஞர்களை வேலைக்குச் சேர்த்து - கொஞ்ச நாள்களில் அந்த இளைஞர்கள் எல்லாம் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள்.
ஏன் இப்படி? என்பதை தொழிற்சங்கத் தலை வர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தற்காலிகத் தொழிலை
நிரந்தரத் தொழில் என்று ஏமாறுகிறார்கள்!
இவையெல்லாம் ஒரு தற்காலிகமான தொழிலாக இருக்கின்றன; ஆனால், அதனை நிரந்தரத் தொழில் என்று நம்பி வருகிறார்கள்.
உதாரணத்திற்கு, நோக்கியா - நோக்கியா என்பது ஓர் அலைபேசி சாதனம். அந்தக் கம்பெனியில் ஏறத்தாழ 26 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். கொஞ்ச நாள் ஆனவுடன், 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி பாக்கி; 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வரி பாக்கி. நோக்கியா கம்பெனியை, மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனிக்கு விற்றுவிட்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் இந்தக் கடன் இல்லை.
இங்கே வந்தார்கள், வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தார்கள்; கம் பெனியை மூடிவிட்டுப் போனார்கள்.
கடன் வசூல் ஆனதா?
அந்தத் தொழிலாளிகளின் நிலைமை என்னாயிற்று?
யாரிடமும், எந்தப் பதிலும் இல்லை.
மறுபடியும் அதேபோல, சில தொழில்கள் - நிரந்தரத்தன்மை இல்லாத தொழில்கள் உள்ளே வருகின்றன. அப்படிப்பட்ட தொழில்களில் யார் ஏமாந்து போகிறார்கள்? படித்தவுடன் வேலை கிடைக்கவேண்டும்; வேலை கிடைத்துப் போகும் பொழுது, தொழில் எப்படி இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்காமலேயே அங்கே போய்விடுகிறார்கள்.
நான் அன்றைக்கே எச்சரித்தேன்!
உதாரணத்திற்கு ஹூண்டாய் கம்பெனி - முதன் முதலில் கொரியன்ஸ் இங்கே வரும்பொழுது, நாங்கள் எல்லா பணிகளையும் ரோபோக்களை வைத்துத் தான் செய்வோம் என்று சொன்னார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment