சென்னை,மே27- சென்னை திருவான்மி யூரில் உள்ள இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிலையம் மற்றும் பண்டகசாலை (இம்ப்காப்ஸ்) தலைமை அலுவலகத்தில் புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (26.5.2023) வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:
இம்ப்காப்ஸை மேம்படுத்தியதன் மூலம் மருந்து விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இம்ப்காப்ஸில் தயாரிக்கப்பட்ட மருந்து விற்பனை ரூ.55 கோடியை நெருங்கியுள்ளது. வருங்காலத்தில் இதை ரூ.100 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இம்ப்காப்ஸ் மய்யங்கள் உள்ளன. அங்கு உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 43 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பான விவகாரத்தில், ஒரு சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
உடனடியாக அதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
கடமையை செய்து வருகிறோம்
இந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது தேசிய குழந்தைகள் நல ஆணையத்தினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். 2 மருத்துவர்களிடம் நடந்த விசாரணையின்போது, ‘‘அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பெண் களை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்பதும், வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் எங்கள் கடமையை செய்து வருகிறோம்’’ என்று தெளிவாக கூறியுள் ளனர். அதன்படி, தாங்கள் இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என்று இருவரும் உறுதியாக மறுத்துள்ளனர்.
அப்போது இதை ஏற்றுக் கொள்வதுபோல பேசிய தேசிய குழந் தைகள் நல ஆணைய விசாரணை மருத் துவர் ஒருவர், ‘‘சிறுமிக்கு அதுபோன்ற பரிசோதனை நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரிகிறது. எனவே, அச்சப்பட வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.
ஆனால், பின்னர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, ஆளுநரின் கருத்தை உண்மையாக்க முயற்சி செய்துள்ளார். இது முறை யானது அல்ல.
பாதுகாப்பு அவசியம்
நேர்மையான விசாரணை மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதற்கு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற செயல்களால், எதிர்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தின் (டாம்ப்கால்) பொது மேலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment