2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பசுவின் பெயரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவலாகி வருகின்றன. 10 ஆண்டுகளில் 82 நிகழ்வுகளில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 145 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு நிகழ்வுகளை தவிர மற்ற அனைத்தும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தவை. பசுவை தீவிரவாத இந்துத்துவ அரசியலின் அடையாளமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த சங்பரிவார் அழைப்பு விடுக்கிறது. இதன்படி பாஜக ஆளும் மாநிலங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
உ.பி., ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தான் அதிகளவில் கொடூர கொலைகள் நடை பெறுகின்றன. சமீபத்தில், பாஜக ஆளும் கருநாடகாவில், பசு கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில், முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். 2015 மே 30 அன்று, ராஜஸ்தான் மாநிலம், பிரோகாவில் தனது வீட்டிற்குப் பக்கத்தில் இறைச்சி விற்றுக்கொண்டிருந்த அப்துல் கஃபர் குரேஷி, வீடு புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் அடித்துக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, உ.பி.யில் உள்ள தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், தாத்ரி அருகே உள்ள பிசாஹ்தா கிராமத்தில், முகமது அக்லக் என்பவர் வீட்டில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். 2017 ஏப்ரல் 5 அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் அரியானாவைச் சேர்ந்த பால் பண்ணை விவசாயி பெஹ்லு கான் அடித்துக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, மாட்டிறைச்சி சாப்பிட்ட குற்றச்சாட்டின் பேரில், டில்லி-பல்லாப்காட் ரயிலில் வைத்து ஒரு கும்பலால் ஜுனைத் குத்திக்கொல்லப்பட்டார். 2019 ஏப்ரல் 11 அன்று, ஜார்க்கண்டில் இறந்த காளையின் இறைச்சியை எடுக்கும்போது ஒரு கும்பலால் பிரகாஷ் லக்ரா அடித்துக் கொல்லப்பட்டார்.
இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் இந்துத்துவா தீவிரவாதிகள் பசுவின் பெயரால் சிறுபான்மையினரை கொன்று வருகின்றனர். அனாஃப், ஆரிப், நசீம் (2015 ஆகஸ்ட் 2- உ.பி.), சாஹித் பட் (அக்டோபர் 9- ஜம்மு - காஷ்மீர்), நோமன் (அக்டோபர் 14- இமாச்சலப் பிரதேசம்), குஷ் நூர் (டிசம்பர் 9- அரியானா), மஸ்லூம் அன்சாரி, இம்தியாஸ் கான் (2016 மார்ச் 18- ஜார்க்கண்ட்), அபு ஹனிஃபா, ரியாசுதீன் அலி (2017 மே 1- அசாம்), நசிருல் ஹக், முஹம்மது சமீருதீன், எம்.டி. நசீர் (ஜூன் 22- மேற்கு வங்காளம்), அஸ்கர் அன்சாரி (ஜூன் 29- ஜார்க்கண்ட்), உமர் கான் (நவம்பர் 10- ராஜஸ்தான்), டுல்லு, சிராபுதீன் அன்சாரி, முர்தாசா அன்சாரி (2018 ஜூன் 13- ஜார்க்கண்ட்), சலீம் குரேஷி (ஜூன் 14- உ.பி.), காசிம் (ஜூன்- உ.பி.) , ரக்பர் கானே (ஜூலை 20- ராஜஸ்தான்), கைலாஸ் நாத் சுக்லா (ஆகஸ்ட் 30- உ.பி.), நயீம் அகமது ஷா (2019 மே 16- ஜம்மு-காஷ்மீர்), புத்தி குமார் (ஜூலை 2- திரிபுரா), கலந்தாஸ் பர்லா (செப்டம்பர் 3- ஜார்க்கண்ட்), பிரகாஷ் தாஸ், ரபியுல் இஸ்லாம் (நவம்பர் 21- மேற்கு வங்கம்), முஹம்மது ஷேரா (2021 ஜூன் 4- உ.பி.), ஷரத் மோரா (ஜூன் 12- அசாம்), பாபு பீலா (ஜூன் 14- ராஜஸ்தான்), அய்ஜாஸ் தார் (ஜூன் 23- ஜம்மு-காஷ்மீர்), நசீர் அகமது (2022 ஆகஸ்ட் 2- மத்தியப் பிரதேசம்), ஜுனைத், நசீர் (2023 பிப்ரவரி 17- அரியானா), நசீம் குரேஷி (மார்ச் 7- பீகார்), இட்ரிஸ் பாஷா (ஏப்ரல் 1, கருநாடகா) ஆகியோர் கொல்லப்பட்ட னர்.
இது நாடா - கடும் புலி வாழும் காடா?
கோமாதா குலமாதா என்று கதறுகிறார்களே,
ஏகாதசீன பசுவிதானம் - பதினொரு பசுக்களைக் கொன்று நடத்தும் யாகம்.
அஷ்டதச பசுவிதானம் என்பது 18 பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம். பசுவைக் கொன்று நடத்தப்பட்ட யாகங்கள் தானே இவை!
பார்ப்பனர்கள் பசு மாமிசத்தை சாப்பிட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வேதங்களில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கிறது.
"நான் ஒரு பிராமின் - மாட்டுக் கறியை விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்துக்கு வந்து பாருங்கள். பிறகு நடப்பது தெரியும்" என்று பிஜேபியைச் சேர்ந்த அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பிராஹ்மணர் மார்க்கண்டேய கட்ஜு சவால் விடுத்தாரே.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
"தர்மத்துக்காக செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்று பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக் கொள்ளவில்லையா? அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை. பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அசுவமேதத்துக்குக்கூட 100 குதிரைகள்தான் சொல்லியிருக்கிறது." (தெய்வத்தின் குரல்' இரண்டாம் பகுதி 'யக்ஞம்' என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.)
உண்மை இவ்வாறு இருக்க, கோமாதா எங்கள் குலமாதா என்பது, பசுவைக் கொல்லக் கூடாது, பசு மாமிசத்தை உண்ணக் கூடாது என்பது, பசுவதை என்ற பெயரால் மக்களைக் கொல்லுவதும் எத்தகைய வன்முறை மதவெறியாட்டம் - சிந்தியுங்கள்!
No comments:
Post a Comment