கருநாடகத் தேர்தலில் பி.ஜே.பி.யின் வித்தைகள் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

கருநாடகத் தேர்தலில் பி.ஜே.பி.யின் வித்தைகள் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படவில்லை

கருநாடகத் தேர்தல் முடிவு ஜனநாயகத்தைக் காப்பாற்றிட ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!

கருநாடக மாநிலத்தில் வரும் தேர்தல் முடிவு என்பது பாசிசத்திற்கு எதிராக, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகையில் அமையும் என்று எதிர்பார்க் கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (10.5.2023) கருநாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது.

சுமார் 5 கோடி வாக்காளர்கள்; இதில் முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் சுமார் 9 லட்சம் புதிய (இளைஞர் கள்) தலைமுறையினர் பங்களிப்பும் இருக்கும்.

'குதிரைப் பேரங்கள்'மூலம் 

ஆட்சிகளைப் பிடித்த பா.ஜ.க.

224 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர (ஒன்று விவசாய சங்க வேட்பாளருக்கு விட்டுக் கொடுத்து) காங்கிரஸ் மற்ற எல்லா தொகுதிகளிலும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

5 ஆண்டுகளுக்குமுன்பு கருநாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் கருநாடக மக்கள் பா.ஜ.க.வுக்கோ, அதன் கூட்டணிக்கோ மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க உத்தரவிடவில்லை. கட்சித் தாவல், சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்கு வாங்கி கட்சி மாற வைத்த குதிரை பேரங்கள்மூலமே பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர்.

(இது பல மாநிலங்களில் பா.ஜ.க.வினரின் ஆட்சி அமைக்கும் கைதேர்ந்த ‘‘வித்தைகளிலான'' ஜனநாயக சொத்தை அணுகுமுறையாகும்).

உள்துறை அமைச்சரின் 

நீதிமன்ற அவமதிப்புப் பேச்சு

எடியூரப்பாவை பா.ஜ.க. முதலமைச்சராக்கி, தேர் தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் அவரை மாற்றி, பொம்மை பசவராஜ் அவர்கள் (அவரும் கட்சி மாறியவர்தான்) முதலமைச்சராகி கருநாடக மாநிலத்தை ‘‘ஒரு ஹிந் துத்துவா அரசியல் பரிசோதனைக் கூடமாகவே'' அவர் ஆக்கி, சிறுபான்மையினர்களை எந்த அளவுக்கு வெளிப்படையாகவே ஒதுக்கி (ஒரு வேட்பாளர்கூட நிறுத்தப்படவே இல்லை), முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 சதவிகித இட ஒதுக்கீடு கூட தேர்தலுக்குமுன் ரத்து செய்யப்பட்டு, அதை மற்ற சில ஜாதியினருக்கு 2 சதவிகிதம் தலா என்று ஆணையிட்டு, அது உச்சநீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டு நீடிக்கிறது.

அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களின் பேச்சுகூட 'Sub Judice' என்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு நேற்று(9.5.2023)கூட பகிரங்கமாகவே கண்டித்திருக்கிறது.

இலவசங்களை எதிர்த்த பிரதமர் - இப்பொழுது இலவசங்களை 

அள்ளி விடுவது ஏன்?

6 நாள்கள் பிரச்சாரம்மூலம் பிரதமர் மோடி வேறு எங்குமில்லாது பல மணிநேர தெருப் பேரணிகளை நடத்தி வாக்கு சேகரித்தார்; அதுபோலவே உள்துறை அமைச்சரும், இதர முக்கிய பா.ஜ.க.வினரும் - இதுவரை அவர்கள் கண்டித்து வந்த தேர்தல் கால இலவசங்கள் காங்கிரஸ் அறிவிப்பு எதிர்ப்புக்கு விடை கொடுத்துவிட்டு, போட்டி போட்டு வீடுதோறும் இலவச பால், எரிவாயு சிலிண்டர் சலுகை போன்ற ஏராளமான பல இலவச அறிவிப்புகளை காங்கிரசுக்குப் போட்டியாக அறிவித்து வாக்கு சேகரிக்க முயன்றுள்ளனர்.

அது எந்த அளவுக்குப் பா.ஜ.க.வுக்குக் கைகொடுக்கும் என்பது 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரியும்!

கருநாடக ஒப்பந்தக்காரர்கள் அமைப்பு நேற்று (9.5.2023) வெளியிட்ட அறிக்கையில், ‘‘எல்லா அரசு ஒப்பந்தங்களுக்கும் 40 சதவிகித கமிஷன் கேட்கப்படு வதால், பல ஒப்பந்தக்காரர்கள் பணி செய்ய இயலாத நிலை மட்டுமல்ல; சில தற்காலைகளும் நடக்கின்றன'' என்று அந்த அறிக்கையில் பகிரங்கமாக வெளியிடுகின்ற பரிதாப நிலை!

விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்தவர்களை தன்னந் தனியே சென்று விரட்டி, கையும் களவுமாகப் பிடித் திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் என்ற செய்தியும் நேற்று (9.5.2023) ஊடகங்களில் வெளிவந்துள்ளது!

சிறுபான்மைச் சமூகத்தவர் பழக்கவழக்கங்களையும், கல்வி உரிமைகளையும் பறித்து, பகிரங்கமாகவே அவர்களை மிரட்டி ஒதுக்கும் வேலைகளில் பா.ஜ.க. ஆதரவு அணிகளில் சிலர் நடந்து கொள்ளுகின்றனர்!

லிங்காயத்துகளின் முடிவு - 

தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்!

தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில்கூட, பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடி, ‘அனுமன் சாலிசா' பஜனை பாடி வாக்குத் திரட்டும் சட்டம் மீறிய செயல்பாடுகளும் கண்டனத்திற்குரியதாக்கப்பட்டு உள்ளது!

லிங்காயத் சமூகத்தவர் ‘இதற்குமுன்' பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்தவர்கள்; தங்களது ஆதரவு காங்கிர சுக்குத்தான் இந்தத் தேர்தலில் என்று அறிவித்துள்ளதானது - தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பது உறுதி! இது பா.ஜ.க.வை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சாரம், மல்லிகார் ஜூனே கார்கே போன்ற, காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தைக் கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டும், பிரதமர் ‘இரட்டை என்ஜின்' பிரச்சாரத்தில் முக்கிய சாதனைகள், கொள்கைத் திட்டங்கள்பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுவதற்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சிமீதே கடும் தாக்குதல், சிறு பான்மையோர்குறித்து அண்மையில் வெளிவந்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்பற்றிய பிரச்சாரம்தான் பிரதமரின் பிரதான இடத்தைப் பெற்றது என்பதே பா.ஜ.க.வின் அரசியல் எப்படி போய்க் கொண்டுள்ளது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கிறது!

கருநாடகத் தேர்தல் முடிவு 

ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்!

கருநாடகத் தேர்தல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் என்பதே நாட்டில் அரசமைப்புச் சட்டத்தை நம்பும் மதச்சார்பற்ற சமூகநீதி ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.

பொறுத்துப் பார்ப்போம் - ஜனநாயகம் பிழைக்குமா? என்பதை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.5.2023


No comments:

Post a Comment