ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கினோம் - இன்று பாராட்டு விழா நடத்துகின்றோம்!

8ஈரோட்டின் தொடக்கம் கருநாடகம்வரை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!

81925 வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை நாடெங்கும் கொண்டாடுவோம்!

அதன் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் தீண்டாமை - ஜாதியை ஒழித்தே தீர உறுதியேற்போம்!

ஈரோடு, மே 15  இதே ஈரோட்டில் அண்ணா நினைவு நாளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தோம்; அதில் நானும் பங்கேற்றேன். வெற்றி பெற்ற நமது குடும்பத்துப் பிள்ளை ஈ.வெ.கி.ச. இளங்கோவனைப் பாராட்டுகிறோம்; ஈரோட்டில் கிடைத்த வெற்றி கருநாடகம்வரை எதிரொலித்துவிட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் இருக்கப் போகிறது; அடுத்து வைக்கம் நூற்றாண்டு விழா - எந்த நோக்கத்துக்காக வைக்கத்தில் தந்தை பெரியார் போராடினாரோ, அந்த நோக்கம் முழுவதும் நிறைவேறிடவில்லை; ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் வெற்றி பெற்றே தீருவோம், தீரவேண்டும் என்று முழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கடந்த 13.5.2023 அன்று மாலை ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு விளக்கத் தீர்மானக் கூட்டம் - ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில்...

அறிவாசான் தந்தை பெரியாரைத் தந்த மண்ணான இந்த ஈரோட்டு மண்ணிலே, பகுத்தறிவுப் பூமியிலே இன்றைக்குத் திராவிடர் கழகத்தினுடைய பொதுக்குழு சிறப்பாக நடைபெற்று, இங்கே நண்பர்கள் குறிப் பிட்டதைப்போல, வரலாற்றுத் திருப்பங்களை உரு வாக்கக் கூடிய பல முக்கியமான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அந்தத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டமாகவும், கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி தொடங்கிய எங்களுடைய பிரச்சாரம் - அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாளிலே தொடங் கினாலும், ஈரோடு கிழக்குத் தொகுதியினுடைய வேட் பாளராக அருமைச் சகோதரர் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று நாங்கள் என்றைக்கும் பெருமிதத்தோடும், தலைநிமிர்வோடும் சொல்லக்கூடியவர் பகுத்தறிவுவாதி அருமை திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வேட்பாளராக  நிறுத்தப்பட்டார் என்பது - மிகப்பெரிய அளவிற்கு ஏற்பட்ட இழப்பை ஓரளவிற்கு ஆறுதல் தரக்கூடிய செய்தியாக  அன்றைக்கு அமைந்தது.

அத்துணைப் பேருடைய உள்ளத்தையும் ஈர்த்தார்; தொண்டால் உயர்ந்தார் திருமகன் ஈவெரா

திருமகன் ஈவெரா அவர்கள், குறுகிய காலத்தில் இந்த ஈரோட்டு மக்களை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துணைப் பேருடைய உள்ளத்தையும் ஈர்த்தார்; தொண்டால் உயர்ந்தார்; அடக்கத்தோடு பணி புரிந்தவரை நாம் இழந்தோம் என்று வருந்துகின்ற நேரத்தில், அதற்கு ஒரு ஆறுதலாகத்தான் நம் முடைய அருமைச் சகோதரர் அவர்களை வற்புறுத்தி, முதலமைச்சர் அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கச் சொன்னார்கள்.

‘‘யார் பதவியை விரும்பவில்லையோ, அவர்தான் தகுதியானவர்!’’ 

அவர் கொஞ்சம்கூட அதை விரும்பவில்லை. ஆனாலும், சாக்ரட்டீசினுடைய சீடரான பிளாட்டோ அவர்கள் ஒருமுறை சொன்னதைப்போல, பதவிக்கு யார் சரியான தகுதியானவர்கள் என்று கேட்ட நேரத்தில், ‘‘யார் பதவியை விரும்பவில்லையோ, அவர்தான் தகுதியானவர்'' என்று சொன்னார்.

போட்டியிட அவர் விரும்பவில்லை. அவர்மீது திணிக்கப்பட்டது. என்றாலும், அந்தத் திணிப்பு இன் றைக்குத் தேவையானது என்றபொழுது, அன்றைக்குப் பிரச்சாரத்தைத் தொடங்கியபொழுது, மழை பெய்தது; அவரும் வந்தார்; அப்பொழுது நாங்கள் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்காக பிரச்சாரத்தை மேற்கொண்ட நேரத்தில், நல்ல வெற்றியைத் தந்தீர்கள்; கணிசமான வெற்றியைத் தந்தீர்கள். சவடால் பேசியவர்கள் காணாமல் போனார்கள். பெற்ற வெற்றிக்காக அவரைப் பாராட்டவேண்டும் என்று, சென்னையிலேயே ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தாய்க்கழகம் விரும்பியது.

ஏனென்றால், ‘‘தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்'' என்று கேட்டபொழுது, அதைவிட பெருமை என்ன இருக்க முடியும் ஒரு தாய்க்கு? என்ற அந்த மகிழ்ச்சியோடு, நாங்கள் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்த நேரத்தில், இன்றைய நம்முடைய பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தையும் நடத்தக்கூடிய வாய்ப்பு வந்தது.

இதிலே ஒரு இரட்டிப்பு மகிழ்ச்சி எங்களுக்கு என்னவென்றால் அவரைப் பாராட்டுவது, அவர் வெற்றி பெற்றது - ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய சாதனையை இந்தியாவே கூர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் 

பொதுத் தேர்தலுக்கு ஈரோடுதான் முதலில் வழிகாட்டியிருக்கிறது! 

2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஈரோடுதான் முதலில் வழிகாட்டியிருக்கிறது; இந்தியாவிற்கே அதுதான் முதலில் வழியைத் தொடங்கியிருக்கிறது. அதுதான் அகர முதல பாடியிருக்கிறது.

ஈரோட்டில் அன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு கருநாடகாவிலிருந்து, பெங்களூரி லிருந்து காங்கிரஸ் தோழர்கள் வந்திருந்தார்கள். நான் ஒவ்வொரு முறையும் யார் யார் என்னென்ன பிரச்சாரம் செய்கிறார்கள் என்று என்னுடைய பிரச்சாரத்தையும் சேர்த்து கவனித்துக் கொண்டு வரக்கூடியவன் - இந்தத் தொகுதியைப்பற்றி கவலைப்பட்டதினால்.

எல்லோருக்கும் ஈரோடுதானே உந்து சக்தி!

அப்பொழுது அவர்கள் சொன்னார்கள், நீங்கள் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரப் போகிறீர்களோ, அதே வெற்றியைப் பின்பற்றி, நாங்கள் கருநாடகத்தில் காங்கிரசுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவோம்; பா.ஜ.க.வை விரட்டுவோம் என்று சொன்னார்கள்.

காவிக்கு இடமில்லை, கருநாடகத்தில் மீண்டும் என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்று அன் றைக்கு அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்கே ஒரு உந்துசக்தியாக இருந்தது ஈரோடு. எல் லோருக்கும் ஈரோடுதானே உந்து சக்தி!

ஆகவேதான், அதேபோன்று இன்றைக்கு கருநாடகத்தில் காங்கிரசினுடைய வெற்றி அமைந் திருக்கிறது.

நாம்தான் முதன்முதலில் இவருக்குப் பாராட்டு விழா நடத்துகின்றோம்; அதனால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

 2024 ஆம் ஆண்டில் நடைபெறப் போகின்ற பொதுத் தேர்தலுக்கு மிகப்பெரிய திருப்புமுனை!

ஏனென்று சொன்னால், ஒரு மாநிலத்தினுடைய தேர்தல் வெற்றி என்று கருநாடகத் தேர்தல் வெற்றியை நீங்கள் பார்க்கக் கூடாது. அதுதான் 2024 ஆம் ஆண்டில் நடைபெறப் போகின்ற பொதுத் தேர்தலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது.

தென்மாநிலங்களில், தென்னாட்டில் இங்கே இடமில்லை காவிக்கு. இங்கே பாசிசத்திற்கு இடமில்லை. இங்கே ஜனநாயகத்திற்கு முரணாக இருக்கக்கூடியவர் களுக்கு இடமில்லை; சமூகநீதிக்கு எதிராகப் பேசுபவர் களுக்கு இடமில்லை; இன்னுங்கேட்டால், மக்கள் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு, சனாதனம் பேசிக்கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு இங்கே இடந் தரமாட்டோம்; அவர்கள் கடையைக் கட்டவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு - கருநாடகத் தேர்தல் முடிவு அதனைத் தெளிவாக நிரூபித்திருக்கிறது.

‘‘திராவிட பூமியில் பா.ஜ.க.விற்கு இடமில்லை’’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதனை ஒரு வரியிலே, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருநாடகத் தேர்தல் முடிவை வரவேற்று சொல்லியிருக்கும்பொழுது, ‘‘திராவிட பூமியில் பா.ஜ.க.விற்கு இடமில்லை'' என்று கூறியுள்ளது மிகவும் சரியானது!

ஆந்திராவில் கிடையாது; முட்டிப் பார்க்கிறார்கள், உள்ளே நுழைய முடியவில்லை அவர்களால். தெலங் கானாவிலும் முடியவில்லை; கேரளாவில் முடியாது என்கிற முடிவிற்கு வந்தார்கள். அதனால்தான் வேறு வழியில்லாமல், ராகுல் காந்தியைத் தடுத்துப் பார்க்கலாமா, குறுக்கு வழியில் என்று நினைத்தார்கள். குறுக்கு வழியில் போகிறவர்களுக்கு எல்லாம் என்ன நிலைமை ஏற்படும் என்றால், இயற்கையே தண்டனை கொடுக்கின்ற அளவிற்கு வரும் என்ற நிலையில், 68 மாவட்ட நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லி உச்சநீதிமன்றம் ஓங்கித் தலையில் குட்டக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்றால், அதன் பொருள் என்ன? என்றைக்காவது நியாயம் வெளிவந்துதான் தீரும்! உண்மைகளை ஒருபோதும் சாக்குமூட்டைக்குள் கட்டி வைக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக இன்றைக்குக் காட்டியிருக்கிறார்கள்.

இன்றைக்கு நடைபெறுகின்ற வெற்றி விழா என்பது இருக்கிறதே, அது அவரைப் பாராட்டுவதற்காக அல்ல - மக்களைப் பாராட்டுவதற்கு - உங்களைப் பாராட்டு வதற்கு.

நீங்கள் எப்படித் தெளிவான தீர்ப்பைக் கொடுத் தீர்களோ - அதேபோலத்தான் கருநாடக மக்களும் மிக அருமையான, தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக் கிறார்கள்.

சற்றுக்கூட தயக்கமில்லாமல் இங்கே எடுத்துச் சொன்னார்!

இந்த வெற்றிக்கு முதல் காரணம் யார் என்றால், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், திராவிட முன் னேற்றக் கழகத் தோழர்கள், காங்கிரஸ் கட்சித் தோழர்கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள் என்பதை மிகத் தெளிவாக, சற்றுக்கூட தயக்கமில்லாமல் இங்கே எடுத்துச் சொன்னார் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

ஈரோட்டில் எப்படி கணிசமான வெற்றி பெற்றார்கள்; மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமான அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள்.

சிலர் என்னிடம் கேட்டார்கள், ‘‘கருநாடகத்தில் தொங்கு சட்டசபை வருமா?'' என்று.

நாங்கள்தான் சொன்னோம், முன்பு அப்படி ஏற்பட்டு இருக்கலாம்; ஆனால், இப்பொழுது திராவிட மாடல் ஆட்சி எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கின்றது. திராவிட மாடல் வரலாறு என்னவென்று தெரியுமா? எப்பொழுதும் இங்கு தொங்கு சட்டசபை வந்தது கிடையாது; தங்கு சட்டசபைதான் வந்திருக்கிறது. ஆகவே, தங்கு தடையின்றி தங்கு சட்டசபைதான் வரும் என்று சொன்னோம்.

தமிழ்நாட்டு ஆளுநர் நேற்றுகூட என்ன சொல்லி யிருக்கின்றார் என்றால், ‘பாரதம் வெள்ளைக்காரர்களால் உருவானதல்ல; அது ரிஷிகளால் உருவானது'' என்று சொல்கிறார்.

அப்படியென்றால், இவர் என்ன செய்யவேண்டும்?

ராஜ்பவனில் இருக்கலாமா இவர்? பர்ண சாலை அமைத்துக்கொண்டு அங்கேதானே இருக்கவேண்டும்.

‘‘மரங்கள் சும்மா இருந்தாலும், காற்று விடுவதில்லை!’’

மாவோ சொன்னதுபோன்று, ‘‘மரங்கள் சும்மா இருந்தாலும், காற்று விடுவதில்லை'' என்பதுபோல, நாங்கள் சும்மா இருந்தாலும், ‘‘இல்லை, இல்லை; எங்களைப்பற்றி கட்டாயம் நீங்கள் பேசியாகவேண்டும்'' என்று சொன்னால், அதற்கு விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. ஆனால், எல்லாவற்றிற்கும் நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை; அதற்குரிய பதில்களை பெரியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

‘‘மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி!’’

அந்த வகையில் வரும்பொழுது, ‘‘மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி'' என்ற ஒரு சிறிய புத்தகத்தை ஈரோட்டில் இருக்கும்பொழுதுதான் தந்தை பெரியார் அவர்கள் தயாரித்தார். 18 ஆவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

அந்தப் புத்தகத்தில் அய்யா அவர்கள், ரிஷிகள்தான்  எல்லாவற்றையும் உண்டாக்கினார்கள்; வேத சாஸ்திரங் களை உண்டாக்கினார்கள் என்றெல்லாம் சொல்கிறார் களே, இந்த ரிஷிகளைப்பற்றி புராணத்தில் என்ன எழுதியிருக்கிறது? என்று அவர் கேட்டு, அதற்குரிய பதிலையும் சொன்னார்.

பெரியார் அவர்கள் எல்லாவற்றிலும் ‘‘நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு, மூலத்திற்கே போகக்கூடியவர்.'' அதுதான் ஒரு விஞ்ஞானியினுடைய அணுகுமுறை.

ரிஷிகளின் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்!

‘‘ரிஷிகளின் பிறப்புகள் எல்லாம், இயற்கைக்கு மாறானதும், ஆபாசமும், அசிங்கமும் நிறைந்தவையாக, அறிவிற்குப் பொருந்தாதனவாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, 

கலைக்கோட்டு ரிஷி - மானுக்கும்; கவுசிகர்- குயத்திக்கும்; ஜம்பகர் - நரிக்கும்; வால்மீகி - வேடனுக்கும்; அகஸ்தியர் - குடத்திற்கும்; வியாசர் - செம்படத்திற்கும்; வசிஷ்டர் - ஊர்வசிக்கும்; காதனசல்லியர் - விதவைக்கும்; மாண்டவியர் - தவளைக்கும்; காங்கேயர் - கழுதைக்கும்; சவுனகர் - நாய்க்கும்; கணாதர் - கோட்டானுக்கும்; கர் - கிளிக்கும்; ஜாம்புவந்தர் - கரடிக்கும்; அஸ்வத்தாமன் - குதிரைக்கும் பிறந்தனராம். 

இந்த முனிவர்களின் பிறப்பு யோக்கியதை இதுதான். காட்டுமிராண்டி காலத்து மக்கள் அறிவுகூட இதைவிடப் பண்பட்டதாக இருக்கும்; அதிலும் கீழாக, இந்த முனிவர்கள் ரிஷிபுங்கவர்கள் மூலமாக நம் இழிவுக்கும், மடைமைக்கும் ஆளாகவேண்டுமா?''

பெரியார்தான் கேட்டார், ‘‘ஏண்டா ஒருத்தன்கூட மனுஷனுக்குப் பிறந்தவர்கள் கிடையாதா, கதைப்படி?'' என்று.

இந்தக் கதையை நாம் நம்பலாமா? என்று கேட்டார்.

யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல நண்பர்களே, மக்களைப் பண்படுத்துவதற்கு, பகுத்தறிவுப்படி சிந்திக்க வைப்பதற்காக.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கம் தென்னாட்டில் மிகப்பெரிய அளவிற்கு...

ஒரு மாபெரும் ஆட்சி இன்றைக்குத் தரப்பட்டு இருக்கிறது; ஒரு ‘திராவிட மாடல்' ஆட்சி இங்கே நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஓர் ஆட்சி, இரண்டாண்டு காலம் வரலாற்றை பதிய வைத்திருக்கிறார்கள். ஆயிரம் எதிர்நீச்சல் அடித்துக்கொண்டு, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக நடைபெற்று வருகிறது. அதனுடைய தாக்கம் தென்னாட்டில் வருகிறது; இப்பொழுது அதனுடைய அதிவேகமான தாக்கம் கருநாடகத்தில் மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறது என்று சொல்லக்கூடிய அந்தச் சூழ்நிலையில்தான், இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானமாக வடித்திருக்கின்றோம்!

வைக்கம் சத்தியாகிரகத்தைப்பற்றி ஒரு தீர்மானம் - வைக்கம் நூற்றாண்டு விழா வருகிறது. ஏற்கெனவே அதனை சிறப்பாக நம்முடைய கேரள முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய முதலமைச்சர் அவர்களும் இணைந்து வைக்கத்தில் தொடங்கி வைத்தனர்.

வைக்கம் நூற்றாண்டு விழாவினை இரண்டு அரசுகளும் இணைந்து கொண்டாடவேண்டும் என்று முடிவெடுத்தனர். 

அதைத் தீர்மானமாக இன்று நாங்கள் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வடித்திருக்கின்றோம்.

தீண்டாமையை அகற்றுவது என்பதில் 

நாம் முழு வெற்றி பெற்று இருக்கின்றோமா?

வைக்கம் போராட்டத்தினுடைய நூற்றாண்டு விழா என்பது வெறும் பெருமைகளைச் சொல்வதற்காக அல்ல நண்பர்களே! வைக்கம் போராட்டம் எதற்காகத் தொடங் கப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையடைந்துவிட்டதா? ஜாதி ஒழிப்பு என்பதில் நாம் நிறைவு பெற்றுவிட்டோமா? தீண்டாமையை அகற்றுவது என்பதில் நாம் முழு வெற்றி பெற்று இருக்கின்றோமா?

‘‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதுதான் என்னுடைய வேலை'' என்று கலைஞர் அவர்கள் சொல்லி, அந்தப் பணியை அவர்கள் செய்வதற்கு முன்பு, இயற்கை அவரைப் பறித்துக்கொண்டு, ஆட்சி இல்லாத ஒரு சூழ்நிலை இல்லாத காலத்தில், அதனை நிறை வேற்றியே தீருவேன் என்று  இன்றைய முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே தெளிவான வழிகாட்டி னார். அதற்கும் இப்பொழுது முட்டுக்கட்டை போடு கிறார்கள். இப்போதும் ஆகமம் என்று சொல்கிறார்கள்; மரபு என்று சொல்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தினுடைய  அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு

நேற்றுகூட உச்சநீதிமன்றத்தினுடைய அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு - ஒரு வழக்கில் மிக அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த இயக்கக் கொள்கைக்காரர்கள் அல்ல; நியாயப்படி, பகுத்தறிவுப்படி கேட்டிருக்கிறார்கள். 

மரபு, மரபு என்று சொல்கிறீர்களே, அந்த மரபை விட்டதுதானே இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படைக் கடமைகள், அடிப்படை உரிமைகள் - அந்த மரபிற்கு இடமில்லையே! இப்பொழுது அதை விட்டுவிட்டுத்தானே எல்லா சட்டங்களும் வருகின்றன. அதை எப்படி உங்களால் மரபு, மரபு என்று சொல்ல முடியும் என்று கேட்டனர்.

இதே வாதம் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினைக்குப் பொருந்தாதா? அதே ஆகமம் மரபு என்று சொல்லுவதற்கு இந்த காலத்திற்குப் பொருந்துமா? என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.

வைக்கம் போராட்டம் எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லவேண்டும்.

ஈ.வெ.கி.ச. அவர்களின் குடும்பத்தினுடைய பங்கு வைக்கம் போராட்டத்தில் மிக முக்கியமானது

காரணம் என்னவென்றால், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் மட்டுமா ஈடுபட்டார்கள். இன்றைக்கு எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று இவரைப் பாராட்டு கிறோம்; இவருடைய தந்தையைப் பாராட்டுகிறோம்; இவருடைய தாத்தாவைப் பாராட்டுகிறோம்; பெரிய தாத்தாவைப் பாராட்டுகிறோம்; அதேபோன்று, கண்ணம்மாள் அம்மையாரைப் பாராட்டுகிறோம். இந்தக் குடும்பத்தினுடைய பங்கு வைக்கம் போராட்டத் தில் மிக முக்கியமானது.

அன்னை நாகம்மையார் அவர்களைப்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்; வைக்கம் போராட்ட வரலாற் றைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். திராவிட இயக்கத்தை அசைத்துவிடலாம் என்று சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். திராவிடம் என்றால், ஒவ்வாதது என்று சிலர் நினைக்கிறார்கள்.

இந்தத் திராவிட இயக்கத்தினுடைய ஆணிவேர் எங்கே இருக்கிறது? எப்படிப்பட்டவர்களிடம் இருக் கிறது? இது வெறும் அரசியலில் வாக்குப் போட்டு, வாக்குகளால் உருவாக்கப்பட்டது அல்ல நண்பர்களே!

வாக்கு ஒரு காரணம்; வாக்கு ஒரு அரசியல் அமைப் பில் இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு அவ்வளவுதான்! அதற்கும் முன்பு, அடித்தளத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளம் - ஓர் உதாரணத்தை உங் களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.

உங்களின் வரவேற்பைப் பெறுவதற்காக வரவில்லை!

தந்தை பெரியார் அவர்கள் வைக்கத்திற்குப் போகிறார். ராஜா அவர்கள் வரவேற்பு கொடுக்கிறேன் என்று சொன்னபொழுது, ‘‘உங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்காக வந்திருக்கிறேன்; உங்களின் வரவேற்பைப் பெறுவதற்காக வரவில்லை'' என்று சொன்னார் என்றால், தந்தை பெரியாருடைய கொள்கை உணர்வை, போராட்டக் குணத்தை, அந்தப் பண்பை நினைத்துப் பாருங்கள்; அந்த அறிவு நாணயத்தை எப்படிப் பாராட்டவேண்டும் நாம்!

போராட்டம் நடத்தியதற்காக முதன்முறையாக அவருக்கு சாதாரண தண்டனை கொடுக்கிறார்.

போராட்டத்திற்கு வெற்றி கிட்டும்வரை போராடுவேன் என்றார் தந்தை பெரியார்!

தண்டனை முடிந்து வெளியே வந்து, போராட் டத்தில் ஈடுபட்டார் தந்தை பெரியார். எப்பொழுது தெருக்கள் அங்கே திறந்து விடப்படுகின்றனவோ, இந்தப் போராட்டத்திற்கு வெற்றி கிட்டும்வரை போராடுவேன் என்று சொல்லி, தொடர்ந்து போராடுகிறார்.

பெரியார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் அழியவேண்டும் என்று சொல்லி, ‘‘சத்ரு சங்கார யாகம்'' நடத்துகிறார்கள்; ஆனால், நடந்தது என்ன? ராஜாதான் மரணமடைந்தார். பெரியார் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, ஈரோட் டிற்கு வருகிறார்.

‘நவசக்தி’ நாளிதழில்....

நாமெல்லாம் பிறக்காத காலத்தில், ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் சென்று, வரலாற்றை நாம் பார்க்கும்பொழுது, அப்பொழுது காங்கிரஸ் பத்திரிகை யாக இருக்கக்கூடிய ‘நவசக்தி' நாளிதழில், 12.10.1924 இல் வெளிவந்த செய்தியை இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக என்னருமை சகோதரிகள், நம் வீட்டில் இருக்கக்கூடிய தாய்மார்கள், பெண்கள், சகோதரிகள் அத்துணைப் பேரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

சிறந்த பகுத்தறிவுவாதி- கொள்கையை மாற்றிக்கொள்ளாதவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஈ.வெ.கி.சி.இளங்கோவன் அவர் களின் குடும்பம் அல்ல. கொள்கைக் குடும்பமாக - எப்படி வழிவழியாக கொள்கைக் குடும்பமாக - தீவிரமான திராவிடக் கொள்கை உணர்வாளராக - தேசிய கட்சியில் அவர் இருந்தாலும்கூட, சிறந்த பகுத்தறிவுவாதியாக, கொள்கையை மாற்றிக்கொள் ளாதவராக - அரசியலினுடைய பார்வையாக இருக்கலாம் - ஆனால், அதேநேரத்தில், அதனு டைய அடிப்படை உணர்வு என்பது இருக்கிறதே, அது பகுத்தறிவு உணர்வு என்று பாரம்பரியமாகச் சொல்வதற்கு என்ன காரணம் என்றால் நண் பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

பழைய வழக்கைத் தூசி தட்டி எடுத்து - தந்தை பெரியாரை கைது செய்தனர்!

வைக்கம் போராட்டத்திற்காக இரண்டு முறை தண்டனை பெற்று, மீண்டும் ஈரோட்டிற்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. ஈரோட்டில் தந்தை பெரியாரைக் கைது செய்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன வென்றால், சர்.சி.பி.இராமசாமி அய்யர், இங்கே சட்ட மெம்பராக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தெளிவாகச் சொன்னார், ‘‘இவர் மீண்டும் வைக்கத்திற்குச் சென்றால், பெரிய கிளர்ச்சியை செய்வார்; அதற்குமுன்பு அவர்மீது ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, இவரை சிறையில் அடைக்கவேண்டும்'' என்று சொல்லி, பழைய வழக்கைத் தூசி தட்டி எடுக்கிறார்கள்.

சென்னை மந்தைவெளியில் பிரிட்டிஷாரை எதிர்த்து அவர் பேசியதற்காக -  124-ஏ - ராஜ துவேஷக் குற்றம் என்று சொல்லி, பெரியாரைக் கைது செய்தார்கள்.

பெரியாரைக் கைது செய்தவுடன், இவரை பிரிந்திருந்த அன்னை நாகம்மையார் அவர்களுடைய உணர்வைப் பாருங்கள்; பெரியாருக்கு இருந்த நெஞ்சுரம் முக்கியமல்ல நண்பர்களே; அது இயல்பானது. ஆனால், அவருடைய வாழ்விணையர் அன்னை நாகம்மையார் அவர்கள், இப்படிப்பட்ட வரலாற்றை, மயிர்க்கூச் செறியக்கூடிய ஒரு சம்பவத்தை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் பெண்கள்  பொது இடத்திற்கு வருவார்களா?

ஓர் அறிக்கை வெளியிடுகிறார் - அந்த அறிக்கை 1924 ஆம் ஆண்டு - நினைத்துப் பாருங்கள், ஏறத்தாழ நூறு ஆண்டை நெருங்கப் போகிறோம்; அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பொது இடத்திற்கு வரு வார்களா? பொதுப் போராட்டக் களத்திற்கு வரு வார்களா? அப்படியே வந்தாலும், இவ்வளவு துணிச் சலும், தெளிவும் உள்ளவராக இருப்பார்களா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

அன்னை நாகம்மையார் அவர்களின் அறிக்கை இருக்கிறதே, அதை இந்த நேரத்தில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவேண்டும்; அதைப் பரப்பவேண்டும்; அந்தக் கொள்கைகள் முழுமையாக நிறைவடையவேண்டும் என்றும், பூரணத்துவம் பெறவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், அன்னை நாகம்மையார் அவர்களின் அறிக்கையை தெரிந்துகொள்ளவேண்டும்.

நாகம்மையார் அவர்களின் அறிக்கை

‘‘என் கணவர் ஈ.வி.இராமசாமி நாயக்கர் இம்மாதம் முதல் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனார். 1924, செப்டம்பர் 11  ஆம் தேதி,  காலை 10 மணிக்கு மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனையாகக் கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்!

அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெறவேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளரவேண்டும் என்றும் கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.

அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போனதாக நினைத்துக் கொண்டு போகிற, வைக்கம் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து, அதைச் சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி, அனுகூலமான முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் உள்ள தலைவர்களையும், தொண்டர் களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள் கிறேன்.’’

‘நவசக்தி’, 12, செப்டம்பர் 1924

இப்படிப்பட்ட ஒரு வரலாற்றை வைக்கம் போராட்டம் உள்ளடக்கியிருக்கிறது.

சொன்னார்களே இங்கே நண்பர்கள், நாய் போகிறது, கழுதை போகிறது, பன்றி போகிறது; ஆனால், உழைப் பாளியாக இருக்கக்கூடிய தோழன், ஒரே காரணம் அவன் கீழ்ஜாதியில் பிறந்தான் என்பதற்காக, அவனைப் புலையர் என்றார்கள், ஈழவன் என்றார்கள், பறையன் என்றார்கள்; இன்னும் என்னென்னமோ சொன்னார்கள்!

வைக்கம் போராட்டம் என்பது மனித உரிமைப் போராட்டத்தினுடைய முன்னோட்டம்!

அதுதானே உன்னுடைய வருணாசிரம தர்மம்; அதுதானே உன்னுடைய சனாதன தர்மம்; அதுதானே உன்னுடைய ஹிந்துத்துவா - அந்த ஹிந்துத்துவா வினுடைய கருத்துப்படி, அந்தத் தெருக்களுக்குச் சென்றால், அவர்களுக்குத் தண்டனை- அதனால்தான், அந்தத் தடையை நீக்கவேண்டும் என்று போராடிய பெரியாருக்குத் தண்டனை; ஓராண்டு முழுக்க அந்தப் போராட்டம் நடந்தது என்று சொன்னால் நண்பர்களே, அது ஏதோ ஒரு தெருவில் நடக்கவேண்டும் என்பதற்காக நடைபெற்ற போராட்டம் அல்ல நண்பர்களே; மனித உரிமைப் போராட்டத்தினுடைய முன்னோட்டம்; அதற்கான தெளிவோட்டம் - இந்தியா முழுமையும் அந்த மனித உரிமையினுடைய போராட்டத்தினுடைய தாக்கத்தினால்தான், இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மகத் குளப் போராட்டமாகும்.

(தொடரும்)


No comments:

Post a Comment