ஈரோட்டில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு, மே 14 தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச் சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தான் குழந்தைத் திருமணம் செய்துகொண்டவன் என்று பேசியிருக்கிறாரே ஆளுநர் ரவி, அப்படியானால் சட்டப்படி குற்றவாளியான ஒருவர், ஆளுநராக இருக்கலாமா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நேற்று (13.5.2023) ஈரோட்டிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஈரோட்டில் - அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த இந்த மண்ணில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக இங்கே நடைபெற்று இருந்தாலும், கழகப் பொதுக்குழு என்பது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக இன்றைக்கு நடந்திருக்கிறது.
பல முக்கிய தீர்மானங்களை
நிறைவேற்றி இருக்கின்றோம்
கழகப்பொதுக்குழுஉறுப்பினர்கள்,மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம்,மகளிரணித்தோழர்கள் எல்லோரும், கழகத்தி னுடைய முக்கிய செயல் பொறுப்பில் இருக்கக் கூடிய வர்கள் 600-லிருந்து 700 பேர் இங்கே கூடியிருக்கின் றோம். இப்பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றோம்.
அதில் மிக முக்கிய தீர்மானங்களில் ஒன்று - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெறவிருக்கின்றது. கேரள மாநிலத்தில் முதலில் அதைத் தொடங்கியிருக்கிறார்கள்; நம்முடைய முதலமைச்சர் அவர்களும் அங்கே அழைக்கப்பட்டு, அவ்விழாவில் பங்கேற்றார்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை கேரள அரசும், தமிழ்நாடு அரசும் ஒன்றாக இணைந்து சிறப்பாகக் கொண்டாடவிருப்பது பெருமிதத்திற்குரியது.
2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் வரலாற்றில் ஒரு நூற்றாண்டை அடையாளப்படுத்தக் கூடியவை
வருகின்ற இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று நூற்றாண்டு விழாக்கள் நடைபெறவிருக்கின்றன. 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் வரலாற்றில் ஒரு நூற்றாண்டை அடையாளப்படுத்தக் கூடியனவாகும்.
சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது 1925 ஆம் ஆண்டு; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப் பட்டதும் அதே ஆண்டுதான். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதும் அதே ஆண்டுதான்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - சேரன்மாதேவி குரு குலப் போராட்டமும், ஜாதி ஒழிப்பில், அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடவேண்டும் - உடன் உண்ணல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடைபெற்ற போராட்டங்கள்.
இவையெல்லாம் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பில் மிக முக்கியமான அம்சங்களாகும்.
திராவிடர் கழக இளைஞரணி தோழர்களைத் தீவிரப்படுத்தி, ஆயத்தப்படுத்தி இருக்கின்றோம்
அதேபோன்று, திராவிட நாகரிகம், மூத்த நாகரிகம் என்பதற்கு அடையளமாகத்தான், திராவிடம் என்பது ஒரு கற்பனையல்ல; திராவிடம் என்பது ஏதோ இட்டுக்கட்டி சொல்லப்பட்டதல்ல; காலத்தை வென்ற ஒரு நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என்பதை 1925 ஆம் ஆண்டு கண்டறிந்தார் சர்ஜான் மார்ஷல். ஆக இப்படி பல வகையில், சிறப்பாக இருக்கக்கூடிய அந்த நூற்றாண்டை - ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம், சமூகநீதி நூற்றாண்டாகக் கொண்டாடவேண்டும் - விழாவை தமிழ்நாடு முழுக்க நடத்துவதற்குத் திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ளவர்களையும் இணைத்து மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்யும். அதேபோல, ஜாதி உணர்வுகள் என்பது தலைதூக்கி ஆடுவது; இன்னமும் தீண்டாமைக் கொடுமைகளை ரகசியமாகவும், மறைமுகமாகவும் செய்து, அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக்கூட ஒத்துழைப்புத் தராமல் இருக்கக்கூடிய சூழல்; ஆணவக் கொலைகள் இவையெல்லாவற்றையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய இதை ஒரு வாய்ப்பாகக் கொள்ளவேண்டும் என்பதைத்தான் இன்று நடை பெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து, திராவிடர் கழக இளைஞரணி தோழர்களைத் தீவிரப்படுத்தி, ஆயத்தப்படுத்தி இருக்கின்றோம்.
யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கின்ற இயக்கம்
ஆகவேதான் எங்களுடைய திராவிடர் கழகத் தோழர்கள் இதனைச் சிறப்பாக செய்வார்கள், செய்து முடிப்பார்கள். உங்களுக்கெல்லாம் தெரியும், திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கின்ற இயக்கம் இல்லை என்றாலும்கூட, யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கின்ற இயக்கம்.
தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னாட்டிலும் காவிகளுக்கு இடமில்லை
யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற காரணத்தினால்தான், தமிழ்நாடு மட்டுமல்ல, தென் னாடும் சேர்ந்து, இங்கே காவிகளுக்கு இடமில்லை; இங்கு மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சுயமரியாதை இவற்றிற்குத்தான் இடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நிலைமை வந்துகொண்டிருக்கின்றது. இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கின்ற கருநாடகத் தேர்தல் முடிவு உள்பட அதனையே மிகத் தெளிவாகக் காட்டக்கூடிய சூழ்நிலையில்தான் இன்றைக்குத் திராவிடர் கழகப் பொதுக்குழு பொருத்தமாக நடந்திருக்கிறது.
எனவே, இதைப் பிரச்சாரம் செய்கின்ற இயக்கமாக திராவிடர் கழகம் இருக்கும். தேவைப்படும்பொழுது போராட்டக் களத்திலும் நாங்கள் இறங்குவோம்.
நூற்றாண்டு விழாக்கள் வெறும் வெளிச்சம் போடக்கூடிய விழாக்களாகவோ அல்லது பேச்சுக் கச்சேரியாகவோ இல்லாமல், செயல் வடிவங் கொண்டு, ஆணவக் கொலைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
கருநாடகத் தேர்தல் முடிவுகள் வரக்கூடிய சூழலில், உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றோம்.
அரசியலில் மிக முக்கியமான திருப்பம்
எங்களுக்கு 'நல்ல நேரம், கெட்ட நேரம்' என்றெல்லாம் கிடையாது. ஆனால், அரசியலில் மிக முக்கியமான திருப்பம் ஏற்படும்பொழுது, வரலாற்றுக்கு நல்ல நேரம்; எது கெட்ட நேரம் என்றால், ''பாம்பு விழுங்குது, பாம்பு விழுங்குது'' என்று கிரகணம்பற்றி சொன்னார்களே, அதெல்லாம் இப்பொழுது விலகக் கூடிய அளவிற்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல - தென் னாட்டில் அவர்கள் திறந்த கதவு மூடப்பட்டு விட்டது.
கருநாடக வாக்காளப் பெருமக்களைப் பாராட்ட வேண்டும். பெரியார் சொல்வார், ''தோசையைத் திருப்பிப் போட்ட மாதிரி'' என்று.
ஆகவே, குதிரை பேரம், அந்தப் பேரம், இந்தப் பேரம் என்று பேரங்கள் நடக்காத அளவிற்கு, முடிவுகள் அடிப்படையில் காங்கிரசு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவிருக்கிறது.
ஆகவே, இனிமேல் தலைகீழாக மாறக்கூடிய வாய்ப்புகள் கிடையாது.
தேர்தலில் தாங்கள் தோற்றாலும்
ஆட்சி அமைப்பார்களாம்!
செய்தியாளர்: கருநாடகத் தேர்தலில், கடந்த முறை பி.ஜே.பி.தான் ஆட்சிக்கு வந்தது. இப்பொழுது இந்த மாற்றத்திற்கான தாக்கம் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தமிழர் தலைவர்: மன்னிக்கவேண்டும்; கடந்த முறை பி.ஜே.பி. ஆட்சிக்கு வரவில்லை. பி.ஜே.பி.,க்கு எதிராகத்தான் கருநாடக வாக்காளப் பெருமக்கள் வாக்களித்தனர்.
உங்களைப் போன்ற பத்திரிகைகள், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிட்டது, பி.ஜே.பி., ஆட்சிக்கு வந்து விட்டது என்று செய்யும் பிரச்சாரத்தினாலேயே அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பி.ஜே.பி. வர வில்லை; பி.ஜே.பி.,க்கு எதிராகத்தான் கருநாடக மக்கள் வாக்களித்தனர்.
அவர்கள் ஒரே ஒரு தியரியை வைத்திருக்கிறார்கள். இப்பொழுதுகூட பார்த்தீர்களேயானால், ஜனநாயகத்தில் எல்லோரும் வெட்கப்படக்கூடிய அளவிற்கு, இரண்டு நாள்களுக்கு முன்பு பி.ஜே.பி.,க்காரர்கள் ஒரு அறிக் கையைக் கொடுத்திருக்கிறார்கள்.
அது என்னவென்றால், தேர்தலில் நாங்கள் தோற் றாலும் ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்கள்.
அப்படியென்றால், எதற்கு ஜனநாயகத் தேர்தல்? இவ்வளவு பேரை வைத்து தேர்தலை நடத்தவேண்டிய அவசியமில்லையே! நாங்கள்தான் நிரந்தரமாக மாநிலத்தை ஆளுவோம் என்று சொல்லிவிட்டுப் போகலாமே!
ஆகவே, வேறு கட்சியில் இருப்பவர்களை, அந்தக் கட்சிக்குத் தாவ வைத்துதான் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தனர்.
எப்படி மகாராட்டிரத்தில் சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கினார்களோ - ஏற்கெனவே இருந்த ஆட்சியாளர்கள் பதவி விலகினார்கள் - ஆகவே, நாங்கள் இதில் எதுவும் செய்ய முடியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள்.
அதேபோன்ற சூழ்நிலைதான் கருநாடகத்திலும் நடைபெற்றது. பி.ஜே.பி.,க்கு ஆதரவாக வாக்களித்து, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. ''யார் வெற்றி பெற்றாலும், நாங்கள் ஆட்சி அமைத்துவிடுவோம் - ஏனென்றால், எங்களிடம் பண பலம், அதிகார பலம் இருக்கிறது'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு பி.ஜே.பி. இருக்கிறது.
ஆனால், மக்கள் அதற்கு இடமே கொடுக்காமல், தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிட்டார்கள்.
மூன்று உண்மைகள் - 2024 ஆம் ஆண்டு நடை பெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குத் தெளிவாகி இருக்கின்றன.
அந்த நாளும் கண்டிப்பாக வரும்;
அதற்கு தமிழ்நாடு வழிகாட்டும்!
செய்தியாளர்: தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்களே?
தமிழர் தலைவர்: எப்பொழுது நமக்கு முழு அதி காரம் கிடைக்கிறதோ, அப்பொழுது அதை தாராளமாகச் செய்யலாம். ஆனால், இப்பொழுது அந்த அதிகாரத்தை ஒன்றிய அரசு வைத்துக் கொண்டிருக்கின்றது.
நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டு, அதன்படி நமக்குள்ள அதிகாரத்தின்படி, சட்டப்பேரவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி, அம்மசோதா இப்பொழுது குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் இருக்கிறது.
ஒன்றிய அரசு வேண்டுமென்றே குறுக்குச்சால் ஓட்டுகிறது.
மாற்றப்பட முடியாதது என்று எதுவுமே கிடை யாது. சனாதனம் மாறாதது என்று சொல்லிக் கொண்டி ருந்தாலும், இப்பொழுது அந்த சனாதனமே மாறித்தான், இன்றைக்கு நிறைய பேர் வித்தியாசமாக இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்குமுன்பு மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதில் ஒரு வரியைக்கூட நாங்கள் மாற்றமாட்டோம்; அதிலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று சொன்னார்கள்.
ஆனால், நடந்தது என்ன?
மோடி அவர்கள் மன்னிப்புக் கேட்டார் அல்லவா, விவசாயிகளிடம்.
ஆகவே, அந்த நாளும் கண்டிப்பாக வரும். அதற்கு தமிழ்நாடு வழிகாட்டும்.
இன்றைக்கு மிகத் தெளிவான ஒரு செய்தி, பத்திரி கைகளில் வந்திருக்கிறது. பீகாரில், நான்கு நாளில், நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
என்றைக்கு இருந்தாலும், நீட் இல்லாத தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களும், மாணவர்களும் சந்திப்பது உறுதி!
'நீட்' தேர்வு எதிர்ப்பு என்பது தென்னாட்டில் மட்டுமல்ல, வடநாட்டிலும் வந்துவிட்டது.
தி.மு.க. ஆட்சியில், நீட் எதிர்ப்பு மசோதா நிறை வேற்றப்பட்டு இருக்கிறது; தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். அதற்குரிய முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார்கள்.
அதுபோன்று, தி.மு.க. முயற்சிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றது.
நுழைவுத் தேர்வை, முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டு வந்தபொழுது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கலைஞர் ஆட்சி வந்து, அந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் என்பதுதான் தமிழ்நாட்டினுடைய வரலாறாகும்.
தொடக்க முதல் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் பிரச்சாரத்தையும், போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தி வந்தது.
அதுபோல, இரண்டாண்டு அல்ல நான்கு ஆண்டு கள் ஆகலாம். என்றைக்கு இருந்தாலும், நீட் இல்லாத தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களும், மாணவர்களும் சந்திப்பது உறுதி.
அண்ணாமலை சென்ற இடமெல்லாம் 'அரோகரா'தான்!
செய்தியாளர்: அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின்மீது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அவருக்கு அந்த வேலையைத் தவிர, வேறு வேலையே கிடையாது.
அண்ணாமலை சொல்லுக்கு எவ்வளவு மரியாதை என்பதற்குக் கருநாடக தேர்தல் ஒன்றே போதும்.
ஏனென்றால், கருநாடக மாநிலத்தில் வெற்றி வாய்ப் பைப் பெறுவதற்கு பா.ஜ.க. அண்ணாமலையை அனுப்பியது. அண்ணாமலை 'அரோகரா' பாடிவிட்டு வந்துவிட்டார்.
அதேபோன்று, அண்ணாமலை சென்ற இட மெல்லாம் 'அரோகரோ'தான்.
ஆகவே, அவர், தான் இருக்கின்றேன் என்று காட்டுவதற்காக ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண் டிருக்கின்றார். ஊடக நண்பர்களுடைய ஒத்துழைப்பு, வெளிச்சம் இருக்கிறது. அதனால் அவர் எது சொன் னாலும், அதை வெளியிடக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
எத்தனையோ அண்ணாமலைகளைப் பார்த்த இயக்கம் திராவிட இயக்கம்!
ஆகவே, எத்தனையோ அண்ணாமலைகளைப் பார்த்த இயக்கம் திராவிட இயக்கம்.
ஆகவேதான், ''அண்ணா'', ''மலை'' போன்று நின்று கொண்டிருக்கின்றார்; 'அண்ணாமலை'கள் ஒன்றும் செய்ய முடியாது.
உச்சநீதிமன்றம் குட்டு வைத்த பிறகு - சூடு, சொரணை இருப்பவர்கள் பதவியில் இருக்கமாட்டார்கள்!
செய்தியாளர்: டில்லி ஆளுநருடைய அதிகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே, உங்களுடைய கருத்து என்ன?
தமிழர் தலைவர்: சூடு, சொரணை என்று இருந்தால், யாராக இருந்தாலும், உச்சநீதிமன்றம் கொடுத்த குட்டுக்குப் பிறகு பதவியில் இருக்க மாட்டார்கள்.
தன்மானத்தைப்பற்றி கவலைப்படாமல், வரு மானத்தை, சனாதனத்தைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆளுநர் எவ்வளவு பெரிய மனிதர்; சட்டத்தை மதிக்கின்றவர் என்பதற்கு அடையாளம் - அவருடைய ஓர் அறிக்கையே போதும்; ''நானே குழந்தைத் திரு மணம் செய்துகொண்டேன்'' என்கிறார்.
இவர் திருமணம் செய்துகொண்ட காலகட்டத்தில், குழந்தைத் திருமணச் சட்டம் இருந்ததுண்டே! அவர் அந்தச் சட்டத்தை மீறியிருக்கின்றார் என்றால், வாழ்க் கையைத் தொடங்கும்பொழுதே சட்டத்தை மீறியிருக் கிறார் - அப்போதே சட்டத்திற்கு ஒத்து ழைக்க வில்லை என்றால், அந்தப் புத்தியை இன்றுவரையில் அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதைத் தமிழ்நாட்டில் காட்டுகிறார்; அதனுடைய விளைவுகளை, பலாபல ன்களை அனுபவிப்பார்கள்.
மக்கள் அதற்குத் தெளிவான பதிலைச் சொல் வார்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் பதவியில் தொடர்ந்து இருக்கிறார்கள்
செய்தியாளர்: எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங் களில், ஒன்றிய அரசு ஆளுநர்களை விட்டு அதிகார துஷ்பிரயோகங்களை செய்கிறதே, அதுகுறித்து தங் களுடைய பார்வை என்ன?
தமிழர் தலைவர்: ஆளுநர்கள் என்பவர்கள் பம்பரம்; அவர்களைச் சுழற்றுவது டில்லி; கயிறை இழுப்பவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள்.
டில்லியே இப்பொழுது யோசிக்கக்கூடிய கட்டத் திற்கு வந்தாகிவிட்டது, இரண்டு வகையில்.
ஒன்று மக்கள்; இன்னொன்று உச்சநீதிமன்றம் கொடுக்கின்ற குட்டுகள் சாதாரணமானவையல்ல.
டில்லியில் நியமிக்கப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரி பிரச்சினை; மகாராட்டிரத்தில் சிவசேனா பிரச்சினை; ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்குப் பதவி உயர்வை நிறுத்தி வைத்தல் போன்ற விவகாரங்களில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் ஒரு வார்த்தை சொன்னால், அந்தப் பதவியில் அமைச்சர்கள் நீடிக்கமாட்டார்கள்.
ஓர் உதாரணம் சொல்கிறேன், அந்தக் காலத்தில் சஞ்சீவ ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது, பேருந்துகளை தேசியமயமாக்கினார். அது தவறு என்று உச்சநீதிமன்றம் சொன்னது.
அடுத்த நிமிடம், சஞ்சீவ ரெட்டி, பதவியிலிருந்து விலகினார்.
அந்தக் காலத்தில் ஜனநாயகத்தை அந்த அளவிற்கு மதித்தார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் எத்தனைத் தீர்ப்புகள் வந்தாலும், மண்டையில் எத்தனைக் குட்டுகள் கொட்டினாலும், காதைப் பிடித்துத் திருகினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பதவியில் தொடர்ந்து இருக்கிறார்கள்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment