இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டில்லி காவல்நிலையத்தில் சிறுமிகளை பாலியல்வன்கொடுமை செய்தல்(போஸ்கோ) பாலியல் ரீதியிலான சீண்டல் என இரண்டு பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
டில்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், "மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த ஜனவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்நிலையில், வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் சூழலில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஃப்அய்ஆர் பதிவு செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி வலியுறுத்தினர். அதற்கு டில்லி காவல்துறை தரப்பு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் கூறியவர்களில் ஒருவர் சிறுமி என்பதால் போக்ஸோ பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தை திரும்பப் பெறுவீர்களா? என்பது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர், வீராங்கனைகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால், டில்லி காவல்துறையினர் மீது எங்களுக்கு நம்பிக்கை யில்லை. இது வழக்குப்பதிவு செய்வற்கான போராட்டமல்ல. இதுபோன்ற நபர்களை தண்டிப்பதற்கான போராட்டம்! பிரிஜ் பூஷனின் பதவி பறிக்கப்படவேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்' என்றனர்.
இந்த நிலையில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறித்து பேசிய பிரிஜ்பூசன் 'நான் பதவி விலக மாட்டேன்; என் மீது எந்தத் தவறும் இல்லை. அதே போல் தலைமை எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அவர்கள்(பாஜக தலைமை) என்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்' என்று திமிராக பேசினார். இவர் ஏற்கெனவே போராட்டம் நடத்திய வீராங்கனைகளை தொலைப்பேசியில் மிரட்டிய தாகவும் போராட்டக்களத்தில் உள்ள வீராங்கனைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் உங்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் உங்களோடு நிற்கிறது என்று ஆறுதல் கூறிய அவர் அவர்களோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் போராட்டம் நடத்தும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுக்கழிப்பறை வாகனமும் அகற்றப்பட்டது, அவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களும் அங்கிருந்து விலகிச்செல்லும் படியும் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்றவை வழங்கக்கூடாது என்றும் மறைமுக மிரட்டல்கள் வருவதாக போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
பிஜேபி - காவிகளின் தரங் கெட்ட கீழ்த் தன்மைக்கு வேறு என்ன கருத்துக்காட்ட வேண்டும்?
மல்யுத்த வீரரா? பாலியல் வன்கொடுமைக்காரரா? இவரைக் காப்பாற்றும் பிஜேபியை எடை போடுவீர் வாக்காளர் பெரு மக்களே!
No comments:
Post a Comment