சமூகநீதிக் கல்வி பயணித்த நீண்ட தூரப் பாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

சமூகநீதிக் கல்வி பயணித்த நீண்ட தூரப் பாதை

1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், நாடாளுமன்ற வாதியுமான ‘தாமஸ் பாபிங்டன் மெக்காலே’. அவர் மூன்று சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.

1) அனைத்து ஜாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும் கல்வி 

2) அதுவரை பயிற்று மொழியாக இருந்த சமஸ்கிருதம், அரேபிய மொழிகளுக்கு மாற்றாக ஆங்கிலமே பயிற்று மொழி.

3) வேதம், சாஸ்திரங்களுக்கு மாற்றாகக் கணிதம், அறிவியல், பூகோளம் பாடங்களைக் கற்பித்தல்.

மெக்காலே இப்படி அறிவித்தவுடன், இந்தியாவின் வைதீகக் சக்திகள் அனைத்தும் மெக்காலேவை வெட்டி வீழ்த்தக் கிளம்பின. தற்போது “தமிழ்நாடு முதலமைச்சரைக்” காய்ச்சி எடுப்பது போல் அன்று “மெக்காலே” மீது சாபத்தை அள்ளித் தெளித்தனர். கொஞ்சமும் அசரவில்லை மெக்காலே. அனைத்திற்கும் பொறுமையாகப் பதில் சொன்னார்.

“ஜாதி வேறுபாடுகளால் புரையோடிப் போன, பாரபட்சமான அணுகுமுறைகளால் இந்தியா ஏற்கெனவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தின் மழலையர் பள்ளிப் பாடங்களில் இருக்கும் வரலாறும், அறிவியலும் கூட இந்தியாவின் சமஸ்கிருத, அரேபிய மொழி இலக்கியங்களில் இல்லை. எனவேஅவற்றை நீக்கி ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கினால் தான் இந்தியாவை இந்தியர்களே ஆளும் தகுதியைப் பெறுவார்கள்” என்றார் மெக்காலே.

இதற்காக ஆங்கிலேயராய்ப் பிறந்த யாருமே எதிர்கொள்ளாத அத்தனை எதிர்ப்புகளையும் மெக்காலே எதிர்கொண்டார். அவர் அழிய வேண்டும் என்று சனாதனிகள் எழுப்பிய ‘யாகக் குண்டங்களின் புகை’ இந்தியாவைச் சூழ்ந்து மூச்சு முட்டச் செய்தது. 

இறுதியில் இங்கிலாந்துப் பேரரசு மன்னரின் ஆணையோடு கல்விச் சீர்திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் மெக்காலே. அந்நிய மொழிகளான சமஸ்கிருதமும், அரேபியமும் இந்தியக் கல்வி முறையை விட்டு நீங்கின.

வரலாற்றில் ஜாதி மதங்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தியவர்கள் தான் அதிகமான எதிர்ப்புகளைக் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சனாதனிகளால் அதிகம் வெறுக்கப்பட்ட அவர்கள்தான் மாபெரும் தலைவர்களாகப் போற்றப் பட்டும் வருகிறார்கள்.

மெக்காலே வரிசையில்தான் மகாத்மா ஜோதிராவ் ஃபுலே,பண்டிதர் அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோரை வைத்துப் பார்க்க முடியும். அந்த வகையில் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” அவர்களுக்கு சனாதனிகளால் எழும் எதிர்ப்புதான் வரலாற்றில் அவரை நிலைநிறுத்தும். அவர் உறுதியோடு மொழிய வேண்டிய ஒரே மந்திரச்சொல்இதுதான்.

No comments:

Post a Comment