பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு: சங்க காலத்தை சேர்ந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு: சங்க காலத்தை சேர்ந்தது


புதுக்கோட்டை, மே 27 புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் செங்கல் கட்டு மானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021இல் அகழாய்வு மேற்கொள் ளப்பட்டது. அப்போது பல வகையான பானை ஓடுகள், மண் கிண்ணங்கள், கிண்ணங்களின் மேல் மூடி குமிழ், பெண்கள் விளையாடிய வட்ட சில் போன்ற பல சுடுமண் பொருட்கள் கிடைத்தன.

இதனையடுத்து இப்பகுதியை ஒன்றிய, மாநில அரசுகள் முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று பொற்பனைக்கோட்டையை அகழாய்வு செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. அதன்படி தொல்லியல் துறை சார்பில் கடந்த 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணி முதற்கட்டமாக தொடங்கியது. இந்த பணியை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில் 25.5.2023 அன்று நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணியின் போது, செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. 7 முதல் 19 செ.மீ ஆழத்தில் செங்கல் அமைப்பு வெளிக்கொணரப்பட்டதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அகழாய்வு தொடங்கி 5 நாட்களில் செங்கல் கட்டுமானம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த செங்கல் கட்டு மானம் சங்க காலத்தில் கட்டப்பட்டிருக்க லாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அகழாய்வு செய்யும்போது பல்வேறு வரலாற்று ஆதாரங்கள், பொக் கிஷங்கள் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment