செவ்வாய்க் கோளில் அரிசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

செவ்வாய்க் கோளில் அரிசி

செவ்வாய் கோளில் அரிசி விளைவிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்கிறார் அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி அறிஞர் அபிலாஷ் ராமச் சந்திரன். ஆனால் அதன் மேற்பரப்பில் நெல் பயிருக்கு நச்சான பெர்கு ளோரேட் எனும் வேதிப்பொருள் இருப்பதால் அந்த தாவரம் பிழைத் திருக்க உதவி தேவைப்படும். ‘நாம் மனிதர்களை செவ்வாய் கோளிற்கு அனுப்ப விரும்புகிறோம். ஆனால் எல்லாவற்றையும் அங்கு எடுத்து செல்ல இயலாது. அது பெரும் பொருட் செலவாகும். அரிசியை தயாரிப்பது எளிது என்பதால் அங்கு அதை  விளை விப்பது பொருத்தமாக இருக்கும். உமியை பிரித்துவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான்.’ என்கிறார் அவர். ராமச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் மொஜாவ் பாலை வன மணலில் செவ்வாய் கோளின் மணற்பரப்பு போன்ற ஒன்றை உரு வாக்கி அதில் நெல்லை வளர்த்தனர்.

மேலும் தாவர சத்துக்கலவை மட்டுமே கொண்டவற்றிலும் தாவர சத்துக் கலவையுடன் பாலைவன மணல் கலந்தவற்றுடனும் நெற்பயிரை வளர்த்தனர். செயற்கையாக உருவாக் கப்பட்ட மணற் பரப்பில் நெற்பயிர் வளர்ந்தது. ஆனால் மற்ற இரண்டை விடவும் தண்டுகள் குட்டையாகவும் மெலிந்தும் வளர்ந்தன.

வேர்களும் மெலிவானதாக இருந் தன. செயற்கை மணலில் 25% தாவர சத்தைக் கலந்த போது அவை நன்றாக வளர்ந்தன. அடுத்து இயற்கையாய் வளர்ந்த நெல்வகையையும் வறட்சி போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களை தாக்குப் பிடிக்கக்கூடிய மரபணு மாற்றப் பட்ட நெல்வகையையும் செவ்வாய்க் கோள் மணலை ஒத்த பரப்பில் பயிரிட்டனர். 

பெர்குளோ ரேட் கலந்த ஒன்றிலும் கலக்காத இன்னொன்றிலும் இந்த சோதனையை செய்தனர். ஒரு கிலோ மணலில் 3 கிராம் பெர்குளோரேட் கலந்த மணலில் எதுவுமே முளைக்க வில்லை. ஆனால் பெர்குளோரேட்டை ஒரு கிராமாக குறைத்தபோது மரபணு மாற்றப்பட்ட வகையில் ஒரு விதை வேரும் தண்டும் பிடித்தன. இயற்கை வகையில் ஒரு விதையில்  வேர் மட்டும் வளர்ந்தது. நெற்பயிரை மேலும் மரபணு மாற்றம் செய்தால் செவ்வாய் கோளில் வளரக் கூடிய நெல் வகையை கண்டு பிடிக்கலாம்.

No comments:

Post a Comment