ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் போன்று தோற்றமளிக்கும் ஆபாசவீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்துள்ளார். இந்த நிலையில் அக்காணொலியில் வரும் பெண் - அது தான் இல்லை. தன்னைப் போன்றே உருவம் கொண்ட வெளிநாட்டுப் பெண் என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில் பன்னா குப்தா பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் காட்சிப் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சிப் பதிவை பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு அமைச்சர் பன்னா குப்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " என்னுடைய அரசியல் எதிரிகள் சிலர், என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், நன்கு திட்டமிட்டு எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி, வேண்டுமென்றே ஒரு போலி மற்றும் திருத்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்தாலே இது 'போட்டோ ஷாப்' அல்லது வேறு ஏதேனும் எடிட்டிங் வீடியோ என்று தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
இந்தக் கேவலமான வேலையை ஏதாவது ஒரு 'ஆப்' மூலம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விசாரணை நடத்திய பிறகு, உண்மை வெளிவரும். இந்தப் போலியான மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோ மூலம் என்னை சிக்க வைக்க முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பன்னா குப்தா விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே விளக்கத்தை ஏற்காத பாஜக நாடாளு மன்ற உறுப்பினரோ அமைச்சர் பன்னா குப்தா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்த ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்பட்ட ஆருஷி வந்தனா என்ற பெண் தனது கணவர் இந்திரஜித் சிங்குடன் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: "கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பாஜகவினர் தனது படத்தைப் போட்டு ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள் ளனர். கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கிறேன். கட்சியின் நிகழ்ச்சிகளுக்காக அமைச்சர்களை சந்தித்து வருகிறேன். அமைச்சர் பன்னா குப்தா என் சகோதரர் போன்றவர், அவருக்கு நான் ராக்கி கட்டி உள்ளேன். இந்த வீடியோ விவகாரம் அவரது புகழைக் கெடுத்து விட்டது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்து உள்ளேன்" என்று ஆருஷி வந்தனா கூறினார். "பாஜக இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்யும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த காணொலியிலேயே பல ஒட்டுவேலைகள் நடந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வை அறிந்தவர்களுக்கு, இது போன்ற கீழ்த்தர வேலைகளில் பிஜேபியினர் இறங்குவது ஆச்சரியமாக இருக்காது.
கருநாடக சட்டமன்றத்திலேயே கைப்பேசியில் ஆபாச படங்களைப் பார்த்து இரசித்தவர்கள் ஆயிற்றே!
தன்னிடம் உதவி கேட்க வந்த பெண்ணை உ.பி. பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் சிதைத்தது எல்லாம் மறக்கக் கூடிய நிகழ்ச்சியா?
கேட்டால் தர்மம், ஆன்மிகம், தார்மிகம் பற்றி எல்லாம் வாய்க் கிழியப் பேசுவார்கள்.
ஜெகத் குரு என்று தலையில் தூக்கி வைத்துக் கொஞ்சும் ஆசாமியே எத்தகைய காரியங்களில் எல்லாம் ஈடுபட்டார் என்பது ஊருக்கும் உலகுக்குமே தெரிந்த ஒன்றாயிற்றே!
No comments:
Post a Comment