பெங்களூரு, மே 22 கருநாடக சட்ட மன்ற தேர்தலில் காங் கிரஸ் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவி ஏற்றார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலாவது சட்டமன்ற கூட்டம் பெங்களூரு விதானசவுதா வில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தன்னை சந்திக்க வருபவர்களுக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது, மரியாதை நிமித்தமாக எனக்கும் வரும் பூக்கள் அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். என் மீது அன்பையும் மரியாதையையும் பரிசுகளாக வெளிப்படுத்த விரும்புவோர், எனக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கலாம்; உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. நிர்வாகிகள்
தேர்தல் அறிவிப்பு
சென்னை, மே 22 ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 21.5.2023 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஜூன் 14 ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகர், 3 ஆவது அவென்யூ நியூ ஆவடி சாலையில் உள்ள விஜய்சிறீ மகாலில் நடைபெறும். அன்றைய நாளில் மதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத்தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலர், துணைப் பொதுச்செயலர் 5 பேர் உள்ளிட்ட பதவி களுக்கான தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவோர் மே 27 முதல் விண்ணப்பங்களைப் பெறலாம். ஜூன் 1 ஆம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும். ஜூன் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணி வரை வேட்பு மனு திரும்பப் பெறலாம். தலைமைக் கழக நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பப் படிவம் ரூ.250. வேட்பாளர் கட்டணம் ரூ.25,000. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வேட்புமனு விண்ணப்பப் படிவம் ரூ.100, வேட்பாளர் கட்டணம் ரூ.12,000. கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.
தலைமைக்கழக நிர்வாகிகள் பொறுப்புக்குப் போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினர்களாக தகுதி பெற்ற 25 பேர் முன்மொழிந்தும், 25 பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக 7 பேரும், தணிக்கைக்குழு உறுப் பினர்களாக 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோரை பொதுக் குழு உறுப்பினர்களாக தகுதி பெற்ற 10 பேர் முன் மொழிந்தும், 10 பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் ரா.பிரியகுமார், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தேர்தல் பணிச் செய லாளர் இரா.அந்திரிதாஸ் ஆகியோர் செயல்படுவார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
வங்கிகளில் லாபம் ரூபாய் ஒரு லட்சம் கோடி
புதுடில்லி, மே 22 பொதுத் துறை வங்கிகளின் லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முந்தைய 2021-2022-ஆம் நிதியாண்டில் இந்த 12 பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.66,539.98 கோடியாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2023-இல் வங்கிகளின் லாபம் 57 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கடந்த 2017-2018-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.85,390 கோடி அளவுக்கு நிகர இழப்பை சந்தித்திருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவற்றின் லாபம் ரூ.1,04,649 கோடியை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. ஒட்டு மொத்த லாபத்தில் எஸ்.பி.அய். பங்களிப்பு மட்டும் பாதியளவுக்கு அதாவது ரூ.50,232 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் எஸ்.பி.அய். லாபம் கடந்த நிதியாண்டில் 59 சதவீதம் அதிகரித்துள்ளது. பேங்க் ஆப் மகாராட்டிரா அதிகபட்ச லாப வளர்ச்சியாக 126 சதவீதத்தை பதிவு செய்து ரூ.2,602 கோடியை ஈட்டியது. யூகோ வங்கியின் லாபம் 100 சதவீதம் அதிகரித்து ரூ.1,862 கோடியையும், பேங்க் ஆப் பரோடா லாபம் 94 சதவீதம் அதிகரித்து ரூ.14,110 கோடியையும் ஈட்டின. பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் கடந்த நிதியாண்டில் 27 சதவீதம் குறைந்தது. அந்த வங்கி 2021-2022 நிதியாண்டில் ரூ.3,457 கோடியை ஈட்டிய நிலையில் 2023-இல் அதன் லாபம் ரூ.2,507 கோடியாக குறைந்து போனது. இந்தியன் வங்கியின் லாபம் 34 சதவீதம் அதிகரித்து ரூ.5,282 கோடியாகவும், அய்.ஓ.பி. லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,099 கோடியாகவும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா லாபம் 61 சதவீதம் அதிகரித்து ரூ.8,433 கோடியாகவும் இருந்தன.
No comments:
Post a Comment