இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை!

 இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை!

பெண்ணே, பெண்ணே திரும்பிப் பார்

நீ ஏன் அடிமையாய் - இந்த மண்ணில்?

மனித குலத்தின் சரிபாதி மட்டுமல்ல, மற்ற பகுதி மன்பதையில் உருவாகவும் உனது ஒத்துழைப்பும் ஓய்வறியாத உழைப்பும் அல்லவா முக்கிய காரணம்!

"அதை ஆண் வர்க்கம் மறந்ததோடு, உன்னை மதிப்பதற்குப் பதிலாக, அடிமைச் சேற்றில் அறியாமை ஊற்றாக அல்லவா உன்னை வைத்து, உன்னை ஏமாற்றியே வந்துள்ளதை உணராப் பேதையாக நீ எவ்வளவு காலம்  தொடருவது?" என்று அறிவுச் சாட்டையைச் சொடுக்கி, சொடுக்கி, அற்புதமாக விழிக்கச் செய்த மாபெரும் மகத்தான விடியல் தந்த வெற்றி வீரர் நம் பெரியாரால் இன்றைய இளைய பெண்ணுலகம் தமது உரிமைகளைத் தேட ஆரம்பித்து, தங்களை தமது வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் சிப்பாய்களாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்!

இளந்தளிர்கள்கூட இந்த பெரியார் என்ற மாமருந்தால் நலிவிலிருந்து நீங்கி வலிவும், கொள்கைப் பொலிவும் பெற்று வருகிறார்கள்!

எழுச்சி எங்கணும் ஒளி வீசிக் காண்கிறது!

'16 வயதினிலே' படம் தான் பார்த்திருப்பர்; அந்த 16 வயதினிலே, உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது பெண்ணடிமைச் சுவரை இடிக்கும் எண்ணங் கொண்டு தனது எழுதுகோலை - பேனாவை போர்க் கருவியாகக் கண்ட இளம் போராளி சுகா போஸ் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

 நியூ செஞ்சுரி புக் அவுஸ்(பி) லிட் வெளியிட்டுள்ள இந்த சிறு நூல் ஒரு நல்ல உரிமைக் குரல் சாசனம்! சவுக்கடிகள் போன்ற கேள்விகளை சுழற்றி வீசுகிறார்!

எண்ணக் குமுறல்கள் எழுச்சி அலைகளாய் ஓங்கி உயர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றன!

முதலில் தலைப்பு - எழுத்தாளர் பெயரைப் படித்தபோது ஏதோ வங்க எழுத்தாளரின் படைப்பை  மொழியாக்கம் செய்து தருகிறார்களோ என்றே எண்ணி, வரவழைத்துப் படித்தேன்.

"இவரின் தந்தை சமத்துவம் வேண்டி நின்ற அருமைத் தோழர் எம்.ஏ.கே. சுபாஷ் சந்தரபோஸ். அவர் காண விரும்பியதை அவர் இல்லாத போதும் நிறைவேற்றி சுகா பேருவகையுறுகிறார். இவரின் தாய் என். கண்ணகி தலைமைக் காவலராகப் பணி செய்கிறார்.

"சுகதர்ஷணி - முழுப்பெயர் சமயபுரம் என்.ஆர்.வி. பதின்மப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறார்!

இவரது நல்லாசிரியர் துளசிதாசன் முன்மாதிரிப் பள்ளியாக வழி நடத்துகின்றார்!

இப்பின்புலத்தில், இயல்பான இயல்பில் "ஒரு மனிதர்க்கு இறக்கை முளைத்திருக்கிறது. உங்கள் வானம் - உயரே பறந்து செல்லுங்கள்" என்று முனைவர் இரா. காமராசு (பேராசிரியர் தமிழ்ப் பல்கலைக் கழகம்) வாழ்த்துகிறார்!

இந்நூலுக்கு முன்னுரை என்று தந்துள்ள - இவரது கருத்தாக்கம் உருவாக பின்புலமாக அமைந்த தமிழய்யா மகா இராஜராஜ சோழன் முன்னுரையை எப்படித் தந்திருக்கிறார் தெரியுமா?

"பெரியார் என்னும் பெரு மரத்தின் புதிய துளிர்" பேசுகிறது!

"காலம்காலமாய்....

காலம் - தன் ஆக்டோபஸ் கரங்களால் பெண்ணைச் சிறைப்படுத்த முனைகிறது. ஆயினும் இந்தச் சிறைப்படுத்தலை உடைத் தெறிய அவ்வப்போது பெரியார் போன்ற பெரு மனிதர்கள் எழுந்து தடிக்கொண்டு தாக்குகிறார்கள் விலங்குகள் உடைந்தபாடில்லை, ஒடிந்தபாடில்லை பூ, பொட்டு, நகை, கற்பு என பெண்ணுக்குப் பூட்டப்பட்ட அவர் காலத்து விலங்கை எழுத்தாலும், பேச்சாலும் உடைத்துப் பெண்ணை மீட்க முனைந்தார் பெரியார்.

இன்று அப்படியில்லையே, காலம், ஆடை, அரசியல், ஊடகம், கல்வி வளாகம், கோயில் எனப் பல்வேறு சூழல்களிலி ருந்தும் பெண்ணை, பெண் மையை நசுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அறிவியல் யுகம் எனப் பேசும் இக்காலத்திலும் பெண் பொது வெளியில் வேகமாகப் பேசவோ, சிரிக்கவோ முடியாத சூழல் அல்லவா இருக்கிறது. இந்த நவீன பெண் அடிமைத்தனத்தை எது கொண்டு தாக்கி உடைப்பது? இந்த உடைத்த லெனும் பெரும் விடுதலையை யார் முன்னெடுப்பது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் உரைக்கிறது இந்நூல்.

மனிதன் நாகரிகம் அடைந்துகொண்டே வருகின்ற காலத்தின் நெடுகிலும் தேவையற்ற அறியாமையையும், அடிமைத்தனத்தையும் சுமந்துகொண்டே வருகின்றான். அவ்வாறான மனிதர்களை இடைமறித்து நிறுத்தி சில கேள்வி களாலேயே பதில் உரைத்திருக்கிறது. 'மனிதி'. 'மனிதி' காலத்தின் தேவை. சுகா போஸ் அவர்கள் தொடர்ந்து இது போன்ற நூலாக்க முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இதில் என்னுரையில்,

"பெண்மை என்று சொல்லும்போது நம் மனதில் தோன்றுவது

தாய்மை. சங்க காலம் முதல் பெண்கள் போற் றப்படுகிறார்கள். கடவுள்களாக போற்றப்படும் பெண்கள் அடிமைகளாகவும் நடத்தப்படு கிறார்கள். வேலு நாச்சியார், ஜான்சிராணி போன்ற பெண்கள் வாழ்ந்த இம்மண்ணிலே ஆசிஃபா, நிர்பயா போன்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அவலம் அன்றோ! ஒரு பெண் அவளுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை ஆண்மகனை நம்பியே வாழ வேண்டும் என்கிறது இந்த சமுதாயம். பாலியல் வன்கொடுமையை ஒரு குற்றமாகப் பார்க்காமல் ஒரு வேடிக்கை ஆகிவிட்டது. இந்தக் காலத்தில் வீட்டிற்குள்ளேயே நடக்கும் பாரபட்சம் ஒவ்வொரு துறையிலும் பரவ ஒவ்வொரு நாளும் ஒரு பெண் சூறையாடப்படுகிறாள். பாலியல் வன்முறைக்கு அந்த பெண் அணிந்திருக்கும் அந்த ஆடை தான் காரணம் என்று நம்பிக் கொண்டிருக்கும் சில நல்லவர்கள் கல்விக்காக போராடும் பெண்கள் என்ற காலம் மாறி தங்களை பாதுகாக்கப் போராடும் பெண்கள் வாழும் காலம்... இந்த அவலங்களையும் கடந்து தங்கள் பாதையில் கர்வத்துடன் பயணம் செய்யும் ஒவ்வொரு மனிதியையும் வணங்கி பெண்ணியம் என்னும் பெரும் தீபத்தின் தீப்பொறியாவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நன்றி கூற எமக்கு வார்த்தைகள் போதாது போதிலும் கூறுகிறேன்.

பெரியாரென்னும் ஆலமரத்தின் விழுதாகப் பிறக்கிறேன்" என்று முடிக்கிறார்!

பெரியார் விழுதே - மேலும் எழுது! எழுது!!

உனது எழுத்துக்கள் வெறும் 'எழுத்து' ஆக

ஒருபோதும் இருக்காது!

புதுமைச் சமூகம் அமையப் போர்வாளாக அமையும்! அமைய வேண்டும் என்று ஆலமரத்தின் மற்றொரு பெரு விழுது! உம்மைப் பாராட்டி அடையும் பூரிப்பினை வடித்தெழுத வார்த்தையே இல்லை!

இந்த நூலைப் படியுங்கள்!

வாங்கிப் படியுங்கள்! 

இதில் கேட்கும்

எழுச்சிச் சங்கொலியின் கம்பீரக் குரல்!

உங்கள் நாடி நரம்புகளை முறுக்கேற்றி

அடிமை விலங்கும் அற்று வீழும்.

No comments:

Post a Comment