புதிதாக போடப்படும் சாலைகளில் பள்ளம் தோண்ட ஓராண்டு தடை சென்னை மாநகராட்சி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

புதிதாக போடப்படும் சாலைகளில் பள்ளம் தோண்ட ஓராண்டு தடை சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை, மே 7- சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளில் ஓராண்டுக்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக போடப்படும் சாலைகள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, மழைநீர் வடிகால் இணைப்பு, குடிநீர் இணைப்பு, இணைய தள வயர்கள், மெட்ரோ ரயில் எனப் பல திட்டங்கள் பூமிக்கு அடியில் தான் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

அவற்றில் முக்கியமானது மழைநீர் வடிகால் திட்டம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஒரு மழைக்கே மிதக்கும் சென்னையை மாற்றி காட்டுவோம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலை யில், முதல்கட்டமாக சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டார். 

இதற்காக ஒரு குழுவையும் நியமித் தார். அவர்கள் கொடுத்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு இப் பணிகளை வேகமாக முடிக்க முதல மைச்சர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சென்னை முழுவதும் பல்வேறு கட்டங்களாக மழைநீர் வடிகால் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. அதன் எதிரொலியாக கடந்த வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் எங்கும் தேங்காத நிலை ஏற்பட்டது.

இது சென்னை மக்களை மகிழ்ச் சியில் ஆழ்த்தியது. இந்த மழைநீர் வடிகால் பணிகளால் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களால் ஏராளமான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது.

இது தொடர்பான புகார்களும் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு வந்தது. எனவே சென்னை முழுவதும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நேரம் அப்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால் சேத மடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சென்னை முழுவதும் சேதமடைந்த சாலைகள் கணக் கெடுக்கப்பட்டு, அவற்றை சீர் செய்யும் வகையில், புதிதாக சாலை பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டது.

இப்பணிகள் அனைத்தும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் வேகமாக நடந்து வருகிறது. 

அதன்படி, சென்னையில் தற்போது ரூ.367.85 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மெட்ரோ ரயில் பணிகளும் சென்னையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேலும் விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், குடிநீர் பைப்லைன், மின்சார வாரியம் போன்ற மற்ற துறை சார்பிலும் அடிக்கடி பள்ளம் தோண்டு வதால் புதிதாக போடப்படும் சாலை கள் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அசவுகரியம் குறித்து மக்கள் சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதை தடுத்தால் தான் சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளை பாதுகாக்க முடியும் என்பதால், அதற்காக சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சென்னையில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளில் ஒரு ஆண்டுக்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித் துள்ளது.

அதன்படி, எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் புதிதாக போடப்பட்ட சாலையில் பள்ளம் தோண்டக் கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னை மாநகர குடிநீர் வாரியம், சென்னை மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment