மதப் பிரிவினையைத் தூண்டும் சங்பரிவாரின் திரைப்படம்: கேரள முதலமைச்சர் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

மதப் பிரிவினையைத் தூண்டும் சங்பரிவாரின் திரைப்படம்: கேரள முதலமைச்சர் கண்டனம்

கேரளா, மே 2-  ஹிந்தியில் சுதித்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா.சர்மா, பிரணவ் மிஸ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதை கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு ஈராக் மற்றும் சிரியாவில் அய்.எஸ்.அய்.எஸ் அமைப்பில் சேருவதை போன்ற உண்மை கதைக்களத்தை அமைத்து திரைப்படம் உருவாக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது திரைப்படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதன் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினாராய் விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப் புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.

வகுப்பு பிரிவினைவாத மற்றும் கேரளாவிற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்தோடு உருவாக்கப் பட்டுள்ள இந்த திரைப்படம் விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த லவ் ஜிஹாத் குற்றச் சாட்டுகளை வடிவமைத்து திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது. லவ் ஜிஹாத் என்பது ஒன்று கிடையாது என ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இப்படி ஒரு சூழ்நிலை கேரளாவில் மத நல்லிணக்கத்தை அழித்து வகுப்பவாத நச்சு விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருகிறது” என கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment