திருநீற்றின் புதுவகைப் பயன் பாரீர்!
‘மந்த்ரமாவது நீறு' என்ற பாடலை சைவத் திருமேனிகள் ‘‘மனமுருகப்'' பாடுவார்கள்!
'நீறில்லா நெற்றி பாழ்' என்பதற்கு எங்கள் பகுத் தறிவு தமிழாசிரியர் ஒருவர் (அவர் பெயர் செல்வ கணபதி - நான் 6 ஆவது, 7 ஆவது வகுப்பு படிக்கும் போது எனக்கு அவர் தமிழாசிரியர்) அதற்குரிய பொருள் கூறும்போது, அது நெற்றியில் மூன்று கோடு போடும் விபூதி பூசுதல் அல்ல; அதைப் பூசாத நெற்றி யெல்லாம் பாழ்தான் என்று பழம் பொருளுரைப்பார்கள் பழைமை யாளர்களான சில தமிழாசிரியர்கள் என்று எங்கள் தமிழாசிரியர் கூறுவார். வியர்வை வரும்படி உழைப்பதையே அது குறிக்கும் என்பார்!
அப்படியானால், மற்ற நாமம் போட்டுக் கொள்ளல், இவற்றை எதுவுமே போட்டுக் கொள்ளாத மற்ற மதத்தவர்களின் நெற்றிகள் எல்லாம் பாழ்தானோ?'' என்று சில பகுத் தறிவு குறும்புக்கார மாணவர்கள் கேட்ட வுடன், கிடைத்தது பதில் அல்ல - பிரம்படி தான்!
எங்கே அறிவுப்பூர்வமாகப் பதில் அளிக்க முடிய வில்லையோ அங்கு அடக்கு முறைதானே அவர்களது ஒரே திருப்தி - வழி.
அதனால்தான் பகுத்தறிவுக்குப் பதில் பிரம்படி - தெளிவுக்குப் பதில் அடக்குமுறை! இத்தியாதி! இத்தியாதி!!
‘‘நெற்றியில் நீறு பூசுவது அறிவியல் பூர்வமானது; உள்ளே உள்ள தேவையற்ற நீரை 'ஜிவ்'வென்று இழுத்து, நிவாரணத்தைத் தரும் அது'' என்று கூறும் விபூதி அன்பர் களிடம், பெரியார் கருத்தை நாடக வசனமாகவே வைத்து வெளுத்து வாங்கினார் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள்.
உடம்பில், நெற்றியில் இருக்கும் நீரை யெல்லாம் திருநீறு ஜிவ்வென்று இழுத்து நிம்மதி தரும் என்று கூறுவதை வாதத் திற்காக ஏற்றாலும் (அறிவுப்பூர்வமாக உடற் கூறு ரீதியாக ஏற்க முடியாவிட்டாலும்) கூட மற்றொரு கேள்வி.
இரும்புப் பெட்டிக்கும், கடையில் கல்லாப் பெட் டிக்கும், புத்தகங்களுக்கும்கூட - வைத்துப் படைத்த பூசையில் திருநீறு பொட்டு வைக்கிறார்களே, அது எந்த நீரை இழுக்க என்று கேட்பார்!
பதில் அளிக்க முடியாமல் திகைத்து விழிப்பார் - அவருடன் வாதம் செய்ய முன்வந்த மற்றொரு நடிகர்.
அதுமட்டுமா?
இன்னும் சிலர் விபூதியென்பது சாம்பல் பூச்சுதானே என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு ‘மடக்கு மடக்கு' என்று, பகுத் தறிவாளர்களை மடக்கிடுவதாக எண்ணிக் கொண்டு, ‘‘நாம் இறுதியில் எரிந்து சாம் பலாகத்தான் போகிறோம் என்பதை உணர்த்திட, ஞாபகப்படுத்த இதை அணி கிறோம்'' என்பர். எனவே, அடக்கமாக நடக்கவேண்டும். ஆசைகளை வளர்த்துக் கொள்வது அர்த்தமற்றது'' என்று ‘தத்து வார்த்தம்' கூறும்போது,
குறும்புக்கார பகுத்தறிவுவாதி கேட்பார், ''அப் படியா, நாம் சாப்பிடும் உணவு செரி மானமாகி, கழிப் பறையில்தான் செல்கிறது; அதனை நினைவுப்படுத்தி, இலையில் விருந்தில் ஒரு பகுதியில் ‘‘அமேத்தியம்'' வைக்கப்படலாமா?'' ('அமேத்தியம்' என்றால், மலம்) என்ற கேள்வியைக் கேட்டு, முகம் சுளித்த நிலை தவிர, அறிவு ரீதியான பதில் பளிச்சிட்டதாகத் தகவல் இல்லை!
ஆனால், இப்போது திருநீறு எப்படி கொள்ளைக்கு உதவிடும் ஆயுதமாக, கொள்ளையர்கள் பயன்படுத்தி யுள்ளார்கள் என்பது நேற்று (7.5.2023) வெளிவந்த ஒரு செய்திமூலம் வெளியாகியுள்ளது!
திருப்பரங்குன்றம் கோவில் முருகனின் வேலை திருடியவர்கள் சி.சி.டி.வி. கேமிரா மீது விபூதியை வீசி மறைத்துவிட்டுத் தங்களது ‘‘தொழில்நுட்பத்தை''(?)க் காட்டியிருக்கிறார்கள்.
விபூதி வீச்சு சி.சி.டி.வி. கேமிராவில், நடப்பது தெரியாமலிருப்பதற்கு - மறைப்ப தற்குத் திரைபோல் பயன்பட்டது போலும்.
என்னே கொடுமை!
கொடுத்த கடனை திருப்பித் தராதவர் களையே ஆத்திரம் பொங்கியவுடன் ‘‘எனக்கென்ன ‘நாமம்' போடலாமென்ற நினைப்போ?'' என்று ஆத்திரத்துடன் கேட்பதே - 'நாமம் போடுவது' என்பதற்கு இப்படி ஒரு சொல்லாட்சியும் புழக்கத்தில் இருக்கிறது என்பதை அறிய பக்தர்கள் என்ன, நாமும்கூடத்தான் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்!
''பக்தி வந்தால் புத்தி போகும்!
புத்தி வந்தால் பக்தி போகும்'' என்பார் பெரியார்!
அதன் அர்த்தம், இப்போதுதான் நமக்கு விளங்குகிறதல்லவா!
No comments:
Post a Comment