சென்னை, மே 11 ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் சென்னையில் 2 நாட்கள் (மே 9, 10) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழுஉறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல்,முறைகேடு உள்ளிட்டவற்றால் மக்களுக்குச் சேர வேண்டிய பலன் கிடைக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தவறிழைத்தோர், தவறுக்கு துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தமிழ்நாடு அரசு தண்டிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து அரசியல் சாசனத்துக்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார். பத்திரிகையில் பேட்டி என்ற பெயரில் உண்மைக்கு மாறானவைகளையும், அவதூறு களையும் அவர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இத்தகைய சட்டவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இனியும் அனுமதிப்பது முறையல்ல.
ஏற்கெனவே, மத்திய அரசிடம்அளித்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள மறுத்துள்ளதுடன் ஆளுநரை தங்களுக்குச் சாதகமாக மத்திய அரசு இயக்கிவருவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
எனவே, அரசியல் சாசன வரம்புகளை மீறி செயல் படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment