விருதுநகர், மே 17- துறைமுகத்திலும், ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி பாஜக நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட தலைவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்.
இவர் பாஜக விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருக்கிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு சிவகாசி மாநகர பா.ஜ.க துணைத் தலைவராக இருக்கும் பாண்டியன் என்பவரை சந்தித்த பாஜக மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர் கலையரசன், பாண்டியனின் மகன்களான கார்த்திக் மற்றும் முருகதாஸ் ஆகிய இருவருக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார்கள்.
அதாவது பாண்டியனின் மகன் கார்த்திக்கும் தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், முருகதாசுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி 11 லட்சம் ரூபாயை பெற்று இருக்கின்றனர்.
பாஜக மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ் குமார் மற்றும் கலையரசனிடம் பணம் கொடுத்து 5 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. ஆனால், பாஜக நிர்வாகி பாண்டியனின் மகன்களுக்கு சொன்னபடி வேலை கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலையிடம் பாஜக மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ் குமார் மற்றும் கலையரசன் பற்றி புகார் அளித்து உள்ளார்.
அதை தொடர்ந்து பாண்டியனிடம் ரூ.2 லட்சத்திற்கான 5 காசோலைகள் மற்றும் ஒரு லட்சம் ருயாய்க்கான ஒரு காசோலையும் வழங்கப் பட்டது.
பாண்டியனுக்கு கிடைத்த 6 காசோலைகளில் 5 காசோலைகள் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளன. ஒரு காசோலையில் மட்டும் ரூ. 2 லட்சம் பணம் கிடைத்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியன் மீதம் உள்ள ரூ.9 லட்சம் பணத்தைக் கேட்டு இருக்கிறார்.
ஆனால், பணத்தை திருப்பித் தராமல் பாண்டியனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது பாண்டியன் புகார் அளித்தார். இந்த வழக்கை பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி கலையரசனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சுரேஷ்குமாருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி இருந்தது. இந்த ஜாமீனுக்காக ரூ.5.50 லட்சம் பணத்தை சுரேஷ் குமார் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், சுரேஷ் குமார் நீதிமன்றத்திடமும் பணம் செலுத்தவில்லை.
இந்த நிலையில் மே 12 ஆம் தேதியுடன் பணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து விருதுநகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் சுரேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.
No comments:
Post a Comment